Pages

Friday, 28 September 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் - பகுதி -5 -தொடர்ச்சி

முற்பகுதி பார்க்க இங்கே கிளிக்கவும்.


Song of the Sea  பார்க்கும் நேரம் நெருங்கியதால் அதற்கு விரைந்தோம், சிறிது காத்திருந்தோம், கூட்டம் நிரம்பி வழிந்தது, இருட்ட ஆரம்பிக்கவும் ஷோ ஆரம்பித்தது. மிகவும் ரசித்து மகிழ்ந்தோம்.

நாங்கள் காத்திருந்த பொழுது கிளிக்கிய படம் இது, இந்த இடத்தில் அப்படி என்னதான் அதிசயமான ஷோ என்ற எங்களுடைய எதிர்பார்ப்பு  வீண் போகவில்லை.
நாங்கள் எடுத்த வீடியோவை கஷ்டப்பட்டு எடிட் செய்து எத்தனை முறை முயன்றும் கூகிளில் அப்லோட் செய்ய முடியலை  இந்த தடவை, எனவே கீழ்கண்ட யுடியூப் லின்க்கை கண்டு மகிழுங்க..நிச்சயம் முழுவதும் பாருங்க..வித்தியாசமான  மியூசிகல் ஃபவுண்டெய்ன் ஷோ. உலகத்திலேயே இந்த கடற்கரையில் மட்டும் தான் நிரந்தரமாக பல மில்லியன் டாலர் செலவில்  ஷோவை பயணிகளைக் கவருவதற்காக அமைத்திருக்கிறார்கள். இதில் லேசர், பய்ரோ டெக்னிக்ஸ், வாட்டர் ஜெட்ஸ், ப்லேம்ஸ், அனிமேஷன், லைவ் மியூசிக் என்று அசத்தலாக இருந்தது. கண்கொட்டாமல் பார்த்து ரசித்து மகிழ்ந்த ஒரு நிகழ்வு.
ஷோ முடித்து விட்டு அப்படியே மெதுவாக நடந்து வந்து மோனோ ரெயில் ஏறி மீண்டும் ஹார்பர் ஃப்ரெண்ட் வந்தடைந்தோம்.அங்கு எங்களுக்கு பிடித்த டோஸ்ட் பாக்ஸ் ரெஸ்டாரண்டில் கொஞ்சம் அமர்ந்து ரெஃப்ரெஷ் செய்து விட்டு அப்படியே ஃபுட் ரிபப்ளிக்கில் அவரவருக்கு பிடித்தத்தை வாங்கி இரவு உணவை முடித்துக் கொண்டோம்.

ஃபுட் ரிபப்ளிக்கில்..ப்ரான் ஃப்ரை,டோஃபு ஃப்ரிட்டர்ஸ் அருமை..

டோஸ்ட் பாக்ஸ் ரெஸ்டாரண்ட்டில் டீ, ப்ரெட் டோஸ்ட்  நூடுல்ஸ் வகைகள் நல்லாயிருந்தது.

 ஆரோக்கியமான சைனீஸ் சிக்கன் ஃப்ரைட் நூடுல்ஸ்- வேக வைத்த கீரை, சிக்கன், வேக வைத்த நூடுல்ஸ் ..நமக்கு காரம் தேவை என்றால் தேவைக்கு சேர்த்து கொள்ள கார்லிக் சில்லி தொக்கு (சுவை அபாரம்) சில்லி சாஸ்,சோயா சாஸ், சிக்கன் கிளியர் சூப்போடு தருகிறார்கள் (ஒன்லி 6 சிங்கப்பூர் வெள்ளி தான்..


டோஸ்ட் பாக்ஸில் வேலை செய்யும் இந்த தாத்தாவிற்கு 80 வயதிற்கும் மேல் இருக்கும், அந்த வயதிலும் தட்டு கழுவி டேபிள் சுத்தம் செய்து கொண்டிருந்தார். நாங்கள்  சென்ற மூன்று முறையும் அவரைப் பார்த்தோம். சரி அவருக்கு ஏதாவது டிப்ஸ் கொடுக்கலாம் என்று 5 வெள்ளி கொடுத்தோம், அவர் வாங்க மறுத்து போட்டோவிற்கு மட்டும் போஸ் கொடுத்தார்.ஆச்சரியமாக இருந்தது.

அங்கிருந்து  மீண்டும் எம் ஆர் டியில் செங்காங் வந்தடைந்தோம். மறுநாள் செண்டோசா தீவில் இருக்கும் யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு போகும் திட்டம் இருந்ததால் எப்படா வீடு வந்து சேர்வோம், கண் அயரலாம் என்று வந்த எங்களை நாங்கள் வரும் வரை தூங்காமல் காத்திருந்த குட்டீஸைப் பார்த்தவுடன்  களைப்பெல்லாம் பறந்து விட்டது, அவர்களோடு சிறிது நேரம் கழித்து விட்டு கண்ணை மூடியது தான் தெரியும், அப்படியொரு நிம்மதியான தூக்கம் கண்களைத் தழுவியது...Monday, 24 September 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் - பகுதி -5 - அடேங்கப்பா...!


மூன்றாம் நாள் காலை வழக்கம் போல் விரைவாக செண்டோசா தீவு போவதற்கு ரெடியானோம். காலையில் தம்பி வீட்டில் அருமையான வெஜ் சாலட் மிக்ஸ் வித் டோஸ்டட் ப்ரெட் ரெடியாக இருந்தது, யம்மி. வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் MRT  ஸ்டேஷன் இருந்தது. ஏற்கனவே எங்களிடம் இரயில், பஸ் பாஸ் அவர்கள் தந்து இருந்ததால் செண்டோசா செல்வதற்காக ஹார்பர் ஃப்ரண்ட் என்ற ஸ்டேஷன் சென்றோம்.


தம்பி வீட்டில் சாப்பிட்ட மெக்டொனால்ட் ப்ரேக்ஃபாஸ்ட் உங்களுக்காக..என் மகளுக்கு பிடித்த மாதிரி தினமும் ப்ரேக்ஃபாஸ்ட் ..ஒவ்வொரு நாளும் எங்களை பார்த்து பார்த்து கவனித்ததை மறக்க முடியவில்லை ...:)))))) ..
செண்டோசா ஸ்டெஷனில் இருந்து மோனோ இரயிலில் ,மெர்லையன் ஸ்பாட், கேபிள் கார் ரைடும், அண்டர்வாட்டர் வேர்ல்ட் இன்னும் பல இயற்கை காட்சிகளும் இந்த வீடியோவில் இருக்கு. எத்தனை அழகாக நம்மை தமிழில் வரவேற்கிறாங்க பாருங்க..
ஆங்காங்கு இப்படி பலகை வைத்து நமக்கு மலாய் சொல்லி தராங்க.

அங்கு  செண்டோசா டிக்கெட் கவுண்டர் போய் நாங்கள் முதலில் செண்டோசா மோனோ ரெயிலுக்கு டிக்கெட்டும், பின்பு SONG OF THE SEA  டிக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டோம்.(அதற்கு தீவில் டிக்கெட் கிடைக்க சிரமமாக இருக்கும் என்பதால்) மற்றவற்றிற்கு செண்டோசா தீவில் சென்று  வாங்கிக் கொள்ளலாமாம், டிக்கெட் கவுண்டர் பக்கம் இருக்கும் FOOD REPUBLIC – கில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டோம்.

மோனோ ரெயிலில் செண்டோசா தீவின் அழகை ரசித்துக் கொண்டே  போய் பிரமாண்டமான மெர்லையன் சிலை (வீடியோவில்,முதல் புகைப்படத்தில் பார்த்திருப்பீங்க) பக்கம் இறங்கிக் கொண்டோம்.அங்கு நீர்வீழ்ச்சிகளின் அழகை பார்த்துக் கொண்டே நிற்கலாம். செண்டோசா தீவில் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கு, இதனை மூன்று பகுதியாக பிரித்திருக்கிறார்கள், ஒவ்வொரு பகுதியையும் சுற்றி பார்க்க திறந்த பஸ் ஓடிக்கொண்டேயிருக்கு. பஸ்ஸில் ஏறி சுற்றி பார்க்க கியூவில் நின்று ஏற வேண்டும், நடந்து நடந்து சுற்றி பார்ப்பது சிரமம் என்பதால் அங்கங்கு பஸ்ஸில் ஏறியும் சுற்றி பார்த்தோம். 

முதலில் கேபிள் காருக்கு டிக்கட் வாங்கி அதனில் ஏறி சுற்றி விட்டு வந்தோம், மிக அழகாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. கேபிள் காரில் ஒரு பக்கம் கிளம்பி மறுபுறம் இறங்கி கொஞ்சம் ரிஃப்ரெஷ் செய்யலாம்.ஃப்ரெஷ் ஜூஸ் தந்தார்கள் .திரும்ப ஏறிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம். 

4டி மேஜிக்ஸ் பார்த்தோம். த்ரில்லாக நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று. முடித்து வெளியே வந்தோம், மழை வேறு தூறிக் கொண்டிருந்தது.
ஆங்காங்கே ரெஸ்டாரண்ட் இருந்தது, அந்த வேளையில் மதிய உணவை முடித்து விட்டு,ஒரு ட்ராம் ரைட் போனோம். நேச்சர் வாக் போகும் பொழுது மழையும் தூறலும் ஆஹா.கையில் குடையிருந்ததால் பிடித்துக் கொண்டு அட்டகாசம் தான். பட்டர்ஃப்லை பார்க்,அப்படியே நடந்து சென்றால் அழகான வண்ண வண்ண கிளிகள் கையில் வைத்து படம் எடுக்க 20 சிங்கப்பூர் வெள்ளி கொடுத்தால் போட்டோ எடுக்கலாம். இது மாதிரி ஆங்காங்கு கேமரா வைத்துக் கொண்டு ஆட்களைப் பார்க்கலாம். 10 அல்லது 20 சிங்கப்பூர் டாலர் கொடுத்தால் கையில் சுடச் சுட விரும்பிய இடத்தில் விரும்பிய வண்ணம் புகைப்படங்கள் எடுத்து தருவார்கள்.

இந்த வீடியோ டால்ஃபின் ஷோவின் போது எடுத்தது. நீங்கள் முழுதும் பார்த்த திருப்தி கிடைக்கும்.


டால்ஃபின் ஷோவில் இந்த ஷீல்ஸ் செய்த அட்டகாசத்தை வீடியோவில் பார்த்திருப்பீங்க..

மதியம் திட்டப்படி அண்டர் வாட்டர் வேர்ல்ட், டால்பின் ஷோ பார்த்து மகிழ்ந்தோம். துபாய் அட்லாண்டிஸ் அக்வேரியம் ஏற்கனவே பார்த்திருந்ததால் எங்களுக்கு சிங்கப்பூர் அண்டர் வாட்டர் வேர்ல்ட் சுமாராகத் தான் தெரிந்தது. அடுத்து சிலோசா பீச் பக்கம் போனோம், அங்கும் என்னால் நடக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் ஒப்பன் பஸ்ஸில் பீச் ஓரம் ஒரு ரைடு. மாலை வேளையில் காற்று முகத்தில் அடிக்க பஸ் வேகமாக போகும் பொழுது கடற்கரையின் அழகு மனதிற்கு மிக இதமாக இருந்தது.

Song Of the Sea பார்ப்பதற்காக விரைந்தோம். கூட்டம் வேறு அலைமோதியது..இருட்டும் வரை காத்திருந்தோம்...
அடுத்தப் பகிர்வில்...


Sunday, 16 September 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் / பகுதி -4 -ஒளியும் ஒலியும்

ஆங்.. எதில் விட்டேன், நைட் சஃபாரியில் ட்ராமில் ஏறி உட்கார்ந்தோமா? ட்ராம் கிளம்பியது கேமராவில் ஃப்லாஷ்க்கு தடை, அதனால் படம் எடுக்கும் வேலை இல்லை.எனவே வீடியோவை ஆன் செய்தோம், இரவில் வனவிலங்குகளை மரங்கள் அடர்ந்த காட்டில் சென்று பார்ப்பது நமக்கு மிகவும் பிரமிப்பு,குழந்தைகளுக்குப் பயம். இயற்கையாக இரவில் வனவிலங்குகள் உள்ள காடு வழியாக பயணம் செய்தால் எவ்வாறு ஒலி,ஒளி இருக்குமோ அப்படியே அச்சுறுத்தும்படி இருந்தது.

ட்ராம் ஸ்டேஷனில் ட்ராம் வந்து காலியாக நின்ற பொழுது...
ட்ராமில் பதிவு செய்யப் பட்ட ஒலி நாடாவில் கைடு விளக்கம் தர மெதுவாக ட்ராம் நம்மை அழைத்துச் சென்றது. இடையில் சலசலத்து ஓடும் நீரோடைகள், சில்வண்டுகளின் ஓசைகள், தவளை சத்தம், விலங்குகளின் உருமல்கள் என்று அனைத்து அனுபவமும் நம்மை எதிர்கொண்டது. இடையில் இறங்கி கால்நடையாக வனத்திற்குள் நடந்தும் விலங்குகளைப் பார்க்கலாம். நாங்கள் சென்றது சனிக்கிழமையாதலால் வார இறுதி விடுமுறைக் கூட்டம் நிறைய இருந்தது எனவே வரிசையில் நின்று ட்ராமில் ஏறுவதற்கே நேரம் ஆகிவிட்டது, காத்திருந்த நேரத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டோம். அத்துடன் விலங்குகளின் லைவ் ஷோ (இரவு9.30 மணிக்கு) பார்க்க வேண்டும், ஆதி வாசிகள் நெருப்போடு விளையாடும் நடனமும் காண வேண்டுமே என்ற ஆவலில், ட்ராமில் இருந்து இறங்காமலேயே வனத்தை ட்ராமிலேயே சுற்றி அனைத்து விலங்குகளயும் கண்டு ரசித்தோம்.
அங்கிருந்து நேரே லைவ் ஷோ. முதல் வரிசையில் உட்கார இடம் கிடைத்தது. ஒவ்வொரு விலங்குகளூம் இங்கும் அங்கும் ஓடியும் விளையாடியும், வித்தைகள் காட்டியும் மகிழ்வித்தது. மேகி என்ற மலைப்பாம்பு தீடீரென்று காணாமல் போய் பார்வையாளர்கள் மத்தியில் வந்து விட்டதாக பீதியை கிளப்பி, பின்பு அந்த பெரிய பாம்பை மக்கள் மத்தியில் இருந்து பிடித்து வந்து, பார்வையாளர் ஒருவரை அழைத்து அவர் தோளில் போட்டு விட்டு விளக்கெல்லாம் அணைத்து, அனைவரும் மேடையில் இருந்து மறைந்த காட்சி பீதியை கிளப்பி பெருத்த கரகோஷத்தையும் ’’வும் போட வைத்தது.
ஷோ முடியவும் அடுத்து, மட மடவென்று ஆதிவாசிகள் நடனம் காண விரைந்தோம். கூட்டம் நிரம்பிவிட்டது எனவே பக்கவாட்டில் நின்றவாறே கண்டு களித்தோம். நைட் சஃபாரியின் ஹைலைட் இந்த ஷோ எனலாம்.பின் வரும் வீடியோவில் சில கிளிப்ஸ் இருக்கு.
அந்த பிந்திய இரவு வேளையில் பலர் கூட்டம் அலை மோதும் உணவு விடுதிகளில், ஃபிஷ் ஸ்பா என்றும், ஷாப்பிங் என்றும் பிஸியாக இருந்தார்கள் .டாக்ஸிக்காக பலர் வரிசையில் காத்திருந்தார்கள். நாங்கள் மறுநாளும் சுற்ற வேண்டியதிருந்ததால் கிளம்பிவிட்டோம்.
என் கணவரின் நண்பர் அந்த இரவு வேளயிலும் அவர் காரில் எஙகள் இருப்பிடத்தில் கொண்டு விட்டு விட்டு சந்தோஷமாக அடுத்த சந்திப்பை குறித்து விட்டுச் சென்றார்கள்.

வீடியோ எடுத்ததைப் பகிரலாம் என்று எடிட் செய்ய ஆரம்பித்தால் அத்தனையும் கும்மிருட்டாகாவே இருந்தது, எப்படியிருந்தாலும் சரி என்று தான் இந்த சின்னப் பகிர்வு. நாங்கள் பார்த்ததை எல்லாம் பகிர முடியாவிட்டாலும் இந்தப் பகிர்வைப் பாருங்க.
விரைவில் சந்திப்போம்...!
முந்திய பகிர்வுகளை வாசிக்க கிளிக்கவும்.

பகுதி - 1


Sunday, 9 September 2012

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் - பகுதி-3 - மழையோ அன்பு மழை!


எங்களின் இரண்டாம் நாள் சிங்கப்பூரில் இனிதே விடிந்தது. அன்றைய நாள் ப்ரோகிராம் படி City Sight Seeing , Zoo, Night Safari என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதில் சிறு மாற்றம் வந்தது, என் கணவரின் பள்ளிக்கூட கடலூர் நண்பர் அன்றைய நாளை எங்களோடு கழிக்க விரும்பி மதியம் விருந்திற்கு அழைத்திருந்தார். சரி என்று சிட்டி டூர் முடித்து விட்டு அவர்கள் வீடு செல்லலாம் என்று ஜூவை ஒத்தி வைத்தோம்.

வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது எப்ப வேண்டுமானாலும் மழை பெய்யும், ஆளுக்கொரு குடை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அத்துடன் இரயில்,பஸ் பயணத்திற்கான கார்டும் தந்ததால் சிங்கப்பூரில் எங்கள் போக்குவரத்து மிக இலகுவாக சிரமமில்லாமல் இருந்தது.கிளம்பும் பொழுதே சிலு சிலுவென்று அழகான தூறல். ரசித்தவாறு பஸ்ஸில் சென்று சிட்டி டூர் கிளம்பும் ஸ்பாட்டை அடைந்தோம்.

அங்கு இருந்த ரெஸ்டாரண்ட் யாகுன் காயாடோஸ்ட் மிகப் பிரசித்தம், அங்கு கொஞ்சம் ரெஃப்ரெஷ் செய்தோம். அங்குள்ள காயா டோஸ்ட் ,ஹார்லிக்ஸ் ஃப்ராஸ்டி மிக அருமை.ஊர் வரும் வரை மூன்று முறை அதனை ருசித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.வீட்டில் வந்து இந்த இரண்டு ரெசிப்பியும் ட்ரை செய்தும் பார்த்தாச்சு.அந்தளவிற்கு வர நம்ம என்ன யாகுன்னா என்ன?


அங்கிருந்து கிளம்பும் பொழுது மழை விட்டிருந்தது. எங்களோடு பயணிக்க அன்று ஒரு பிரிட்டிஷ் தம்பதியினர் மட்டுமே இருந்தனர். மொத்தம் ஆறு பேரே உள்ள பஸ் டிரைவர் ( மிக வயதானவர்) வர, நாங்களும் அவரைத் தொடர்ந்து சென்றோம். டிரைவர் ஏறி அமர்ந்தார், நாங்கள் பின்னால் அவர் நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடித்தான் சென்றோம். நாங்கள் ஏறினோமா உட்கார்ந்தோமான்னு கூட கவனிக்காமல் வண்டியை எடுத்தார். பஸ்ஸில் மேல் தளத்தில் திறந்த வெளியில் அமரலாம் என்று படியேறும் பொழுதே பஸ் நகரத் தொடங்கி விட்டது. சமாளித்து சென்று விரைவாக அமர்ந்தோம். வயதான அந்த ட்ரைவர் அத்தனை சுறு சுறுப்பு.

