Pages

Thursday, 28 June 2012

விடுமுறை! விடுமுறை! விடுமுறை!


விடுமுறை வந்தது
விட்டு வந்த
வீட்டு நினைவும் வந்தது

உல்லாசமாய் ஊரில்
உற்றார் உறவினருடன்
உண்டு மகிழும்
கண்டு களிக்கும்
நாளும் வந்தது

கொண்டாடும் குதூகலம்
கொட்டம் போட்டது
கொஞ்சும் செழிப்பாய்
பயண பிரமிப்புடன்
நாட்கள் நகர்ந்தது

ப்ளாக்கிற்கு விடுமுறை
அது மட்டும்
மனதிற்கு பாரமானது.

மீண்டும் விரைவில் சந்திப்போம் !

Wednesday, 20 June 2012

டிப்ஸ் டிப்ஸ் - குழந்தை பராமரிப்பு

இந்த டிப்ஸ்களை ஹெல்தி மார்ஷல்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

1. பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகள் நிப்பிலை நன்கு கொதிக்கும் நீரில் போட்டு உபயோகப்படுத்தவும்,கிருமிகள் அண்டாது.அடிக்கடி நிப்பிலை மாற்றவேண்டும். மீதம் வைத்த பாலை அதிக நேரம் வைத்து கொடுக்கக் கூடாது.

2. பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு நாக்கில் படியும் அக்கரம் (வெள்ளை நிறத்தில்) போக்க தேனில் குழைத்த வசம்பு பொடி தடவி வந்தால், உடன் பலன் அளிக்கும்,கபம் சேராது,மந்தம் மலச்சிக்கல் வராது.

3. பால் அலர்ஜி சில குழந்தைகளுக்கு இருக்கும்,அந்த சமயம் நெஸ்டம் ரைஸ் அல்லது ப்ரோசோயல் மாவு கரைத்து கொடுக்கலாம்.

4.குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக்கீரையை வெந்து சாதத்துடன் பிசைந்து கொடுக்கவும்.

5. வளரும் குழந்தைகளுக்கு பாலுடன் தேன் கலந்து கொடுத்தால் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.

6.வசம்பு( பேர் சொல்லாதது) ஒன்றை குழந்தையின் தலை மாட்டில் வைத்து விட்டால் பூச்சி,கொசு,எறும்பு தொல்லை இருக்காது அல்லது காலில் வசம்பை உறைத்து தடவினாலும் குழந்தைகள் நிம்மதியாக தூங்குவார்கள்.

7. குழந்தைகளை குளிக்க வைத்த பின்பு நகம் வெட்டினால், சுலபமாகவும் சுத்தமாகவும் வேலை முடியும்.

8. குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால் சுக்கு தட்டி போட்ட வெந்நீரை சிறிது சர்க்கரை கலந்து கொடுத்தால் வெளிக்கு போய் வயிறு சரியாகி விடும். அல்லது காய்ந்த திராட்சை சிறிது போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து அவற்றை கசக்கி பிழிந்து வடிகட்டி கொடுத்தாலும் வயிறு ஏற்றம் குறைந்து விடும்.

9. குழந்தைகள் அழுதால் காது பக்கம் கை வைத்து லேசாக இழுத்து பார்க்க வேண்டும்,நாம் காது பக்கம் கையை வைத்தாலே வீல் என்று அழுவார்கள்.காது வலியாக இருக்கலாம் அல்லது சுளுக்கு விழுந்திருக்கும் வாய்ப்பும் இருக்கும். கைக்குழந்தையை தூக்க தெரியாமல் தூக்கினால் சுளுக்கு விழ வாய்ப்பு அதிகம்.கழுத்து நிற்கும் வரை குழந்தைகளை கவனமாக வைத்து கொள்ள வேண்டும். தலைக்கு மேல் தூக்கி விளையாட்டு காட்டக் கூடாது.பச்சிளம் குழந்தைக்கு அதிகம் முத்தம் கொடுக்கக் கூடாது.

