Pages

Wednesday, 18 April 2012

வெறும் கையில் முழம் போட முடியும்...


இது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன் வலைதளத்தில் பகிர்ந்தது. நான் வாசித்து நேசித்தது.இதனை உங்களுடன் பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இந்த விபரத்தை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்த எஸ்.ரா. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இறுதியில் பகிர்ந்துள்ள பங்கர் ராய் அவர்களின் உரை பற்றிய காணொளியைக் காண மறவாதீர்கள்.இனி தொடர்ந்து வாசியுங்கள்.

வெறும் கால் வாசிகள்..

மின்தட்டுபாடு தமிழகத்தை இருட்டிற்குள் தள்ளியுள்ள சூழலில் ராஜஸ்தானில் ஒரு கிராமம் முழுமையாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக் கொள்கிறது, இதற்கான உபகரணங்களைத் தயாரிப்பவர்களும், பயன்படுத்துவர்களும் கிராமத்துப் பெண்கள், அவர்களில் எவரும் முறையான கல்வியறிவு பெற்றவர்களில்லை, ஆனால் அவர்களால் எளிதாக சோலார் உபகரணங்களைத் தயாரிக்க முடிகிறது, கூடுதலாக இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் ஆப்ரிக்காவில் உள்ள கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்கள் என்ற தகவலை ஒரு மின்னஞ்சல் வழியாக அறிந்த போது வியப்பாக இருந்தது,

எப்படி இது சாத்தியமானது என்பதை அறிந்து கொள்ள இணையத்தில் தேடி வாசித்த போது தான் திலோனாவில் உள்ள வெறும்கால் கல்லூரி (Barefoot College) பற்றி அறிந்து கொண்டேன்

ராஜஸ்தானில் உள்ள மிகவும் பின்தங்கிய பகுதி திலோனா, இங்கே குடிநீர், சாலை, மருத்துவம், கல்வி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் பல காலமாக போராடியிருக்கிறார்கள்,

1972ல் டெல்லியைச் சேர்ந்த சஞ்சித் பங்கர் ராய் என்ற கல்வியாளர் கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் மரபான அறிவும், தனித்திறனும் தொழில்நுட்பங்களும் அடையாளம் காணப்பட்டு வாழ்வோடு இணைந்த கற்றுத்தருதல் அவசியம் என்று உணர்ந்திருக்கிறார், அதன் விளைவாக உருவாக்கபட்டதே இந்த வெறும்கால் கல்லூரி, எட்டு ஏக்கரில் இந்த கல்வி நிலையம் அமைந்துள்ளது, இது ஒரு ஒருங்கிணைந்த கல்விமுறை, இரவுப்பள்ளி, தொழில்பள்ளி, உயர்கல்வி என்று மூன்று தளங்களில் செயல்படுகிறது

இங்கே அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கல்வியே முதன்மையாக கற்பிக்கபடுகிறது,

வெறும்கால் மருத்துவர்கள் என்று கிராமப்புற மருத்துவர்களை அரசே அங்கீகரித்து அவர்களைப் படித்த மருத்துவர்களுடன் இணைந்து சேவை செய்ய வழி அமைத்து தந்தது மக்கள் சீனா, அதன் விளைவாக ஆரம்ப சுகாதாரம், மற்றும் கிராமப்புற மருத்துவ சிகிட்சைகள் மேம்பாடு அடைந்தன, அதே பாணியில் கிராமவாசிகளைக் கொண்டே அடிப்படைக் கல்வி கற்றுதரும் முயற்சியே வெறும்கால் கல்வி இயக்கம், இதை பங்கர் ராய் ராஜஸ்தானில் அறிமுகப்படுத்திய போது பலத்த எதிர்ப்பு இருந்தது, இன்று அது அங்கீகரிக்கபட்ட கல்விமுறையாக பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

படித்தவர்கள் தங்களது திறமையை விட சான்றிதழைத் தான் முக்கியமானதாக நினைக்கிறார்கள், படிக்காத கிராமவாசிகளோ எந்தச் சான்றிதழையும் வேண்டுவதில்லை, அவர்கள் சிறப்பாக, தனித்திறனுடன் உழைக்ககூடியவர் எவராக இருந்தாலும் அவருக்கு மரியாதை தருகிறார்கள், இணைந்து வேலை செய்ய முன்வருகிறார்கள், அந்த முறையைத் தான் இந்தக் கல்வி இயக்கம் முன்னெடுக்கிறது,

