Pages

Monday, 26 March 2012

ஆயிரம் பொன் கிடைச்ச மாதிரி...நன்றி நேசம் + யுடான்ஸ்..
நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகளில் என்னுடைய வலி சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது.
ஆயிரம் பொன் கிடைத்த மாதிரி அப்படியொரு சந்தோஷம்.என் மனம்கனிந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு பதிவுலகில் இது இரண்டாவது பரிசு.முதல் பரிசு தமிழ்மணம் 2010 -தில் நடத்திய பதிவர்களுக்கான போட்டியில் பெண் பதிவர்கள் பிரிவில் என்னுடைய எம்மா சிறுகதைக்கு முதல் பதக்க பரிசு கிடைத்தது.

அன்பான நட்புள்ளங்களோடு சந்தோஷங்களைப் பகிர்வதில் ஒரு சந்தோஷம். பகிரும் பொழுது அவை இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

என் எழுத்திற்கும் ஊக்கமளித்து எழுத தூண்டிய பதிவுலக ஜாம்பவான்களுக்கும், என் குடும்பத்தாருக்கும்,அன்பான நட்புள்ளங்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி.

தாங்கள் அனைவரும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவினால் என் எழுத்துப் பயணம் தொடரும்,தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே!

-ஆசியா உமர்.
Saturday, 24 March 2012

ஆதலினால் காதல் செய்வோம் - கவிதைத் தொகுதி


ஆதலினால் காதல் செய்வோம் கவிதைத் தொகுதியை நானும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஒரு காதல் காவியம் என்றே சொல்லலாம். இந்த புத்தகத்தை வாசித்த பின்பு எனக்கு தோன்றியது திரு பொ.ம.ராசமணி அவர்கள் கவியரசன் கண்ணதாசனுக்கு தம்பியோ என்று. அத்தனை கருத்தாழமிக்க கவிதைகள். நெல்லை மக்களின் மனதை தன்னுடைய நகைச்சுவைமிக்க சிறந்த பட்டிமன்ற பேச்சாலும், சொற்பொழிவாலும் கொள்ளை கொண்டவர் இவருக்கு பல்முகம் உண்டு, அற்புதமான கவிஞர், கதை எழுதுபவர், நல்ல ஓவியர், சிறந்த விமர்சகரும் கூட.
முன்னுரை அளித்த பிரபல எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்கள் ஐயாவைப் பற்றி கூறுகையில், இத்தனை கவிதைகளை எழுதி குவித்தும் கூட தன் பெயருக்கு முன்னால் கவிஞர் என்ற அடைமொழியை சேர்க்காத தன்னடக்கமுள்ள சிறந்த அறிவாளி என்கிறார்.கவிஞருடைய மென்மையான வரிகளில் நரம்பு கம்பிகளில் எறும்பு ஊரும் சத்தத்தின் நாதம் மெல்ல ஒலிக்கக் கேட்கலாம் என்கிறார்.
திரு.ராசமணி ஐயா தன்னுடைய அணிந்துரையில் 1948 ல் தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் எழுதிய காட்டுச்சிறுவன் என்ற சிறுகதை சென்னைதம்பி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதையும், அதன் பின்பு 60 ஆண்டுகளுக்கு மேலாக பல கதை கவிதை கட்டுரைகள் எழுதியதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ராசமணி ஐயா அவர்கள், எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவர்களை போலித்தனமில்லாமல் நினைத்ததை நயமாக எழுதக் கூடியவரென்றும்,இப்புத்தகத்தை வெளியிட்ட ஹிலால் பிரஸ் உரிமையாளர் சாதிக் அஹமது அவர்களை தன் குடும்பத்தில் ஒருவராக கருதுவதாயும் பெருமை பட பாராட்டியிருக்கிறார்.
பாளையங்கோட்டை. புனித சவேரியார் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் ராசமணி அய்யாவைப் பற்றி குறிப்பிடும் பொழுது சந்தோஷத்தின் ஊற்றுக்கண் அவரென்றும், ரசிகமணி, கவிமணி, பண்டிதமணி என்ற அடைமொழிகள் அவருக்கு உண்டென்றும், கவிஞர்,கதாசிரியர்,சிறந்த விமர்சகர், மேடைப்பேச்சாளர், பட்டிமன்ற வழக்காடு மன்றங்களில் நடுவராகவும் இருந்தவர் என்றும் புகழ்ந்து கூறுகிறார். இந்த கவிதை தொகுப்புகளை கவிஞர் 1960-70 களில் எழுதியதாக நினைவு கூறுகிறார்.
மிருக உணர்வைத் தெய்வீக மேன்மை நிலைக்கு மாற்றுகின்ற
அரிய சக்தி காதலாகும் ஆதலால் உலகீர் காதலிப்பீர்”.
என்று ராசமணி ஐயா கூறுவதாக தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நீயின்றி வாழும் வாழ்க்கை வெறும்
நீரில்லாக் குளத்துத் தாமரையாம்
நீரில்லாமல் தாமரை இல்லை.தொடர்ந்து உயிரோடு இருக்க தாமரைக்கு நீர்,காதலனுக்கு காதலி என்று கற்பனை பறவையை பறக்க வானைக் காட்டுகிற கவிஞரின் ஆளுமையைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்கிறார் அவர்.
திரு ராசமணி அய்யாவின் புதல்வி திருமதி சித்ரா சாலமன் அவர்கள், கொஞ்சம் வெட்டி பேச்சு என்ற வலைப்பூவில் சுவையாய் நச்சென்ற பதிவுகள் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் என்பதை வலைப்பூக்களில் உலாவரும் நாம் அனைவரும் அறிந்தததே.
அவர், தான் கவிதை எழுதும் வரத்தை தன் அப்பாவிடமிருந்து பெற்றதாக குறிப்பிடுகிறார். அவர் தம் அம்மாவிற்கு அப்பா தந்த காதல் பொக்கிஷமாக இந்த கவிதைத் தொகுதியை குறிப்பிடுகிறார்.

