Pages

Wednesday, 22 August 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் /Joyful Singapore - குதூகலப்பயணம்

பசுமை + பளிச் பளிச்.. - பகுதி 1

சிங்கப்பூரை நாங்க சுற்றிப் பார்க்க போய்வந்தது ஐந்தே நாட்கள், பம்பரமாய் சுழன்றன அந்த நாட்கள் என்று தான் சொல்ல வேண்டும். விடுமுறையில் இந்தியா சென்றிருந்த பொழுது இந்த பயணமும் சேர்ந்து கொண்டது. முறையான திட்டமிடல் இருந்ததால் குழப்பமில்லாமல் என்ன பார்க்க முடியுமோ அவற்றை திருப்தியாக பார்த்து விட்டு வந்தோம். சரியான திட்டமிடல் தான் ஒரு மகிழ்ச்சிகரமான பயணத்திற்கு அடிகோல் என்பதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் அருமையாக திட்டமிட்டு மகிழ்ச்சியானதாக அமைந்தது எங்கள் இந்த பயணம்.

சிங்கப்பூர் மிகச் சிறிய நாடு என்பதால் ஐந்து நாட்கள் போதும் என்று முடிவெடுத்தோம், ஆனால் அதன் அழகை சிலாகிக்க, தட்பவெட்ப சூழ்நிலையை அனுபவிக்க இன்னும் சிலநாட்கள் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது, எங்களுடைய அமீரக பாலைவன வாழ்க்கையில் இருந்து மாறுபட்ட சோலைவன வாழ்க்கை என்று சொல்லலாம்.

நாங்கள் நெல்லையில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வழியாக சிங்கப்பூர் சென்று அதே வழியில் திரும்பி வந்தோம்.நாங்கள் பயணம் செய்தது டைகர் ஏர்வேஸ்,இரவுப் பயணம் ஆதலால் நான்கு மணி நேரம் நன்கு தூங்கி விழித்து அதிகாலை புத்துண்ர்ச்சியுடன் சங்கி பட்ஜெட் டெர்மினல் சிங்கப்பூரை (Changi Budget Terminal – Singapore) சென்றடைந்தோம்.

இறங்கியவுடன் மனதை கொள்ளை கொண்ட ஒரு விஷயம் தமிழில் நல்வரவு என்ற பெரிய வரவேற்பு பலகையை பார்த்தது தான்.அதனை என் மகள் மொபைலில் கிளிக்கிக் கொண்டாள். இமிக்ரேஷனில் படிவம் நிரப்பும் பொழுது, ஒருவர் வந்து எங்களிடம் தன்னுடைய படிவத்தை நிரப்பி தரும் படி கேட்டார்.தன்னுடைய பெயர் சொக்கலிங்கம் என்றும் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிவதாயும் சொன்னார்.அவருக்கு உதவிய திருப்தியோடு எங்கள் வேலையும் முடிந்து வெளியே வந்தோம். அவர் தன்னுடைய தங்குமிடம் உத்திரகாளியம்மன் கோவில் என்ற முகவரியை சொன்னார்.தமிழில் இந்த முகவரியை கேட்டதும் பரிச்சயமான சூழலை உணர்ந்தோம்.. அதிகாலை வேளை ஏர்போர்ட் வளாகத்தில் இருந்த உணவகத்தில் இதமாய் காபி பருகிக் கொண்டோம். ஒரு காபி நம்ம ஊர் ஹோட்டலில் தரும் மூன்று காபிக்கு சமம். எங்கு சென்றாலும் நானும் அவரும் காபி டீ மற்றும் எது சாப்பிட்டாலும் ஆளுக்கு பாதி தான்.

விமானநிலைய வளாகத்தில் குப்பை போட இப்படி தெளிவாய் குப்பை தொட்டிகள்.

சங்கி விமானநிலயத்தின் ஒரு பகுதி

நாங்கள் சிங்கப்பூரில் உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும், உறவினருக்கு ஆபிஸில் முக்கிய வேலை வந்துவிட்டதால், டாக்ஸி பிடித்து நீங்களே வீட்டிற்கு வந்து விடுங்கள் என்றார். ஏர்போர்ட்டில் இருந்து அவங்க வீடு 15 கிலோமீட்டர் தொலைவில் செஙகாங் - புங்கோல்( Seng Kang – Punggol Road) இடத்தில் ரிவர்வேல் தெருவில் இருந்தது. ஏர்போர்ட்டின் இடது பக்கம் டாக்ஸிக்கு தனி வரிசையில் சென்று சிரமமில்லாமல் ஏறிக்கொண்டோம், பணிவான அந்த சீனக் காரோட்டி அன்பாய் எங்களிடம் விளக்கம் கேட்டு பத்திரமாய் வீட்டருகே கொண்டு சேர்த்தார். செல்லும் வழியெல்லாம் நாட்டின் பசுமையும் பளிச்சும் மனதை இதப்படுத்தியது. லேசான தூரல் மழை வேறு. வானுயர்ந்த அடர்ந்த மரங்கள், புல்வெளிகளைப் பார்க்கும் பொழுது இயற்கையன்னையின் தாராளத்தைக் கண்டு வியக்கத்தான் முடிந்தது. என் மனம் என்னையறியாமல் பாடியது.