இக்கல்லூரியில் படித்த எவருக்கும் சான்றிதழ் வழங்கபடுவதில்லை, எம்டெக், எம்பிஏ படித்த எவருக்கும் இக்கல்லூரியில் வேலை கிடையாது, வருசத்திற்கு பல ஆயிரம் பக்கங்கள் வெளியாகும் உலகவங்கியின் நிதிநிலை அறிக்கைகளை காகிதக்கூழ் ஆக்கி அதிலிருந்து பல்வேறு மாற்றுபொருட்களை செய்து கொள்வதாக பங்கர் ராய் கேலியாகக் கூறுகிறார்,

இங்கே அன்றாட வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக பல்வேறு விவசாய முறைகள், அடிகுழாய் சரி செய்வது, நெசவு நெய்வது, குழந்தை பராமரிப்பு, வரவு செலவு கணக்கு எழுதுவது, பல்வைத்தியம், கட்டுமான வேலைகள், தச்சு வேலை, கிணறு தோண்டுதல், குடிநீரை சுத்தப்படுத்தும் முறை, ஆடுமாடுகளுக்கான வைத்தியம் செய்வது, மழை நீரை சேமிப்பது, கலைப்பொருட்கள் தயாரிப்பது, போன்றவற்றை எளிய முறையில் கற்றுதருகிறார்கள்.

இந்த கல்லூரியில், ஆசிரியர்களாக பணியாற்றுகின்றவர்கள் அத்தனை பேரும் கிராமவாசிகள், குறிப்பாக தனித்திறன் படைத்த தச்சர்கள், மேஸ்திரிகள், நெசவாளர்கள், நாட்டுபுற மருத்துவர்கள், விவசாயிகள், மற்றும் நுண்கலை கலைஞர்கள் தங்கள் அனுபவத்தைப் பாடமாக நடத்துகிறார்கள், வகுப்பில் சேருவதற்கு வயது வரம்பு கிடையாது,

பள்ளி படிப்பைத் தொடர முடியாத சிறுவர்களுக்காகவும், வேலைக்கு செல்லும் பதின்வயது சிறார்களுக்காகவும் இரவுப் பள்ளியும் நடத்துகிறார்கள், இந்த பள்ளியும் முறைசாராதது,

இங்கே மாணவர்கள் ஒரு மாதிரி பாராளுமன்றத்தை நடத்துகிறார்கள், அவர்களுக்காகவே ஒரு பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார், துறை வாரியாக மந்திரிகள் நியமிக்கபடுகிறார்கள், அவர்கள் தான் இந்தக் கல்வி நிறுவனத்தை நிர்வாகம் செய்கிறார்கள்,

இதில் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட சிறுமி ஆடுமேய்கின்றவள், பகலில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்லும் இவள், இரவில் பள்ளியின் பிரதமர், இவளது ஆலோசனைப் படியே பள்ளி நடைபெறுகிறது, சிறந்த முன்மாதிரி பள்ளிக்கான பன்னாட்டு விருது பெறுவதற்காக இந்தச் சிறுமி ஸ்வீடன் சென்றிருந்தாள்,

விருதைப் பாராட்டும் விதமாக நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட ஸ்வீடனின் ராணி, அந்த சிறுமியின் தைரியத்தை கண்டு வியந்து பனிரெண்டுவயது சிறுமிக்குள் எப்படி இவ்வளவு ஆற்றல் வந்தது என்று பங்கர் ராயிடம் கேட்டிருக்கிறார்,

அதற்கு அந்தச் சிறுமி, தான் ஒன்றும் வெறும் ஆள் இல்லை, தானும் ஒரு பிரதமர் தான் என்று ராணியிடம் எடுத்துச் சொல்லும்படியாக சொல்லியிருக்கிறாள், அந்த நம்பிக்கையும் உறுதியும் தான் பள்ளியை உலக அளவில் புகழ்பெறச் செய்திருக்கிறது என்கிறார் பங்கர் ராய்