இக்கவிதைத் தொகுதியைப் பற்றி கருத்து சொல்கிற அல்லது விமர்சனம் செய்கிற அளவிற்கு நான் பெரிய படிப்பாளியும் அல்ல,எழுத்தாளியும் அல்ல என்றாலும், இந்த கவிதைத் தொகுதியை படிக்க வேண்டும் என்ற ஆவலில் ஐயாவின் மகளார் சித்ராவை அணுகிய பொழுது தனது சகோதரி இந்திரா மூலம் உடனே என் முகவரிக்கு புத்தகத்தை அனுப்பி வைத்து விட்டார். ராசமணி ஐயாவின் மீது அவருடைய பிள்ளைகள் கொண்ட பாசத்தை எழுத்தால் விவரிக்க முடியாது. அவருடைய மறைவால் ஒரு நல்ல இலக்கியாவாதியை நாம் இழந்து விட்டோமே என்ற ஆதங்கம் மேலோங்குகிறது.

ஆதலினால் காதல் செய்வோம் என்ற இக்கவிதை தொகுப்பில் ராசமணி ஐயா அவர்கள் 66 கவிதைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவர் பல்வேறு பத்திரிக்கைகளுக்கு 1960 முதல் 1973 வரை எழுதி வெளிவந்த கவிதைகளும் இதில் அடங்கும்.
கவிஞர், காதல் ஒன்றுமட்டும் எல்லாக் காலத்தும் நிலைத்திருக்கும்,காதல் கொண்டவர்கள் உலகில் காலத்தை வென்றவர்கள் என்கிறார்.பாரதிக்கு ஒரு கண்ணம்மா,ராசமணி ஐயாவிற்கோ ஒரு தங்கம்மா.
இன்ப துன்பமெல்லாம் தங்கம்மா
இருவரின் பொதுச்சொத்து!
என்றும் உனக்கெனக்கு- எனப்
பிரிக்க உலகில் எதுவுமில்லை” - என்கிறார்.
கண்ணின் இமையாய்க் காத்துவந்த எனது காதலுணர்வைக் கொள்ளையிட்ட வண்ண மொழிசொல் இன்பவத்தான் என்வாழக்கை மரவேர் நீயத்தான் உண்மை இதனைக் கேளத்தான் எனது உயிரும் உலகும் நீயத்தான்
என்பது போன்ற வரிகளால் பெண் மனதை அழகாய் சித்தரித்துள்ளார்.
மனைவியை பெண்ணுக்குள் சிறந்தவள் என்று போற்றுகிறார்..
பேயே கண்டேன்,மானம் விற்பாயோ,காதலிக்க நேரமுண்டு போன்ற தலைப்பில் கவிஞரின் நியாயமான கோபம் வெளிப்படுகிறது.
பூட்டைத் தகர்த்திடுவீர் பழமை போனதென முழங்கிடுவீர்
நாட்டு மருங்கெல்லாம்-விதவை நல்மணம் நடந்திடட்டும்
என்றி விதவைகளுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கிறார்.
ஏழைப்பெண் என்ற தலைப்பில் தன் நெஞ்சக் குமுறலை 13 கவிதைகளாக 4 பக்கக்திற்கு படைத்துள்ளார்.
தன் கவிதைகள் மூலம் உயிர்க்காதல் என்றும் அழிவதில்லை என்று ஓங்கி சொல்கிறார் கவிஞர்.
அன்பு நிறைந்த தொண்டினிலே பெண்மை
அடங்கி கிடந்திடப் பார்த்துவிட்டேன் தாய்மை
என்னும் நிலையினிலே பெண்மை என்றும்
ஏற்றம் அடைவதைக் கண்டுகொண்டேன்.
என்று பெண்மையில் தாய்மையைக் கண்டு பூரிக்கிறார்.
முடிவாக கவிஞரின் அத்தனை கவிதைகளையும் இங்கு பதித்திடவே ஆசை, திரும்ப திரும்ப வாசிக்கத் தூண்டும் வண்ணம் கவி நடை பிரமிப்பை தருகிறது. 75 பக்கங்களைக் கொண்டுள்ள இப்புத்தகத்தை நிச்சயம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
சிரமம் பாராமல் கேட்டவுடன் புத்தகம் அனுப்பி தந்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.ராசமணி ஐயாவின் துணைவியார் ப்ளோரா அம்மாவிற்கு என் அன்பு வணக்கங்கள்.
-ஆசியா உமர்.

Thursday, 22 March 2012

அனைவரும் விரும்பி கேட்கும் இஸ்லாமிய பாடல்

அல்ஹாஜ் இசைமுரசு நாகூர் E.M. ஹனீபா அவர்கள் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பிரபலமான இந்தப் பாடலை எழுதியவர் மர்ஹூம் கிளியனூர் அப்துல் ஸலாம் அவர்கள்.மிகவும் கருத்தாழமிக்க இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.ஒரு பாடல் ஒரு ஹதீஸ் பகுதியில் இன்று இந்த பாடலை கேட்டு ரசித்திருப்பீர்கள்.

இன்றைய ஹதீஸ்:
மிகச் சிறந்தது எது ? என ஓர் ஆடவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட பொழுது,அவர்களுடைய பதில்:
உணவை மற்றவருக்கு நீர் உண்ணக் கொடுப்பது மற்றும் நீர் அறிந்த மற்றும் அறியாதவருக்கு ஸலாமை கூறுவதுமாகும் என்று சொன்னார்களாம்.

--ஆசியா உமர்.

Tuesday, 20 March 2012

2012 உலகம் அழியப் போகுதாமே !!!!????


சூரியச் சூறாவளி பற்றி இப்ப திரும்ப பேச ஆரம்பிச்சிட்டாங்க.
2000 -த்தில் உலகம் அழியப் போகுதுன்னு சொல்லி ஒரு பீதியை கிளப்பி விட்டு அது இல்லைன்னு ஆனது.
இப்ப திரும்ப டிசம்பர் 21 -ம்தேதி 2012 -டில் உலகம் அழிவது நிச்சயம்னு அடிச்சி சொல்றாங்களாம்.உஷாரய்யா உஷாரு.இந்தியா பாதியாக பிளந்து விடுமாம்.மலைப் பகுதியில் வசிப்பவர்கள் பிழைச்சிப்பாங்களாம்.
இதெல்லாம் காற்றுவாக்கில் நம்ம காதில் விழுந்ததுங்க.

கனடாவின் க்யூபெக் மாகாணத்தை பயங்கர சூரியப் புயல் 1989ம் ஆண்டு தாக்கியதாம்.. தொடர்ந்து 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்து விட்டதாம். 2012ல் வரப்போகும் சூரியப் புயல் பூமி முழுவதையும் தாக்கப்போவதாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதி உறுதிப்படுத்தி உள்ளாராம்.

இந்த சூப்பர் சூரிய சூறாவளி, இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப் புலங்களை நம்பி இயங்கும் நம் தகவல் தொழில் நுட்ப உலகம், பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த வகையில், அதிசக்தி சூரியப்புயல், 2012 அல்லது 2013ல் ஏற்படும் என்பது உறுதி என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைக்கிறாங்கப்பா.

மேலும் பிரம்மரிசி மலையில் இருந்து சித்தர் ஒருவர் சொன்ன தகவல்கள் வேறு பலித்து வருகிறதாம். மக்களை அச்சுறுத்தும் பேரழிவு பேரிடியாக வருகிறது என்று சித்தர் சொல்லி வருகிறாராம்.


உலகம் 2012ல் அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் அடித்துக் கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவை அனைத்தும் பொய் என்றும், இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்றும் விறுவிறுப்புடன் இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார்.
உலகம் 2012ல் அழிந்து விடும் என்பதற்கு சான்றாக சில முக்கிய கூறுகள் உள்ளன.
இன்று நாம் பின்பற்றி வரும் தேதி முறைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்தவர்கள் மாயன் நாகரித்தினர். சூரியன் காலாவதியாகும் தேதியையும் இவர்கள் கணித்துள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, அந்த தேதி 2012 தான். எனவே, 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பது இவர்கள் கருத்து.
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் பெரிய மூலக்கூறு இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27 கிலோ மீட்டர் ஆழத்தில், அணுக்களை வைத்து, அவற்றை ஒன்றிணைத்து மீண்டும் வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவற்றை 2012ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு நடந்தால், பூமியே நொறுங்கி விடும்.


வீடியோ பார்ப்பதற்கு முன்னர் மரணபயம் இல்லை என்று மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.

திரு விவிலிய நூலில், உலகம் 2012ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும், சாத்தானுக்கும் கடைசி யுத்தம் நடக்கும் போது, இந்த அழிவு ஏற்படும் என்று பைபிள் கூறுகிறது. இதையே, சீனத்து நூல்களும், சில இந்து புராணங்களும் கூறுகின்றன.
இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதாகவும், அது வெடித்தால் இந்த உலகமே சிதறிவிடும் என்று அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 650000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்குமாம். அந்த ஆண்டு 2012 என்கிறார்கள் அவர்கள்.
இவையனைத்தும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.
மேற்கூறிய அனைத்தும் பொய் என்று இந்திய விஞ்ஞானி அய்யம் பெருமாள் அடித்துக் கூறுகிறார்.
விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப ஆராய்ச்சியின் படி, இன்னும் 450 ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார் அய்யம் பெருமாள்.
இன்னும் ஒரு சிலர், 2020ம் ஆண்டு பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் என்கிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், அக்னி ஏவுகணை மூலமாக அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுக் கூடத்தில் உள்ளது. எனவெ, எக்காரணத்தைக் கொண்டும் பூமி அழியாது என்கிறார் இவர்.
சூரிய சக்தி மூலமாக மின்சாரம் பெறும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. அதேபோல், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டமும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலக மக்களின் தேவைக்கு மின்சாரமும், குடிநீரும் உள்ளது. எதிர்காலத்தில் நாம் அதற்கு பயப்பட தேவையில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் அய்யம்பெருமாள்.
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி செய்யலாம். அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் சொல்கின்றனர்.