வானத்தை பார்த்தேன்

பூமியைப் பார்த்தேன்

மனுஷனைப் பார்த்தேன்,

மண்ணை மட்டும் பார்க்கலையே!

அட புல்லை தானே பார்த்தேன்.

என்று பாடினேன். மண்ணிற்கு பதிலாக சிங்கப்பூர் முழுவதும் புல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அத்தனை பசுமை. தூசியில்லாத ஊர் எனலாம். மம்மி கிளம்பிட்டாங்கப்பா, கிளம்பிட்டாங்க! என்று எங்க வீட்டில் ஒரே கலாய்ப்பு.


நாங்கள் தங்கியிருந்த ரிவர்வேல் தெரு.

வழி எல்லாம் ரசித்துக் கொண்டு சென்றதில் காரோட்டி நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாய் தெரிவிக்க, நாங்களும் இறங்கிக் கொண்டோம். அடுக்கு மாடிக் கட்டிடங்கள் உள்ள பகுதி. எங்கள் உடைமைகளைக் கூட தூக்கவிடாமல் காரோட்டியே இறக்கி வைத்து சிரித்த முகத்துடன் விடைபெற்ற அந்த பண்பு ஆச்சரியப்படுத்தியது. உறவினர் வீடு ஒன்பதாவது மாடி, வீடு எங்களை எதிர் நோக்கி திறந்தே இருந்தது. மகிழ்ச்சியாய் வரவேற்று சிறிது அளவளாவி விட்டு குளித்து சூடாக சூப்பர் தோசை சிக்கன் குருமா, டீ சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தோம். அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் ஜும்மா தொழுகை, மாலை முதல் வெளியே கிளம்பலாம் என்று முடிவு செய்திருந்தோம். மதியமும் அருமையான பிரியாணி வகையறாக்களோடு விருந்து. ருசித்து சாப்பிட்டோம். ( சமையல் வலைப்பூ வைத்து விட்டு சாப்பாடு பற்றி சொல்லவில்லை என்றால் எப்பூடி?) பின்பு குழந்தைகளோடு அளவளாவல், சிறிய தூக்கம். வீட்டின் அமைப்பு அருமையாய் அமைதியாய் கண்ணிற்கு குளிர்ச்சியாய் இருந்தது. மாலை திட்டமிட்ட படி ஊர் சுற்ற கிளம்பினோம்.

- தொடர்ந்து ஊர் சுற்றி பார்க்கலாம்.

14 comments:

 1. Hope you had a nice time at Singapore Asiya akkaa! Looking forward for the next part! :)

  ReplyDelete
  Replies
  1. ஆர்வத்துடன் கூடிய முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி மகி.ஊரில் நேரம் எவ்வாறு போகிறது.எஞ்சாய்.:)!

   Delete
 2. இனிய பயண அனுபவத்தை பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  தொடருங்கள்... வாழத்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் சார் உங்களைப் போன்றவர்களின் வருகை தொடர்ந்து என்னை எழுத தூண்டுகிறது.மிக்க நன்றி.

   Delete
 3. mm பழைய நினைவு வந்து விட்டது/.ஹனீர் பிறந்த போது போய் வந்தோம் எங்கும் பசுமை, தீடீருன்னு ஜோன்னு மழை ஆனால் கொஞ்சம் நேரத்தில் மழை பெய்த சுவடே தெரியாமல் பளிச்சின்னு காய்ந்து வெயில்.

  அப்ப கொஞ்சமாக தான் போட்டோ எடுத்தோம்.

  மீதியையும் தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஜலீலா வருகைக்கு மகிழ்ச்சி. உங்களுக்கும் நல்லவொரு அனுபவமாக இருந்திருக்கும்.வருகைக்கு நன்றி.

   Delete
 4. அழகான பயண கட்டுரை.. தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. சிநேகிதி மிக்க நன்றி, மகிழ்ச்சி.

   Delete
 5. அழகான நாட்டுக்கு அருமையான பயணம். வாழ்த்துகள்.
  பயணக்கட்டுரை தொடரட்டும். பாராட்டுக்கள். அன்புடன் vgk

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் வை.கோ சார்.

   Delete
 6. முழுவதையும் சீக்கிரம் எழுதி முடிச்சிருங்க, படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நல்லது இமா.முயற்சிக்கிறேன்.:)!

   Delete
 7. கருத்திற்கு வருகைக்கு நன்றி ராமலஷ்மி, மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete