Pages

Thursday, 30 August 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் / Joyful Singapore - பகுதி -2 - அட இதப் பாருடா!


முதல் நாள் மாலை திட்டமிட்டபடியே நாங்கள் ஆன்லைனில் புக் செய்த Singapore flyerகிளம்பி சென்றோம். அது ஒரு பேக்கேஜ் டூர், அதனுடன் City Sight Seeing, DUKW tour மூன்றும் சேர்ந்தே வரும். நாங்க பயணம் கிளம்ப இரண்டு வாரம் முன்பே அங்கு பார்க்க வேண்டிய சில இடங்களுக்கு ஆன் லைனில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தோம். நேரில் சென்று எடுப்பதை விட ஆன்லைன் புக்கிங் சௌகரியம் என்று தான் சொல்ல வேண்டும்.City Sight Seeingமறுநாளும்,DuckW Tourசெல்ல, ஐந்தாம் நாளை தேர்வு செய்து மாற்றிக் கொண்டோம்.

பின்பு அன்று இரவு Marina Bay Sands – Sky Park சென்று பார்க்க முடிவு செய்தோம்.

Flyer –ருக்கான ஆன்லைன் டிக்கெட்டுக்கான படிவத்தை கவுண்டரில் கொடுத்தவுடன், ஒரு கால் மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, பின்பு எங்களுக்கு எத்தனை டிக்கெட்டோ அத்தனைFlyer lucky key chain மற்றும்Singapore Traditional Food Trial –கூப்பன் சிங்கப்பூர் வெள்ளி 5 மதிப்பானதையும் ஒவ்வொருவருக்கும் இணைத்து தந்தார்கள்.


இந்த புகைப்படம் DUCW TOUR பொழுது படகில் இருந்து எடுத்தது.

உலகின் மிகப்பெரிய ஜெயண்ட் வீலான சிங்கப்பூர் ஃப்ளையர் பார்க்கவே பிரமாண்டமாக இருந்தது.28 கேப்ஸ்யூல்(குளிரூட்டப்பட்ட கண்ணாடி பெட்டிகள்) கொண்டது. 165 மீட்டர் உயரம் கொண்டது.கூட்டத்திற்கு தகுந்த படி ஒவ்வொரு பெட்டியிலும் ஆட்களை 15-20 நபர் என்ற படி ஏற்றினார்கள். பெட்டியினுள் அமர்ந்தும் பார்க்கலாம், நின்றும் பார்க்கலாம். ஒவ்வொரு அடியாய் எடுத்து வானில் நடந்து பார்த்தால் எப்படியிருக்கும்,அந்த மகிழ்ச்சி. அந்த வீல் சுற்றுவதே தெரியவில்லை. மெது மெதுவாய் வானில் நகர்ந்து சென்று மொத்த சிங்கப்பூர் சுற்றுவட்டாரத்தையும் அணுஅணுவாய் பார்த்த, இல்லை இல்லை.. ரசித்த திருப்தி. கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லுவோமே அந்த மாதிரி காட்சிகளைக் கண்ட மகிழ்ச்சி. முக்கால் மணி நேர உலா. இறங்க மனமில்லாமல் இறங்கினோம்.என் கணவர் வீடியோ விடாமல் எடுத்துக் கொண்டு இருந்ததால் என்னால் முடிந்த பொழுது கிளிக்கிய சில படங்களைப் பகிர்கிறேன்.


இது கேப்ஸ்யூலின் உட்புறத் தோற்றம்.


பாதுகாப்பான கட்டமைப்பு.

ஏறுவதற்காக பெட்டி அருகே வந்த பொழுது கிளிக்கியது.

எங்கள் பெட்டியில் இருந்து எங்கள் முன் சென்ற பெட்டியை கிளிக்கியது.
ரம்யமான காட்சிகளில் எங்கள் புகைப்படமும் சேர்ந்து இருப்பதால் நிறைய படங்கள் பகிரமுடியலை.

மேலேயிருந்து கிளிக்கிய சிங்கப்பூர் சாலைகள்.