கிராமவாசிகள் குடிநீர் பஞ்சத்தைப் போக்கிக் கொள்ள வீணாகும் மழைநீரை ஒரு பெரிய கிணற்றில் சேகரம் செய்து அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், ஊரில் உள்ள பெரும்பான்மை பெண்களுக்கு சோலார் குக்கர் செய்வதும், சோலார் விளக்குகள் செய்வதும் அத்துபடியாக இருக்கிறது, அது போலவே கட்டுமானப் பணிகளிலும் இந்த கிராமவாசிகள் பல புதுமைகளை செய்திருக்கிறார்கள்,

சமையலுக்கும், விளக்கு எரிவதற்கும் பள்ளியில் உள்ள கணிப்பொறி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் இயங்குவதற்கும் சூரிய சக்தியே பயன்படுத்தபடுகிறது, இந்தியாவில் முழுமையாக சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி நடைபெறும் கல்வி நிறுவனம் இது ஒன்றே,

சூரிய சக்தியை சேமிப்பதிலும், அதன் பயன்பாட்டினை உலகறியச் செய்வதிலும் முன்னோடியாக செயல்படுவதால் இக்கல்லூரி சிறப்பு விருது பெற்றிருக்கிறது

இக்கல்லூரியில் வீணாகப் தூக்கி எறியப்படுகின்ற காகிதங்களைக் கொண்டு புதிய வீட்டுஉபயோகப் பொருட்களை செய்வது, குறைந்த செலவில் வீடுகள் கட்டுவது, அறிவியலை மக்களிடையே பரப்புவதற்காக காகிதப்பொம்மைகள் செய்து பொம்மலாட்டம் நடத்துவது என கிராமவாசிகள் பல்துறைகள் சார்ந்து புதிய முனைப்புடன் செயல்படுகிறார்கள்,

காந்தியவாதியான பங்கர் ராய் கிராமப்புற கல்வியில் மாற்றம் நடைபெறாமல் இந்தியா வளர்ச்சியடைய முடியாது என்று தீவிரமாக நம்புகின்றவர், ஆகவே ராஜஸ்தானில் துவங்கிய இந்த வெறும்கால் கல்விமுறையை லடாக்கின் கிராமப்புறங்களுக்கு அறிமுகம் செய்து வெற்றி பெற்றதோடு, 13 நாடுகளில் தங்களது சூரிய சக்தியை சேமிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்,

திலோனாவில் கிராமவாசிகள் அமைத்த கட்டிடத்திற்கு Aga Khan Award for Architecture விருது கிடைத்திருக்கிறது. கல்வி முற்றிலும் வணிகமயமாகி வரும் சூழலில் இது போன்ற மாற்றுமுயற்சிகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன

knowledge, skills and wisdom found in villages should be used for its development before getting skills from outside. என்பதே இக்கல்வி இயக்கத்தின் அடிப்படை

தான் காந்தியச் சிந்தனையை முன்னெடுப்பதாகச் சொல்லும் பங்கர் ராய், காந்தியின் மேற்கோள் ஒன்றினை சுட்டிக்காட்டுகிறார்

Gandhi once said that there is a difference between Literacy and Education. The Barefoot College believes that ‘literacy’ is what one acquires in school, but ‘education’ is what one gains from family, traditions, culture, environment and personal experiences. Both are important for individual growth. At the College, everyone is considered an education resource, the teacher as well as the student and the literate as well as illiterate. Therefore, the Barefoot College is a radical departure from the traditional concept of a ‘college’.

பங்கர் ராயின் உரை இந்த இணைப்பில் உள்ளது

http://www.ted.com/talks/bunker_roy.html

•••


Wednesday, 11 April 2012

அரைகுறை...


கொஞ்ச நாளாய் எல்லாமே அரைகுறையாய் இருப்பது போல் ஒரு உணர்வு. எதையுமே நிறைவாய் செய்ய முடியலை.இப்படி புலம்புபவர்களுக்கு தான் இந்த பகிர்வு.

ஒரு நேரத்தில் ஒன்று என்று முடிவெடுத்து செய்து முடிக்காதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளில் ஈடுபட்டு சரிவரச் செய்யாமல் எல்லாம் தோல்வியாக முடிந்து, பின்னர் எதைச் செய்தாலும் தோல்வியாக முடிகிறதே என்று புலம்பி, தன்னைத் தானே தாழ்வுபடுத்தி கொள்வதில் பிரயோஜனமில்லை.