10. துணியாலான தொட்டிலில் குழந்தையை போடுபவர்கள் தலைப்பக்கம்,கால் பக்கம் முடிச்சி போட வேண்டும்,அவர்கள் துள்ளி கீழே விழுவதை தடுக்கும்.

11. குழந்தைகளுக்கு நல்ல ஆடை போடலாம், தங்க நகை வேண்டாம், அது கவனக்குறைவினால் ஆபத்தை( திருட்டு ) வரவழைக்கும். சிறுகுழந்தைகளை ஷாப்பிங் போகும் பொழுது கொண்டு செல்லுவதை தவிர்க்கவும்.

12. தவழும் குழந்தைகள் உள்ள வீட்டை மிகக் கவனமாக வைத்திருக்க வேண்டும். சிறிய பொருட்கள் தரையிலோ,அவர்கள் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தால் உடனே வாயிலோ மூக்கிலோ திணித்து கொள்ளுவார்கள் ஜாக்கிரதை.சுவர் விளிம்பு, மேஜை,நாற்காலி கூராக இருக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும், கத்தி,ஊசி,கத்திரி,காசு போன்ற கூரான பொருட்கள் பத்திரப்படுத்தி கைக்கு எட்டாத தொலைவில் வைக்க வேண்டும்.

13. பால்கனி, வாசல், பாத்ரூம் கதவை எப்பவும் பூட்டி வைக்க வேண்டும், மாடிப்படி பக்கம் கூட ஏற முடியாதவாறு ஒரு சிறிய கதவை போட்டு மூடி வைக்கலாம்.

14. இது என்னுடைய அனுபவம், கிச்சனில் எண்ணெய் பாட்டிலை கவனக் குறைவால் தாழ்வான செல்பில் வைத்திருந்தேன், ஒரு லிட்டர் எண்ணெயையும் கொட்டி அதிலே என் மகள் விளையாடி கொண்டிருக்க நான் என்னாலும் தூக்க முடியாமல்,என் காலும் வழுக்க,வேலைக்கார அம்மா என் கையை பிடித்து கொள்ள நான் என் மகளை இழுக்க என்று ஒரு பெரிய போராட்டமே நடந்தது. கிச்சன் தரை சிமெண்ட் மழு மழு என்று பூசியது போல் இருக்கும்.கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க.

15. மொபைலை குழந்தைகள் கையில் விளையாட கொடுக்க வேண்டாம், வாயில் வைத்தும் கையால் தரையில் தட்டியும் உடைத்தும் விடலாம்.ஒரு வீட்டில் குடம் தண்ணீரில் மொபைலை போட்ட கதையும் நடந்திருக்கு.

16. கைக்கு எட்டும் தொலைவில் ஸ்விட்ச் போர்டு இல்லாமல் பார்த்து கொள்ளவும். அயர்ன் பாக்ஸ் ஆன் செய்து கைக்கு எட்டும் தொலைவில் வைத்து விடாதீர்கள்.கொதிக்கும் நீர், டீ,காபி போன்றவை கவனம்,கைக்கு எட்டும் தொலைவில் இருந்தால் இழுத்து போட்டு விடுவார்கள்.

17. இப்ப அநேக வீடுகளில் ட்ரெட் மில் இருக்கு. கவனம், இதனாலும் குழந்தைகளுக்கு ஆபத்து வரலாம்.ஓடவிட்டு கையை வைத்ததால் தெரிந்த குழந்தை கையில் சதை பிய்த்து காயம் ஏற்பட்டு விட்டது. குழந்தைகளை பாதுகாப்பு மிக முக்கியம்.

18. தயவுசெய்து சிறு குழந்தைகளை அடிப்பதை, திட்டுவதை தவிருங்கள்.அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள். இது நாளடைவில் அவர்கள் மனநிலையை பாதிக்கும்.

- டிப்ஸ்கள் தொடரும்.

Sunday, 10 June 2012

மரத்தை வைச்சவன் தண்ணீ ஊத்துவான்...

மனசு பொறுக்க முடியாமல் தான் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...
நாங்க அபுதாபியில் இருந்து அல் ஐன் வந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இங்கு எனக்கு வீட்டு பக்கத்தில் பழக என்று நம்ம மக்களாக யாரும் வாய்க்கலை. அதனால வீட்டை கவனிப்பது, குழந்தைகளுடன் அளாவளாவுவது, வலைப்பூ,வாசிப்பு, தொலைக்காட்சி, சாப்பாடு, தூக்கம் என்ற சாதாரண குடும்பத்தலைவி வாழக்கை. ரொம்ப இலகுவாக கழிந்தது நாட்கள்.

கடந்த டிசம்பரில் இருந்து இங்கு நினைத்தால் மண் புயல் ஒரு சில நாட்கள் மண் காற்றை தொடர்ந்து, போனா போகுதுன்னு கொஞ்சம் தண்ணியையும் தெளித்து விடுவான் ஆண்டவன், அது எப்படியிருக்கும் என்றால் காரை செட்டில் விடாமல் வெளியே நிறுத்தினால் அவ்வளவு தான், டீயை கார் முழுவதும் ஊற்றி விட்டது போல் இருக்கும். கார் அப்ப தான் கழுவிட்டு வந்திருப்போம், திரும்பவும் கழுவ வேண்டிய நிலைமை வரும்.

இங்கு வீட்டின் முன் கேட்டிற்குள் சிறிதும் பெரிதுமில்லாதபடியான திறந்தவெளியும், பக்கவாட்டில் ஒரு சிறிய முற்றம் போல் இடமும், பின் சைடில் பால்கனியும் உள்ள அமைப்புள்ள வீடு, இவற்றில் இயற்கை அள்ளித்தூத்தும் மண்ணை அள்ளிப்போடுவதே பெரிய வேலை. ஒரு சில நாட்களில் முறம் முறமாக மண்ணை அள்ளிப்போட வேண்டியதும் வரும்,வீட்டின் பின்பக்கமும்,பக்கவாட்டிலும் கட்டிடம் இல்லாததால் இந்தத் தொந்திரவு.

இவ்வளவு நாள் இல்லாமல் ஏன் இந்த புழப்பம் என்று தானே கேட்கிறீங்க. இத்தனை வருடத்தில் இப்படி கடினமான வேலையை நான் செய்ததே இல்லை, திருமணம் ஆனதில் இருந்து ஆஹா ஓஹோன்னு இல்லாவிட்டாலும் வீட்டு வேலைக்கு ஆள் இருந்தே பழகிட்டேன், இப்ப தனியாக ஆறு மாதமாக இத்தனை பெரிய வீட்டை பெருக்குவது, துடைப்பது, பாத்ரூம்களை கழுவுவது (பெரிய வேலை) சமையலறை சுத்தம் செய்வது, துவைப்பது காயவைப்பது, இஸ்திரி போடுவது அப்பா சொல்வதற்கே மூச்சு வாங்குது,ஆனால் உடல் எடை மட்டும் குறைந்த பாடில்லை...எப்படி குறையும் எல்லா நேரமும் சமையல் கட்டிலேயே இருந்தால்...ஹா..ஹா...
ஆமா மீண்டும் மீண்டும் இப்படி இப்ப புழம்புவதற்கு காரணம்.. இருங்க இருங்க சொல்றேன்..

ஒரு கிளீனிங் கம்பெனியில் வேலை பார்த்த சகோ.குமார் எங்க வீட்டில் அவருக்கு நேரம் கிடைக்கும் பொழுது வந்து எல்லா வேலையும் செய்து தருவார். டிசம்பரில் விடுமுறைக்கு ஊர் போகும்பொழுது, அக்கா மார்ச் மாதம் வந்திடுவேன், அதுவரை வேறு யாரையாவது வேலைக்கு ரெடி செய்துக்கோங்கன்னு சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். நானும் மூன்று மாதம் தானே நமக்கும் நேரம் போக மாட்டேங்குது, நாமே எல்லா வேலையும் செய்யலாமுன்னு ரொம்ப பொறுப்பாக என் கணவரிடம் வேறு ஆள் வேண்டாம் என்று சொல்லிட்டேன். மூன்று மாதமாச்சு, நான்கு மாதமாச்சு, ஐந்து மாதமாச்சு, ஆறு மாதமாச்சு...இன்னும் குமார் வந்த பாடில்லை, என் கணவரும் அப்ப அப்ப அவரிடம் தொலைபேசிக் கொள்வது வழக்கம், நாங்களும் ஊருக்கு விடுமுறைக்கு கிளம்ப வேண்டிய நாளும் நெருங்குது, எனக்கு வேலையே ஓடலை...

சரி நாமே தொலைபேசுவோம் குமாருக்கு, என்று அழைத்தேன்.இங்கு வேலையில் இருக்கும் பொழுது குமாரின் மொபைலில் அவருடைய மனநிலைக்கு தகுந்தபடி ரிங்டோன் மாற்றி மாற்றி வைத்து கொள்வார், உதாரணத்திற்கு செண்பகமே செண்பகமே பாடல், சில சமயம் இந்த வாழ்வே மாயம் பாடல் என்று பல பாடல்கள் மாறி மாறி ஒலிக்கும், நானும் குமாரின் மனநிலையை பாடல் மூலம் தெரிந்து அவரைக் கலாய்ப்பதுண்டு.

குமாருக்கு ஊரோடு போய் விட வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி தலை தூக்கும், ஆனால் குழந்தைகள் படிப்பு முடிந்து செல்ல வேண்டும் என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்வதுண்டு, 16 வருடம் ஒரே ஊர், ஒரே கம்பெனி, ஒரு அறை என்று வாழ்க்கை போரடித்து விட்டதாக அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது இப்ப தான் நினைவிற்கு வருகிறது. அவர் இந்த முறை ஊர் சென்ற சமயம் காய்ச்சல் வந்து ரொம்ப முடியாமல் ஆகிவிட்டதாகவும் இப்ப தான் உடல் நலம் தேறி வருவதாகவும், குடும்பத்தினர் யாரும், “இனி வெளிநாடு போக வேண்டாம்” என்று சொல்வதாகவும் தெரிவித்தார். சரி எப்படியும் உடல் நலம் தேறி வந்து விடுவார், என்னோட வேலைப்பளுவும் குறைந்து விடும் என்று நினைத்திருந்தேன்.

நேற்றோடு, குமாரின் விசாவும் காலாவதியாகி விட்டது இனி எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வருவாரான்னு இருக்கு. குணமாகி வரணும் என்று வேண்டிக்கறேன், எங்க வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், எங்களை விசாரிப்பார்களோ இல்லையோ, குமார் எங்கே ஆளைக் காணோம் என்று விசாரிக்கத் தவறுவதில்லை. அந்தளவு அனைவருக்கும் குமாரைப் பிடிக்கும், விருந்தின் போது குமார் சமைத்த ஸ்பெஷல் பதார்த்தமும் இருக்கும். என்ன வேலை என்றாலும் ஒரு நாள் கூட முகம் சுளித்ததில்லை. மிகவும் நம்பிக்கையான நல்ல பண்பாளர், இப்படி இனி ஆள் அமைவது மிகக் கஷ்டம். : ((( !

எங்கிருந்தாலும் மிக செழிப்பாக பல்லாண்டு வாழ்க!... என்று மனதார வாழ்த்துகிறேன், எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. சொந்தமாக காடு, கழனி இருக்கு, ஊருக்கு போய் செட்டிலாகி விவசாயம் செய்து இனி காலத்தை ஓட்ட வேண்டும் என்று முன்பு சொன்னது என் காதில் ஒலிக்கிறது.

இப்ப குமார் மொபைலின் ரிங் டோன் என்ன தெரியுமா? நான் அழைத்த பொழுது “மரத்தை வைச்சவன் தண்ணீ ஊத்துவான்” என்று பாடுகிறது.

