Pages

Sunday, 10 June 2012

மரத்தை வைச்சவன் தண்ணீ ஊத்துவான்...

மனசு பொறுக்க முடியாமல் தான் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...
நாங்க அபுதாபியில் இருந்து அல் ஐன் வந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இங்கு எனக்கு வீட்டு பக்கத்தில் பழக என்று நம்ம மக்களாக யாரும் வாய்க்கலை. அதனால வீட்டை கவனிப்பது, குழந்தைகளுடன் அளாவளாவுவது, வலைப்பூ,வாசிப்பு, தொலைக்காட்சி, சாப்பாடு, தூக்கம் என்ற சாதாரண குடும்பத்தலைவி வாழக்கை. ரொம்ப இலகுவாக கழிந்தது நாட்கள்.

கடந்த டிசம்பரில் இருந்து இங்கு நினைத்தால் மண் புயல் ஒரு சில நாட்கள் மண் காற்றை தொடர்ந்து, போனா போகுதுன்னு கொஞ்சம் தண்ணியையும் தெளித்து விடுவான் ஆண்டவன், அது எப்படியிருக்கும் என்றால் காரை செட்டில் விடாமல் வெளியே நிறுத்தினால் அவ்வளவு தான், டீயை கார் முழுவதும் ஊற்றி விட்டது போல் இருக்கும். கார் அப்ப தான் கழுவிட்டு வந்திருப்போம், திரும்பவும் கழுவ வேண்டிய நிலைமை வரும்.

இங்கு வீட்டின் முன் கேட்டிற்குள் சிறிதும் பெரிதுமில்லாதபடியான திறந்தவெளியும், பக்கவாட்டில் ஒரு சிறிய முற்றம் போல் இடமும், பின் சைடில் பால்கனியும் உள்ள அமைப்புள்ள வீடு, இவற்றில் இயற்கை அள்ளித்தூத்தும் மண்ணை அள்ளிப்போடுவதே பெரிய வேலை. ஒரு சில நாட்களில் முறம் முறமாக மண்ணை அள்ளிப்போட வேண்டியதும் வரும்,வீட்டின் பின்பக்கமும்,பக்கவாட்டிலும் கட்டிடம் இல்லாததால் இந்தத் தொந்திரவு.

இவ்வளவு நாள் இல்லாமல் ஏன் இந்த புழப்பம் என்று தானே கேட்கிறீங்க. இத்தனை வருடத்தில் இப்படி கடினமான வேலையை நான் செய்ததே இல்லை, திருமணம் ஆனதில் இருந்து ஆஹா ஓஹோன்னு இல்லாவிட்டாலும் வீட்டு வேலைக்கு ஆள் இருந்தே பழகிட்டேன், இப்ப தனியாக ஆறு மாதமாக இத்தனை பெரிய வீட்டை பெருக்குவது, துடைப்பது, பாத்ரூம்களை கழுவுவது (பெரிய வேலை) சமையலறை சுத்தம் செய்வது, துவைப்பது காயவைப்பது, இஸ்திரி போடுவது அப்பா சொல்வதற்கே மூச்சு வாங்குது,ஆனால் உடல் எடை மட்டும் குறைந்த பாடில்லை...எப்படி குறையும் எல்லா நேரமும் சமையல் கட்டிலேயே இருந்தால்...ஹா..ஹா...
ஆமா மீண்டும் மீண்டும் இப்படி இப்ப புழம்புவதற்கு காரணம்.. இருங்க இருங்க சொல்றேன்..

ஒரு கிளீனிங் கம்பெனியில் வேலை பார்த்த சகோ.குமார் எங்க வீட்டில் அவருக்கு நேரம் கிடைக்கும் பொழுது வந்து எல்லா வேலையும் செய்து தருவார். டிசம்பரில் விடுமுறைக்கு ஊர் போகும்பொழுது, அக்கா மார்ச் மாதம் வந்திடுவேன், அதுவரை வேறு யாரையாவது வேலைக்கு ரெடி செய்துக்கோங்கன்னு சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். நானும் மூன்று மாதம் தானே நமக்கும் நேரம் போக மாட்டேங்குது, நாமே எல்லா வேலையும் செய்யலாமுன்னு ரொம்ப பொறுப்பாக என் கணவரிடம் வேறு ஆள் வேண்டாம் என்று சொல்லிட்டேன். மூன்று மாதமாச்சு, நான்கு மாதமாச்சு, ஐந்து மாதமாச்சு, ஆறு மாதமாச்சு...இன்னும் குமார் வந்த பாடில்லை, என் கணவரும் அப்ப அப்ப அவரிடம் தொலைபேசிக் கொள்வது வழக்கம், நாங்களும் ஊருக்கு விடுமுறைக்கு கிளம்ப வேண்டிய நாளும் நெருங்குது, எனக்கு வேலையே ஓடலை...

சரி நாமே தொலைபேசுவோம் குமாருக்கு, என்று அழைத்தேன்.இங்கு வேலையில் இருக்கும் பொழுது குமாரின் மொபைலில் அவருடைய மனநிலைக்கு தகுந்தபடி ரிங்டோன் மாற்றி மாற்றி வைத்து கொள்வார், உதாரணத்திற்கு செண்பகமே செண்பகமே பாடல், சில சமயம் இந்த வாழ்வே மாயம் பாடல் என்று பல பாடல்கள் மாறி மாறி ஒலிக்கும், நானும் குமாரின் மனநிலையை பாடல் மூலம் தெரிந்து அவரைக் கலாய்ப்பதுண்டு.