அலையும் மனம் இருந்தால் எதிலும் சாதிக்க முடியாது.

முழுக்கவனம் செலுத்தி ஒரு காரியத்தில் இறங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இது என் அனுபவத்தில் உணர்ந்தது. எங்க ஊர் பேச்சுவாக்கில் இப்படி பட்டவர்களை அரை வேக்காடு என்போம். சில நேரம் நான் ஒரு வேலையும் ஒழுங்காக செய்யாமல் ஒரு நாளை வீண் செய்து விடுவேன்.

இந்த மாதிரி வீணடிக்காமல் இருக்க என்ன செய்யலாம், திட்டமிடனும் என்ன தான் திட்டமிட்டாலும் ஒன்றும் வேலைக்கு ஆகலையா? திட்டத்தை எழுதி எடுங்கள்,ஒவ்வொரு வேலையும் முடியும் பொழுதும் டிக் செய்து விடுங்கள்.

நான் பொழுதே போகலை, சுத்த போர் என்று புலம்பிய பொழுது என் கணவர் எனக்கு என் நேரத்தை பிரித்து அட்டவணையிட்டு சமையலறை கதவில் ஒட்டினார்.அதிகாலை தொழுகை ஆரம்பித்து இரவு வரை என் கடமைகள் அட்டவணையில் இருந்தது, அதன் படி செய்ய ஆரம்பித்தால் ஒரு நாளிற்கு 24 மணி நேரம் போதாது.நாம் தான் எதற்கும் அசராதவங்களாச்சே!..ஹி.ஹி..

காலையில் இருந்து இரவு வரை திட்டமிட்டு நேரத்தை செலவு செய்து பாருங்களேன், நிச்சயம் அந்த நாள் இனிய நாளாக அமையும்.

உதாரணமாக காலையில் 5-7, 8-10, 11-1 வரை என்று திட்டமிட வேண்டும்.காலையில் இதை செய்ய வேண்டும், மாலையில் இதை செய்ய வேண்டும், இன்றைக்குள் இதை முடிக்க வேண்டும் என்று மனதில் நிறுத்தி செயல்களை செய்ய வேண்டும்.கவனம் சிதறும் பொழுதெல்லாம் செய்ய நினைத்த காரியத்தை செய்து முடித்தோமா என்று சுயசோதனை செய்து கொள்ளலாம்.

எதிலும் முழுமை என்பது இல்லை, முழுமைத்தனமை எனபதும் முடியாத காரியம், முடிந்தவரை செம்மையாக செய்ய வேண்டும் என்று நினைத்தாலே முழுதிருப்தி கிடைக்கும்.

எந்த வேலையை செய்ய எத்தனிக்கும் பொழுதும் அதில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது,தொடர்ந்து ஒரே வேலையில் ஈடுபடுவது சோர்வைத் தரும்.வேலை செய்யும் பொழுது வேலையில் கவனம், சாப்பிடும் பொழுது அதில் கவனம், தூங்கும் வேளையில் தூங்குவதில் கவனம் என்று ஒன்றன் பின் ஒன்றாக செய்ய வேண்டும். இப்படி திட்டமிட்டால் நிச்சயம் அரைகுறை என்ற பெயரில் இருந்து தப்பித்த சந்தோஷம் கிடைக்கும்.

திட்டமிட்டு செயல்களை செய்து முடிக்கும் பொழுது கிடைக்கும் மன திருப்தி தான் வெற்றி,முயற்சி செய்து பாருங்க நிச்சயம் முடியும்.

-ஆசியா உமர்.

Tuesday, 10 April 2012

நல்ல மனைவியே சிறந்த செல்வம்...


இன்றைய பாடல் “ பாத்திமா வாழந்த முறை உனக்கு தெரியுமா “ - பாடலை கேட்டு மகிழுங்கள்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Dul9YWOWl5g - இந்த லின்க்கில் போயும் கேட்கலாம்.

இன்றைய ஹதீஸ்;-
எல்லாம் வல்ல இறைவனின் திருநாமத்தால் ...
''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911)

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)

''உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.'' (அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: அஹ்மத் 19160)

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை(முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு
அன்ஹு, நூல்: முஸ்லிம் 2915)

''பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2913)

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5204)

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும்(கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162) '

'இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)

''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:அபூதாவூத் 1442)

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு,நூல்: புகாரீ 5200) '


--ஆசியா உமர்.