வீடியோ பார்க்கும் பொழுது எரர் வந்தால் யூ ட்யூபை கிளிக் செய்து பார்க்கவும்.
தகவல் திரட்ட உதவி - கூகிள்.
-ஆசியா உமர்.

Friday, 16 March 2012

மயிலோடு உறவாடு..

காணக் கண்கொள்ளாக் காட்சி.
இத்தனை வருடங்கள் துபாயில் இருந்தும் இந்த மயில்கள் ஆடும் ஷபீல் அரண்மனை தெரியாமல் போனது தான் ஆச்சரியம்.

அத்தனைப் பெண்களும் கண்டு மயங்கிட
ஆண் மயிலைத் தான் ஆண்டவன்
இத்தனை அழகாக படைத்திருக்கிறான்
மயிலின் இந்த தோகைக்கு முன்னால்
பெண்கள் எத்தனை அழகான முந்தானை வைத்து
சேலை கட்டினாலும் தோற்றே போவார்கள்.

வரவேற்ற அழகான மயில்.

குழந்தைகளோடும் கொஞ்சி விளையாடும் மயிலின் மாண்பு.

ஆண் மயிலிற்கு பின்னால் பாந்தமாய் பெண் மயில்கள்.ஓட்டம் பழகும் நம் மக்களைக் கண்டு சற்றும் அசராமல் நிற்பதை பாருங்கள்.

என்னைப் பார் என் அழகைப்பார்


இந்த இரண்டு நிமிட வீடீயோ பகிர்வை நிச்சயம் பாருங்க.மயில் கூட்டமாக பார்க்கும் பொழுது அப்படியொரு பிரமிப்பு மனதிற்கு.அதனோடு கூட பறவைக் கூட்டமும் கொள்ளை அழகு.

எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் ஐந்துப்பூ பீடி உரிமையாளர் ஜனாப்.ஹமீது அவர்கள் ஆசையாக ஒரு மயிலை வளர்த்து வந்தார்களாம்.அதனை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுமாம்.அவர் தீடீரென்று காலமாகி விட அவர் அடக்க ஸ்தலத்தின் அருகிலேயே இருந்து ஒன்றுமே சாப்பிடாமல் உயிரை விட்டதாம் அந்த மயில்.எங்கள் ஊரில் அனைவரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

குளிரில் வாடிய மயிலிற்கு போர்வை போர்த்திய கடைஏழு வள்ளல்களில் ஒருவரான பேகன் வரலாறும் நாம் நினைவில் கொள்வோம்.

பின் குறிப்பு:
இது வரை பார்க்கவில்லை என்றால் துபாயில் இருப்பவரகள் விடுமுறை நாட்களில் ஷபீல் பேலஸ் ஒரு முறை சென்று வாங்க.வெளிநாட்டு பயணிகள் கூட்டம் எப்பொழுதும் அலை மோதும்.காலை வேளையில் நாங்கள் சென்ற சமயம் பேலஸே அமைதியாக இருந்தது.மயில்கள் தோகை விரித்து ஆடியது.உணவு போடும் பொழுது கூட்டமாக பறந்து வரும் அழகும் பார்க்க வேண்டிய ஒன்று.வீடியோவில் பார்த்து இருப்பீங்க.நாங்கள் அடிக்கடி போக விரும்பும் இடம் இது.