Monday, 4 June 2012

சமையல் டிப்ஸோ டிப்ஸ்..

1.சாதம் உதிரியாக இருந்தால் தான் ஃப்ரைட் ரைஸ் போன்றவை நன்றாக அமையும்.உதிரியாக வர அரிசியை நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர் தேவையான தண்ணீருடன் 20 நிமிடம் ஊற விட்டு வேக விட வேண்டும்.இவ்வாறு செய்வதால் அரிசியின் மேல் ஒட்டியுள்ள அனைத்து மாவுச்சத்தும் போய்விடும்.சாதம் உதிரியாக இருக்கும்.சாதம் வேகும் பொழுது எலுமிச்சம் பழச்சாறு அல்லது எண்ணெய் சில துளிகள் சேர்த்தால் சாதம் பார்ப்பதற்கு ஒரு வித பளபளப்புடன் இருக்கும்.

நூடுல்ஸ் வேக வைத்த பின்பு கொதி நீரை வடித்து குளிர்ந்த நீரை மேல் ஊற்றி வடிகட்டி எடுத்தால் உதிரியாக இருக்கும்.

2. பூரி மொறு மொறுப்பாக இருக்க கோதுமை மாவை பிசைவதற்கு முன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் ரவை கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்தால் மொறு மொறுப்பாக பொங்கி வரும்.

3. தக்காளி இல்லாத நேரத்தில் ஓரிரு டீஸ்பூன் தக்காளி சாஸ் விட்டால் 2 தக்காளி சேர்த்ததற்கு இணையான ருசியை தரும்.

4. கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க உரித்த வெங்காயத்தை 2-4 துண்டுகளாக வெட்டி தண்ணீரில் கழுவிட்டு நறுக்கினால் கண்ணீர் வராது. வெங்காயம் தட்டுப்பாடான நேரத்தில் முட்டை கோஸ் பாதி,வெங்காயம் பாதி என்று உபயோகித்தால் சத்துக்கு சத்தும் ருசிக்கு ருசியுமாச்சு.

5. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் பொழுது 60 சதவிகிதம் பூண்டும் 40 சதவிகிதம் இஞ்சியும் சேர்த்து அரைத்தால் சிறந்த சுவையைத் தரும்.

6. காளிப்ளவரை சிறு துண்டாக நறுக்கி சர்க்கரை கலந்த நீரில் வேக விட்டு எடுத்தால் வெண்மையாக இருக்கும்.உள்ளிருக்கும் புழு பூச்சிகளும் வெளிவந்து விடும்.

7. கத்திரிக்காய் கருப்பாகாமல் இருக்க, கத்திரிக்காய் வெட்டி தண்ணீரில் போடும் பொழுது சிறிது பால் சேர்த்து விட்டால் கருக்காது.சமைத்த பின்பு பார்க்கவும் நிறம் அழகாக இருக்கும்.

8. முட்டை வேக வைக்கும் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் முட்டை உடைவதை தவிர்க்கலாம்.

9. மீன்,இறால் போன்ற கடல் உணவுகள் அதிக வாசம் அடித்தால் சிறிது உப்பு,எலுமிச்சம்பழச்சாறு பிசறி 10-20 நிமிடம் வைத்தால் வாடை சுத்தமாக போய்விடும்.மீன் கெடாமல் ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்க உப்பு,வினிகர்,மஞ்சள் தூள் பிசறி வைத்தால் புத்தம் புதுசாக இருக்கும்.

10. கறி,கோழி,மீன் சமைக்கும் பொழுது முதலில் அதிக நெருப்பில் வேகவிட்டு பின் குறைந்த நெருப்பில் வேக வைக்க வேண்டும்.இது நன்கு வேக உதவுவதோடு சத்துக்கள் வீணாவதை தவிர்க்கும்.எல்லா டிப்ஸும் தெரிந்ததாக இருந்தாலும் நிறைய பேர் பயன்படுத்துவதில்லை. டிப்ஸ் உபயோகித்து பாருங்க, பலன் இருக்கும்.