Tuesday, 3 April 2012

ஃபுஜெய்ரா மலைப் பயணம் / Fujairah Mountain Driveஃபுஜெய்ரா நான்கு வருடங்களுக்கு முன்பு சென்று வந்தது.மகளுக்கு விடுமுறை எங்கேயாவது நீண்ட தூரம் ட்ரைவ் போகலாம் எனும் பொழுது நினைவிற்கு வந்தது இந்த த்ரில்லான மலைப் பயணம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இந்த ஃபுஜெய்ரா பரப்பளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஃபுஜெய்ரா மட்டும் கிழக்கு கடற்கரை ஒமான் வளைகுடாவில் உள்ளது. மற்ற ஆறு அமீரகங்கள் மேற்கில் பாரசீக வளைகுடாப் பகுதியில் உள்ளது. ஃபுஜெய்ரா மலைப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மற்ற அமீரகங்கள் பாலைவனப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. வருடம் ஒரு பயிர் செய்யும் அளவு இங்கு மழை கூட பெய்து வருகிறது.இந்த பயணத்தை வீடியோவில் பாருங்க.மூன்று நிமிடம் தான்.

நாங்கள் கிளம்பிய அன்று அல் ஐனில் மணல் புயல் (Sand Storm)என்ற வானிலை அறிக்கை.தெரிந்தே தான் கிளம்பினோம்.ஷார்ஜா அடைந்த பின்பு மணல் புயல் நின்று ரோடு தெளிவாக தெரிந்தது.ஹத்தா - முனை என்ற இடம் வரை மலைப் பாதை.(Hatta Round about - Munai - Mountain Drive)போகும் பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜாலியாக இருந்தது.ஒரு கிலோ மீட்டர் மலையைக் குடைந்து அமைத்த குகைப் பாதையில்(Tunnel) செல்வதற்கு த்ரில்லாக இருந்தது.

.ஃபுஜைராவில் இருந்து குர்ஃபக்கான் (Kor Fakkan) கடற்கரை சென்று இளைப்பாறிவிட்டு திரும்பலாம் என்பது தான் திட்டம்.வீட்டில் இருந்து கிளம்பி 3 மணி நேர பயணம்.மதியம் மூன்று மணிக்கு போய் அங்கு சேர்ந்தோம்.

இதோ உங்கள் பார்வைக்காக மலைப் பாதை.

மலை ரோட்டில் ஆட்டு மந்தைகள், கழுதைகளையும் கண்டோம்.ஊரில் கூட அதிகம் காணாததை கண்ட பொழுது உடனே படம் எடுத்தாச்சு.

இது குகைப் பாதை.வீடியோவில் பார்த்து இருப்பீர்கள்.

குர்ஃபக்கான் பீச் வந்து சேர்ந்தோம்.படத்தில் காணும் மரங்கள் முழுவதும் கீச் கீச் என்று சிட்டுக் குருவிகள் சத்தம்.சரி நாமும் ஒரு குருவியையாவது படம் எடுத்து போடலாம் என்றால் சிட்டாக பறந்து விடுகின்றன.
நல்ல பசி.நான் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து சென்ற சிக்கன் பிரியாணி,புதினாத்துவையல், சிக்கன் சீக் கபாப்,அ.கோ.மு
பசிக்கு தேவாமிர்தமாக இருந்தது.

சாப்பிட்ட பின் ஊஞ்சல்,கடல் நீரில் கால் நனைத்து விட்டு எடுத்து சென்ற ஜிஞ்சர் மிண்ட் ப்ளாக் டீ குடித்து விட்டு தெம்பாக போட்டிங் செல்ல கிளம்பினோம்.அரைமணி நேர படகு சவாரி .குளு குளு இதமான காற்று சூப்பராக இருந்தது.மனசே ரிலாக்ஸ் என்று சொன்ன மாதிரி அப்படியொரு அமைதி.

படகில் சென்று துறைமுகத்தை அருகில் காண முடிந்தது.

ஒருவர் ஜாலியாக பாரசூட்டில் வட்டமடித்து கொண்டிருந்தார்.