மாலையில் ஃப்லையரில் இருந்து சிங்கப்பூர் அழகை ரசித்த நாங்கள், விளக்கொளியில் மெரினா பே சாண்ட்ஸ்(Marina Bay Sands ) பார்க்கச் சென்றோம். 57 மாடிகள் கொண்டது. மூன்று கட்டிடங்களை இணைத்து மேலே sky park , நீச்சல் குளம் என்று அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். அந்த உயரத்தில் இருந்து பார்க்க சிங்கப்பூர் இரவு வெளிச்சத்தில் ஒரு தேவலோகமாக காட்சியளித்தது.அத்தனை அழகு.வானில் பறந்து சென்று வருவது போல் சுற்றி சுற்றி ரசித்தோம். சுற்றிலும் கண்ணாடி தடுப்பு சுவர்.அதனால் நின்றவாறும், உட்கார்ந்தும் வசதியாக அனைத்தையும் காற்று வாங்கிக் கொண்டே இதமாக கண்டுகளிக்க முடிந்தது.

மெரீனா பே சான்ட்ஸ்.

இரவு வெளிச்சத்தில் ரசித்த காட்சிகள்...


எங்கேயிருந்து பார்த்தாலும் ப்ளையர் தெரியுது பாருங்களேன்.

பின்பு சிங்கப்பூர் ஃபுட் ட்ரையலில் வாங்கிய ஸ்நாக்ஸ் & ட்ரிங்க்ஸ் ரசித்து சாப்பிட்டு விட்டு கிழே இறங்கி MRT -யில்(இரயிலில்) ஜாலியாக வீடு பின்னிரவு வந்து சேர்ந்தோம். பயணம் வந்த களைப்பு, சுற்றிப் பார்த்த களைப்பு என்ற அசதியில் நல்ல தூக்கம் கண்களை கட்டிப்போட்டது.


ஆரோக்கியமான உணவு வகைகள். மசாலாவுடன் உணவு சாப்பிட்டு பழக்கமான நமக்கு இதெல்லாம் பிடிக்குமா என்ன?
பிரசித்திபெற்ற சிங்கை உணவான டம்ப்ளிங்ஸ்.

மறுநாள் எங்களின் இரண்டாம் நாள் மிக தடபுடலாக இருக்கும் என்று அறியாமல் தயாரானோம்.


Wednesday, 22 August 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் /Joyful Singapore - குதூகலப்பயணம்

பசுமை + பளிச் பளிச்.. - பகுதி 1

சிங்கப்பூரை நாங்க சுற்றிப் பார்க்க போய்வந்தது ஐந்தே நாட்கள், பம்பரமாய் சுழன்றன அந்த நாட்கள் என்று தான் சொல்ல வேண்டும். விடுமுறையில் இந்தியா சென்றிருந்த பொழுது இந்த பயணமும் சேர்ந்து கொண்டது. முறையான திட்டமிடல் இருந்ததால் குழப்பமில்லாமல் என்ன பார்க்க முடியுமோ அவற்றை திருப்தியாக பார்த்து விட்டு வந்தோம். சரியான திட்டமிடல் தான் ஒரு மகிழ்ச்சிகரமான பயணத்திற்கு அடிகோல் என்பதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் அருமையாக திட்டமிட்டு மகிழ்ச்சியானதாக அமைந்தது எங்கள் இந்த பயணம்.

சிங்கப்பூர் மிகச் சிறிய நாடு என்பதால் ஐந்து நாட்கள் போதும் என்று முடிவெடுத்தோம், ஆனால் அதன் அழகை சிலாகிக்க, தட்பவெட்ப சூழ்நிலையை அனுபவிக்க இன்னும் சிலநாட்கள் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது, எங்களுடைய அமீரக பாலைவன வாழ்க்கையில் இருந்து மாறுபட்ட சோலைவன வாழ்க்கை என்று சொல்லலாம்.