குமாருக்கு ஊரோடு போய் விட வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி தலை தூக்கும், ஆனால் குழந்தைகள் படிப்பு முடிந்து செல்ல வேண்டும் என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்வதுண்டு, 16 வருடம் ஒரே ஊர், ஒரே கம்பெனி, ஒரு அறை என்று வாழ்க்கை போரடித்து விட்டதாக அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது இப்ப தான் நினைவிற்கு வருகிறது. அவர் இந்த முறை ஊர் சென்ற சமயம் காய்ச்சல் வந்து ரொம்ப முடியாமல் ஆகிவிட்டதாகவும் இப்ப தான் உடல் நலம் தேறி வருவதாகவும், குடும்பத்தினர் யாரும், “இனி வெளிநாடு போக வேண்டாம்” என்று சொல்வதாகவும் தெரிவித்தார். சரி எப்படியும் உடல் நலம் தேறி வந்து விடுவார், என்னோட வேலைப்பளுவும் குறைந்து விடும் என்று நினைத்திருந்தேன்.

நேற்றோடு, குமாரின் விசாவும் காலாவதியாகி விட்டது இனி எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வருவாரான்னு இருக்கு. குணமாகி வரணும் என்று வேண்டிக்கறேன், எங்க வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், எங்களை விசாரிப்பார்களோ இல்லையோ, குமார் எங்கே ஆளைக் காணோம் என்று விசாரிக்கத் தவறுவதில்லை. அந்தளவு அனைவருக்கும் குமாரைப் பிடிக்கும், விருந்தின் போது குமார் சமைத்த ஸ்பெஷல் பதார்த்தமும் இருக்கும். என்ன வேலை என்றாலும் ஒரு நாள் கூட முகம் சுளித்ததில்லை. மிகவும் நம்பிக்கையான நல்ல பண்பாளர், இப்படி இனி ஆள் அமைவது மிகக் கஷ்டம். : ((( !

எங்கிருந்தாலும் மிக செழிப்பாக பல்லாண்டு வாழ்க!... என்று மனதார வாழ்த்துகிறேன், எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. சொந்தமாக காடு, கழனி இருக்கு, ஊருக்கு போய் செட்டிலாகி விவசாயம் செய்து இனி காலத்தை ஓட்ட வேண்டும் என்று முன்பு சொன்னது என் காதில் ஒலிக்கிறது.

இப்ப குமார் மொபைலின் ரிங் டோன் என்ன தெரியுமா? நான் அழைத்த பொழுது “மரத்தை வைச்சவன் தண்ணீ ஊத்துவான்” என்று பாடுகிறது.

10 comments:

 1. எல்லார் மனதிலும் ஊரில் போய் இருக்க வேண்டும் என்ற ஆசைதான் அதிகம் ஓடுகிறது. அக்கா.

  அவர் தேர்ந்தெடுத்திருக்கும் பாடல் மிக அருமை.

  அவர் நலமாக இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 2. வாழ்கை பயணத்தில் எத்தனை சுவராசியங்கள்!

  எழுத்து நடை அருமை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி சீனி.நன்றி.

   Delete
 3. பழக்கம் இல்லாத வேலைகளை பழகும் வரை கஷ்டம்தான் ஆசியாக்கா! முடிந்தால் செய்யுங்க, இல்லைன்னா வேறு வேலையாட்களைப் பார்த்து வைச்சுக்கோங்க. உடல்நலம் முக்கியம்!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி மகி.இப்பொழுது எனக்கும் பழகிவிட்டது.முடியாத நேரம் ஆள் பார்க்கத் தான் வேண்டும்.

   Delete
 4. தோழி புலம்பல்ஸ் ரொம்ப ஜாஸ்தியாகி விட்டதே என்று பதிவைபடிக்க படிக்க அட..நான் உங்கள் வீட்டுக்கு வந்தப்போ பெரிய மண் கடாய் நிறைய சேரிமீனை தளதள என்று மணக்க மணக்க சமைத்து வைத்துவிட்டு சென்றாரே..இப்பொழுது அவர் இல்லாமல் உங்களுக்கு வேலைப்பளு ஜாஸ்தியாகி இருக்குமே..:(

  அழகான உங்க ஏரியாவில் மண்ணால் இப்படி ஒரு அவஸ்தையா?கஷ்டம்தான்...

  ReplyDelete
  Replies
  1. தோழி வருகைக்கு மகிழ்ச்சி.எத்தனையோ பேர் நம் வாழ்க்கையில் வராங்க போறாங்க,அதில் ஒரு சிலரின் குணங்கள்,உதவிகள் நம்மை மிகவும் நெகிழவைப்பது நிஜமே!

   Delete
 5. மனிதத் தன்மையும்,இரக்க சிந்தனையும் பணியாட்கள் மீது வேண்டும் என்று சொல்லுகிற அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோ.எல்.கே.எஸ் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

   Delete