படகு பயணத்தின் போது சிறிது தொலைவில் மலையுடன் இருந்த பகுதியை ஐலேன்ட் என்று அதனையும் வட்டமடித்து காட்டினார் படகோட்டி.


திரும்ப மனமே இல்லாமல் திரும்பினோம்.

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு அங்கு சுடச் சுட சுட்டு தந்த சிக்கன் டிக்கா,மட்டன் டிக்கா வாங்கி சாப்பிட்டு விட்டு கிளம்பியாச்சு.

ஆஹா! இதுவரை பயணம் சுகமாகத் தான் இருந்தது.திரும்பி குகை வழியாக வந்து மலைப் பாதை வந்தது.மலைப் பாதையில் 15 கிலோ மீட்டருக்கு விளக்கு கம்பம் இல்லை. இருட்டில் காரில் அதிக வெளிச்சத்தை போட்டு ஓட்டி வந்தோம். யாரும் இல்லாமல் மயான அமைதி.கும்மிருட்டு.தூரத்திற்கு ஒரிரு கார் சர் சர்ரென்று போய் வந்தது.எதிரில் கார் வரும் பொழுது லோ பீமில் லைட் போட்டு கார் எங்களை கடந்த பின்பு ஹைபீம் லைட் போட்டு மெதுவாக என் கணவர் காரை ஓட்டி வர நாங்கள் பயத்துடன் அமர்ந்திருந்தோம்.

ஒரு வழியாக ஹத்தா ரவுண்டபௌட் வந்தடைதோம்.வெளிச்சமாக கீழே காணும் முக்கோண கோட்டை மாதிரி கட்டடம் பார்த்தவுடன் தான் எனக்கு மூச்சே வந்தது.
சரி இனி சர்ரென்று அல் ஐன் வந்தடையலாம் என்ற நிம்மதி பெருமூச்சோடு செக் போஸ்ட் வந்தால் அங்கே தான் எங்களுக்கு ஆப்பு காத்திருந்தது.நாங்கள் வரும் பொழுதும் இந்த செக் போஸ்ட் வழியாத்தான் வந்தோம்.அப்ப அங்கு நின்றிருந்த செக்யூரிட்டி எதுவும் சொல்லாமல் எங்கள் வண்டியை நிறுத்தி பார்த்து விட்டு அனுப்பி விட்டார்.ஒரு 20 கிலோமீட்டருக்கு ஒமானைக் கடக்க வேண்டியிருந்ததால் இந்த செக்கிங்.நாங்கள் முன்பொரு சமயம் வந்த பொழுது இந்த செக்கிங் இல்லை.அதனால் அதை பற்றி பெரிதாக எதுவும் யோசிக்க வில்லை.

எங்கள் வண்டியை நிறுத்த சொன்னார்கள்.என் கணவர் ஐடியை பரிசோதித்தார்கள்.விட்டுவிடுவார்கள் என்று நினைத்தோம்.எங்க கிட்ட பாஸ்போர்ட் அல்லது எங்களோட எமிரேட் ஐடி கேட்டார்கள்,அப்ப தான் எங்களுக்கு எங்களோட ஐடி கார்டை வீட்டில் வைத்து விட்டு வந்தது நினைவிற்கு வந்தது.நீங்க இந்த வழியாக போக முடியாது.வண்டியை ஓரங்கட்டுங்கன்னு என் கணவரிடம் அவர்கள் சொல்ல சும்மாவே தெனாலி கமல் அளவிற்கு பயப்படும் நான் என்ன ஆகியிருப்பேன்னு யோசிங்க.பக்குன்னு இருந்துச்சு.என்னுடன் இருப்பது என் மனைவியும்,மகளும் என்று சொன்னால் நம்பினால் தானே..ஐடியைக் காட்டி விட்டு போ என்று சொல்ல என்ன செய்ய என்று நின்று கொண்டிருந்தோம்.என் கணவர் அந்த இரவு வேளையில் எங்களை தனியாக விட்டு விட்டு சென்று வீட்டில் போய் ஐடி எடுத்து வரவேண்டும்.வேற வழி?

தீடீரென்று அந்த செக்யூரிட்டிமீண்டும் எங்களிடம் வந்து, திரும்பி போய் ஷார்ஜா ரோடு வழியாக போங்க என்று சொல்லவே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று வண்டியை திருப்பி விட்டு வந்தோம்.