நாங்கள் நெல்லையில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வழியாக சிங்கப்பூர் சென்று அதே வழியில் திரும்பி வந்தோம்.நாங்கள் பயணம் செய்தது டைகர் ஏர்வேஸ்,இரவுப் பயணம் ஆதலால் நான்கு மணி நேரம் நன்கு தூங்கி விழித்து அதிகாலை புத்துண்ர்ச்சியுடன் சங்கி பட்ஜெட் டெர்மினல் சிங்கப்பூரை (Changi Budget Terminal – Singapore) சென்றடைந்தோம்.

இறங்கியவுடன் மனதை கொள்ளை கொண்ட ஒரு விஷயம் தமிழில் நல்வரவு என்ற பெரிய வரவேற்பு பலகையை பார்த்தது தான்.அதனை என் மகள் மொபைலில் கிளிக்கிக் கொண்டாள். இமிக்ரேஷனில் படிவம் நிரப்பும் பொழுது, ஒருவர் வந்து எங்களிடம் தன்னுடைய படிவத்தை நிரப்பி தரும் படி கேட்டார்.தன்னுடைய பெயர் சொக்கலிங்கம் என்றும் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிவதாயும் சொன்னார்.அவருக்கு உதவிய திருப்தியோடு எங்கள் வேலையும் முடிந்து வெளியே வந்தோம். அவர் தன்னுடைய தங்குமிடம் உத்திரகாளியம்மன் கோவில் என்ற முகவரியை சொன்னார்.தமிழில் இந்த முகவரியை கேட்டதும் பரிச்சயமான சூழலை உணர்ந்தோம்.. அதிகாலை வேளை ஏர்போர்ட் வளாகத்தில் இருந்த உணவகத்தில் இதமாய் காபி பருகிக் கொண்டோம். ஒரு காபி நம்ம ஊர் ஹோட்டலில் தரும் மூன்று காபிக்கு சமம். எங்கு சென்றாலும் நானும் அவரும் காபி டீ மற்றும் எது சாப்பிட்டாலும் ஆளுக்கு பாதி தான்.

விமானநிலைய வளாகத்தில் குப்பை போட இப்படி தெளிவாய் குப்பை தொட்டிகள்.

சங்கி விமானநிலயத்தின் ஒரு பகுதி

நாங்கள் சிங்கப்பூரில் உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும், உறவினருக்கு ஆபிஸில் முக்கிய வேலை வந்துவிட்டதால், டாக்ஸி பிடித்து நீங்களே வீட்டிற்கு வந்து விடுங்கள் என்றார். ஏர்போர்ட்டில் இருந்து அவங்க வீடு 15 கிலோமீட்டர் தொலைவில் செஙகாங் - புங்கோல்( Seng Kang – Punggol Road) இடத்தில் ரிவர்வேல் தெருவில் இருந்தது. ஏர்போர்ட்டின் இடது பக்கம் டாக்ஸிக்கு தனி வரிசையில் சென்று சிரமமில்லாமல் ஏறிக்கொண்டோம், பணிவான அந்த சீனக் காரோட்டி அன்பாய் எங்களிடம் விளக்கம் கேட்டு பத்திரமாய் வீட்டருகே கொண்டு சேர்த்தார். செல்லும் வழியெல்லாம் நாட்டின் பசுமையும் பளிச்சும் மனதை இதப்படுத்தியது. லேசான தூரல் மழை வேறு. வானுயர்ந்த அடர்ந்த மரங்கள், புல்வெளிகளைப் பார்க்கும் பொழுது இயற்கையன்னையின் தாராளத்தைக் கண்டு வியக்கத்தான் முடிந்தது. என் மனம் என்னையறியாமல் பாடியது.

வானத்தை பார்த்தேன்

பூமியைப் பார்த்தேன்

மனுஷனைப் பார்த்தேன்,

மண்ணை மட்டும் பார்க்கலையே!

அட புல்லை தானே பார்த்தேன்.