--ஆசியா உமர்.

Thursday, 15 March 2012

ஒரு பாடல் ஒரு ஹதீஸ்

தாங்கள் அனைவரும் கேட்டு மகிழும் வண்ணம் மணித்துளியில் வாரம் ஒரு கருத்தாழமிக்க இஸ்லாமிய பாடலும் படிப்பினையூட்டும் வாழ்க்கை பாடமும் பகிரலாம் என்றுள்ளேன்.நான் அல்ஹாஜ்.இசைமுரசு.நாகூர் E.M. ஹனீபா அவர்களின் தீவிர ரசிகை.பொதுவாக நாங்கள் குடும்பத்துடன் எங்கேயும் நீண்ட தூரம் பயணம் போகும் பொழுது காரில் நாகூர் ஹனீபா அவர்களின் பாடல்களை கேட்பதுண்டு.எங்கள் இருவருக்கும் ஒரே ரசனை.என் கணவரிடம் ஐநூற்றுக்கும் மேலான இஸ்லாமிய பாடல் கலெக்‌ஷன் இருக்கு.ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்து எனலாம்.இந்த சீரிய சிறிய பாடலை கேட்டு பாருங்க.இன்னும் ஏராளமான எண்ணற்ற தத்துவ பாடல்கள் இருக்கு.இனி இந்த பகுதி தொடர்ந்து வரும்.

அடுத்து ஹதீஸ்; நான் காதால் கேட்டது.

ஷைத்தானின் முடிச்சு:
நாம் ஒவ்வொருவரும் தூங்கும் பொழுதும் ஷைத்தான் நம் தலைமாட்டில் மூன்று முடிச்சுகளை வைத்து விடுகிறானாம்.
அந்த முடிச்சை நாம் அவிழ்த்து விட்டால் அன்றைய நாள் நமக்கு நிச்சயமாக நல்ல நாளாக அமையும்.
எப்படி அவிழ்ப்பது?
1.நாம் தூங்கி அதிகாலை படுக்கையில் இருந்து சோம்பலில்லாமல் எழுந்தால் முதல் முடிச்சு அவிழ்ந்து விடும்.
2.இரண்டாவது முடிச்சு ஒளு செய்து விட்டால் (கை முகம் கால் அலம்புதல்) அதுவும் அவிழ்ந்து விடும்.
3. ஒளூ செய்து விட்டு தொழுது விட்டால் (இறைவனை வழிபடல்) மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்து விடுமாம்.

சைத்தானின் பிடியில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இது முதல் வழி.இது மாதிரி சின்ன சின்ன ஹதீஸ்கள் மூலம் வாழ்க்கை பாடங்களை எளிமையாக கற்றுக் கொள்ளலாம்.

(ஹதீஸ்- இறைத்தூதர் மொழிந்தது,வாழ்ந்து காட்டியது)

-ஆசியா உமர்.

பின் குறிப்பு:
தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்தால் எனக்கும் ஊக்கமாக இருக்கும்.Wednesday, 14 March 2012

சரி தலைப்பிற்கு வருவோம்...


வலைப்பூவிற்கு என்ன பெயர் வைக்கலாம்னு நிறைய யோசித்து மணித்துளின்னு டக்குன்னு மனதில் பிடிபட்டது.ஒரே பிடியாய் பிடிச்சிட்டேன்.
நேரம் எவ்வளவு முக்கியம்னு எனக்கு நானே உணர்த்தவே இந்த பெயர்.

எவ்வளவு தான் முயன்றாலும் நேரத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அது விழலுக்கு இறைத்த நீர் தான்.

என் குட்டி செல்லங்களோட துபாய் வந்த பொழுது கணினி பற்றி தெரியும் அவ்வளவு தான் கையாண்டதில்லை.என் கணவரும் எனக்காக ஹாட்மெயிலில் ஆசையாக ஒரு ஐடி கிரியேட் செய்து கொடுத்தார்.அவர் மெயில் அனுப்ப நான் திறந்து பார்ப்பேன்.ஆனால் அந்த மவுஸ் தான் என் கைக்குள் நிற்கவில்லை.