திரும்பவும் அந்த இருட்டு மலைப் பகுதியில் பயணம்.இப்ப அந்த திரில்லை மிகவும் ரசித்து பயணத்தை தொடர்ந்தோம்.செக் போஸ்டில் ஏற்பட்ட அதிர்ச்சியோ என்னவோ எப்பொழுது எங்கு சென்றாலும் திரும்பி வரும் பொழுது தூங்கி வ்ழியும் நான் முழுப் பயணமும் விழித்தே வீடு வந்து சேர்ந்தேன்.

ஆகவே ஃபுஜைரா போகும் பொழுது ஹத்தா வழியாக சென்றால் மறக்காமல் எல்லாருக்கும் எமிரேட்ஸ் ஐ டி அல்லது பாஸ்போர்ட் எடுத்துட்டு போங்க.

அப்பாடா ! ! !

எங்களுடைய ஒமான் முசந்தம் பயணம், துபாய் உல்லாசப் படகு பயணம் காண இங்கு செல்லவும்.

பயணங்கள் முடிவதில்லை.
குறிப்பு: படங்களைப் பெரிதாக பார்க்க படத்தை கிளிக்கவும்.

-ஆசியா உமர்.

Sunday, 1 April 2012

கூடங்குளம் அணு உலை வேண்டுமா? வேண்டாமா?

கூடங்குளம் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று ஒரு புறமும் அவசியம் வேண்டும் என்று மற்றொரு புறமும் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அதன் உண்மைத்தன்மையை புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
அணு உலை வேண்டாம் என்பவர்கள் சொல்லும் காரணங்கள் அணு உலைகள் பிறப்பிலேயே ஆபத்தானவை,அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தலைமுறை தலைமுறையாய் பாதிக்கக் கூடியவை,அழிக்கக் கூடியவை,முடமாக்கக் கூடியவை,இதற்கு தீர்வே இல்லைன்னு முடிவா சொல்றாங்க.
இது குறித்து சுப.உதயகுமார் நக்கீரனுக்கு அளித்த பேட்டி பின் வருமாறு:-


மேற்கண்ட லின்க்கை கிளிக் செய்தும் பார்க்கலாம்.

எழுத்தாளர் ஜெயமோகன் தன் கருத்துக்களாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் புள்ளிவிவரங்களுடன் பேசுவதை விட்டுவிட்டு சாதாரணமான குடிமக்களாக இதைப்பற்றிப்பேசுவோம்.

எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரப்பற்றாக்குறை இந்தியாவின் முக்கியமான பிரச்சினை என்பதை எவருமே மறுக்க முடியாது. அதற்கான தீர்வுகளை நாடுவதும் அவசியமானதே.

ஆனால் நம்முடைய மின்சாரப்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு அணு உலைகள் மட்டுமே வழி என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? அந்த எண்ணத்தை நம்மிடம் எவர் எப்படி உருவாக்கினார்கள்? என்னென்ன தரவுகளை அளித்தார்கள்? எந்த தர்க்கங்களைச் சொன்னார்கள்? எப்படி இதை நாம் நம்ப ஆரம்பித்தோம்?
இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுக்கவே அணு உலைகள் ஆற்றல் உற்பத்திக்கு லாபகரமானவை அல்ல என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்து விட்டார்கள் என்பதே உண்மை. வேகமாக உலகிலுள்ள அணு உலைகள் மூடப்படுகின்றன.
என்ன காரணம் என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள், அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள் ஆகியவற்றுக்கான செலவுகளை நீண்டகால அளவில் கணக்கிட்டால் அணு உலைகள் மிகமிக அதிகமாகச் செலவு பிடிப்பவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அணு உலைகளுக்குத் தேவைப்படும் பிரம்மாண்டமான முதலீட்டையும் தொடரும் நிர்வாகச் செலவையும் பிற ஆற்றல் உற்பத்திமுறைகளுக்குச் செலவிட முடிந்தால் உலகின் எரிபொருள்தேவையை சிறப்பான முறையில் எதிர்கொள்ளமுடியும் என நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

இந்தியாவில் அணு உலைகளை விட்டால் இதுவரை இங்குள்ள மின்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பெரும் முயற்சிகள் என்னென்ன? அணு உலைகளுக்கு செலவிடப்படும் தொகையில் பாதியாவது அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதா? நாமறிய எந்த ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை என்பதல்லவா உண்மை?

இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் [World Resources Institute] கூறுகிறது. உலக அளவில் அதிகசராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை
இன்னொன்று இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை.
ஆக நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை விட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை.

காரணம் என்ன? இந்தியாவில் பெரும்பாலான மின்கம்பிகள் தலைக்குமேலே செல்கின்றன. ஆகவே அவை அறுந்து விழாத உலோகத்தில் தடிமனாக அமைக்கப்படவேண்டியிருக்கிறது. அவை அளிக்கும் மின்தடை பெரும் மின்சார இழப்புக்குக் காரணமாக அமைகிறது. திருட்டுக்கும் வழிவகுக்கிறது.
மின்னிழப்பு உருவாகாத வகையில் நவீன மின்கடத்திகளை மண்ணுக்கடியில் போட்டு மின்வினியோகம் செய்யலாம், உலகின் வளர்ந்த நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. ஆனால் அதற்கான பெரும் முதலீடு நம்மிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால் கூடங்குளம் போன்ற ஒரே ஒரு அணு உலை அமைக்க நாம் செலவிடும் தொகை 1988ல் போட்ட கணக்கின்படி 1600 கோடிக்கு மேல். இன்று அது 4000 கோடிக்கு மேல் சென்றிருக்குமென கணக்கிடப்படுகிறது. இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் அதன் அணுக்கழிவு பராமரிப்புக்குத் தேவையாம்.
இந்தத் தொகை இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிடமுடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்கமுடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை.

நெடுந்தூரம் மின்சாரத்தைக் கொண்டுசென்று மின்னிழப்பு உருவாக்குவதற்கு பதிலாக இந்தத் தொகையைச் செலவிட்டு இந்தியாவில் பல்வேறு சிறிய மின்திட்டங்களை அமைத்து ஆற்றல் பற்றாக்குறையை எளிதில் ஈடுகட்ட முடியும். அதைப்பற்றி ஏராளமான நிபுணர்கள் எழுதிவிட்டார்கள்.
ஆனால் அவற்றை நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செய்வதில்லை. அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால் அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை. அது ஆளும்தரப்புக்கு மிக வசதியானது. பிற திட்டங்களில் இந்த முட்டாக்குப் பாதுகாப்பு இல்லை.

இரண்டாவதாக, இந்த அணு உலைகளை எப்போதுமே வெளிநாடுகள்தான் அமைத்துத் தருகின்றன. இதற்கான பணம் முழுக்க அந்நாடுகளுக்குத்தான் உண்மையில் சென்று சேர்கிறது. அந்நாடுகள் தங்கள் காலாவதியான தொழில்நுட்பத்தை நமக்களிக்கின்றன. ஈடாக பெரும் பணமும் பெற்றுக்கொள்கின்றன. பேரங்கள் ராணுவ ரகசியங்களாகவும் எஞ்சுகின்றன. இந்நாடுகளின் ரகசியபேரங்களும் ஆள்பிடிப்புவேலைகளும்தான் அணுஉலைகளுக்குப் பின்னால் உள்ள தூண்டுதல்கள்.

மூன்றாவதாக,சர்வதேச நிதியங்கள் இம்மாதிரி திட்டங்களுக்கு தேவையான கடன்களைக் கொடுக்கின்றன. உண்மையான வளர்ச்சித்திட்டங்களுக்கு அவை நிதி அளிப்பதில்லை. இந்த நிதியங்களில் அதிக முதலீடு செய்துள்ளவை இந்த அணுஉலைகளை நமக்கு விற்கும் நாடுகளேதான். அதாவது தரம் கெட்ட பொருளை நமக்கு விற்பதோடு அவற்றை வாங்குவதற்கான கடனையும் அவையே வட்டியுடன் நமக்கு அளிக்கின்றன.மொத்தத்தில் நாம் கடன் வலைக்குள் விழுகிறோம்.

இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள்.
ஆகவே அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.
நன்றி ஜெ.மோ.

--ஆசியா உமர்.