என்று பாடினேன். மண்ணிற்கு பதிலாக சிங்கப்பூர் முழுவதும் புல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அத்தனை பசுமை. தூசியில்லாத ஊர் எனலாம். மம்மி கிளம்பிட்டாங்கப்பா, கிளம்பிட்டாங்க! என்று எங்க வீட்டில் ஒரே கலாய்ப்பு.


நாங்கள் தங்கியிருந்த ரிவர்வேல் தெரு.

வழி எல்லாம் ரசித்துக் கொண்டு சென்றதில் காரோட்டி நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாய் தெரிவிக்க, நாங்களும் இறங்கிக் கொண்டோம். அடுக்கு மாடிக் கட்டிடங்கள் உள்ள பகுதி. எங்கள் உடைமைகளைக் கூட தூக்கவிடாமல் காரோட்டியே இறக்கி வைத்து சிரித்த முகத்துடன் விடைபெற்ற அந்த பண்பு ஆச்சரியப்படுத்தியது. உறவினர் வீடு ஒன்பதாவது மாடி, வீடு எங்களை எதிர் நோக்கி திறந்தே இருந்தது. மகிழ்ச்சியாய் வரவேற்று சிறிது அளவளாவி விட்டு குளித்து சூடாக சூப்பர் தோசை சிக்கன் குருமா, டீ சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தோம். அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் ஜும்மா தொழுகை, மாலை முதல் வெளியே கிளம்பலாம் என்று முடிவு செய்திருந்தோம். மதியமும் அருமையான பிரியாணி வகையறாக்களோடு விருந்து. ருசித்து சாப்பிட்டோம். ( சமையல் வலைப்பூ வைத்து விட்டு சாப்பாடு பற்றி சொல்லவில்லை என்றால் எப்பூடி?) பின்பு குழந்தைகளோடு அளவளாவல், சிறிய தூக்கம். வீட்டின் அமைப்பு அருமையாய் அமைதியாய் கண்ணிற்கு குளிர்ச்சியாய் இருந்தது. மாலை திட்டமிட்ட படி ஊர் சுற்ற கிளம்பினோம்.

- தொடர்ந்து ஊர் சுற்றி பார்க்கலாம்.

Friday, 10 August 2012

பறந்தவிட்டன அந்த நாட்கள்...

முதலில் என் வலைப்பூ நட்புள்ளங்கள் அனைவருக்கும் ஊரில் இருந்து கொண்டு வந்த திருநெல்வேலி அல்வா, எடுத்துக்கோங்க.ஊரில் கழித்த அந்த நாட்கள் இனி திரும்ப வராது, நினைத்தால் மனது பாரமாகத்தான் இருக்கு. சொந்த ஊரில் இருந்த நாட்கள் பரபரப்பாக பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஊரில் போய் இறங்கிய மாதிரி தான் இருந்தது,அதற்குள் திரும்ப பயணம் கட்டும் நாள் வந்த பின்பு தான் மனதிற்கு உரைத்தது, என்ன இந்த நாடோடி வாழ்க்கை சே... என்று.

என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு முறை ஊரில் இருந்து கிளம்பும் பொழுதும் இஷ்டமில்லாமல் தான் கிளம்புவேன்.ஊரும் உறவும் எனக்கு எப்பவும் சலித்ததில்லை.நிதானமாக நின்று உட்கார்ந்து அளவளாவக் கூட நேரமில்லாமல் இந்த முறை அத்தனை பிஸியாக கழிந்துவிட்டன நாட்கள். இங்கு வந்த பின்பு அன்பான வலைப்பூ சொந்தங்கள், நட்புகள் என்னைக் காண ஓடோடி வந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

அதே மகிழ்ச்சியோடு திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தந்த இந்த SUNSHINE BLOGGER AWARD, தங்கை விஜி பார்த்திபன தந்த AWESOME BLOGGER AWARD இரண்டையும் உங்களோடு பகிர்ந்து கொளவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுது ஊரில் சென்ற, சுற்றி பார்த்த இடங்களைக் குறித்து உங்களோடு பகிர்வேன்.