ஒண்ணுமே தெரியலை,சரி என்று மவுஸ் பிடிக்கத் தெரியாத நான் துபாய் டாக்ஸி ஸ்டாண்ட் பக்கமிருந்த ஒரு இன்ஸ்ட்டியூட்டில் கணினி பேசிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள சேர்ந்தேன். நிஜமாகவே துபாய் டாக்ஸி ஸ்டாண்ட் பக்கம் தான்,பார்த்திபன் அட்ரஸ் சொல்ற மாதிரி இருக்கா? 24 மணி நேரம், தினமும் ஒரு மணி நேரம் 24 நாட்கள் போய் வந்தேன்.word excel எல்லாம் படித்தேன்.முடித்து வந்து ஏதாவது பயிற்சி செய்யவேண்டுமே,எதுவும் செய்யவில்லை, பிள்ளைகளை பார்ப்பதே சரியாக இருந்தது.வெறும் மெயில் பார்ப்பது சாட்டிங் மட்டும் தான்.

ஒரு சில வருடங்கள் கழித்து அபுதாபியில் குடிபெயர்ந்தோம்.திரும்ப மறுமுறை கணினி பற்றி தெரிந்து கொள்ள அங்கேயும் ஒரு இன்ஸ்ட்டியுட்டில் சேர்ந்தேன். சான்றிதழ் எல்லாம் தந்தாங்க.அங்கே எனக்கு அறிமுகமானது சின்னஞ் சிறிய உலகம் அத்தோடு சரி.என் கணவரும்.இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும், நீயே புரிஞ்சுக்கோன்னு சொல்லி விட்டார்.

அப்புறம் பொழுது போகாமல் நானே முயற்சி செய்து அவருடைய உதவியோடு அருகில் இருந்த பள்ளியில் ப்ரைமரி செக்‌ஷனில் இரண்டு வருடம் ஆசிரியையாக வேலை பார்த்தேன், உடல் நலக்குறைவு மற்றும் பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த என்று ஆசிரியப் பணியில் இருந்து தற்கால ஓய்வு எடுத்தேன்.அதன் பின் தான் வலையுலகம் அறிமுகமானது. தத்தி தவறி கீழே விழுந்து எழுந்து வலைப்பூ ஆரம்பிக்கிற அளவிற்கு வந்தாச்சு.கூகிள் தருமத்தில் ஓடிக்கிட்டு இருக்கு. ஆரம்பத்தில் தோசையே சுடத் தெரியாத நான் சமையல் ப்ளாக் ஆரம்பிச்சது தனிக் கதை.

விளையாட்டாய் வலைப்பூக்கள் ஆரம்பித்து இத்தனை அன்பான நட்புள்ளங்களை பெற்று தந்ததில் மிக்க மகிழ்ச்சி தான்.

-ஆசியா உமர்.அன்பு நட்புள்ளங்களுக்கு...


இந்த புத்தம் புது வலைப்பூவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.என்னுடைய
சமைத்து அசத்தலாம் வலைப்பூவில் சமையலுடன் கதை,கவிதை,கண்டது கேட்டது,பார்த்து ரசித்தது என்று எல்லாவற்றையும் பகிர்ந்து வந்தேன்.நீண்ட நாள் ஆசை, சமையல் தவிர மற்றவற்றை பகிர ஒரு வலைப்பூ தொடங்க வேண்டும் என்று, தலைப்பும் எப்பொழுதோ முடிவான ஒன்று.ஆனால் இதோ அதோ என்று ஒரு வழியாக இப்ப தான் நேரம் கூடியிருக்கு.

உங்கள் ஆதரவுடன் இங்கேயும் என் பகிர்வுகள் தொடரும்..

-ஆசியா உமர்.