ஏறி மேல் தளத்திற்கு சென்று திறந்த வெளியில் அமர்ந்தால் மழை தூர ஆரம்பித்து விட்டது.

நல்ல மழையுடன் ஊர் சுற்றல்.அதுவும் ஒரு செம அனுபவம். திரும்ப பலமுறை நகரை வலம் வந்தது வேறு விஷ்யம்.

பஸ் நகர ஆரம்பிக்கவும் மழை நன்றாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. கைடு உதவியுடன் அனைத்து இடங்களையும் கண்டு களித்தோம். கிட்டதட்ட ஒரு மணி நேரம் நகரை வலம் வந்திருப்போம். சிங்கப்பூர் ஃப்ளையரில் இருந்து கிளம்பி வழியில் மெரினா பே சாண்ட்ஸ், எஸ்ப்லானட் மால்,மெர்லைன்( அதிர்ஷட சின்னம்) பார்க், ஃபெஸ்டிவல் மார்க்கெட், கிரீதா ஐயர் ரோடு- சைனா டவுண், புத்தர் கோவில், ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜாமியா மஸ்ஜித், மாடர்ன் சிங்கப்பூர்கிளார்க் குவெ , பொட்டானிக்கல் கார்டன், ஆர்ச்சட் ரோடு, லிட்டில் இந்தியா, ரஃபில்ஸ் ஹோட்டல்,சன் டெக் சிட்டி என்று ஒரு வலம் வந்து திரும்ப கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம்.வழியில் சில வான் உயரக் கட்டிடங்கள் பார்த்தாலும் எங்களுக்கு பிரமிப்பாக இல்லை, ஏனெனில் துபாய், அபுதாபியில் வாயைப் பிளந்து ஆன்னு பார்க்கும் வானுயர கட்டிடங்களின் அணிவகுப்பு இருக்கும்.

நீங்களும் அப்படியே வீடியோவில் சிங்கப்பூரை சுற்றி பாருங்க, எல்லா முக்கியமான இடங்களும் இதில் பகிர்ந்திருக்காங்க.
நானும் இவர் நாங்கள் எடுத்த வீடியோவை எடிட் செய்து தருவார், போடலாம் என்று இருந்தேன், அது பெரிய வேலை இப்ப முடியாது என்றதால் இந்தப் பகிரல். எனக்கும் நான் பார்த்த இடங்கள் மறந்து போகும் முன் பதிவு செய்தாக வேண்டுமே!

மதியம் விருந்திற்கு அவரின் நண்பர் வீடு சோச்சுகாங் (Chou Cho Kang- Residential Area) பகுதிக்கு போக வேண்டும். டாக்ஸி பிடித்து சென்றோம். மீண்டும் நகர் உலா. ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் அதன் பசுமையும் தூய்மையும் சலிக்காது. தூசி இல்லை, சுத்தமாக இருக்கு,மக்களின் சுறு சுறுப்பு, இது தான் எனக்கு சிங்கப்பூரில் மிகவும் பிடித்த விஷயம். கார்களில் பறப்பதைக் காட்டிலும் மக்கள் இங்கு சைக்கிள்களில் பறக்கிறார்கள். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வசதி மிக அருமை. எங்கும் எதிலும் ஆட்டோமேஷன். அரைமணி நேரத்தில் சோச்சுகாங் போய் சேர்ந்தோம். இயற்கை மழையில் நனைந்தது போதாது என்று அங்கு அன்பு மழை. எங்களுக்காக ஒரு கெட்டுகெதர் ஏற்பாடு செய்திருந்தாங்க. மிக அருமையான விருந்து. அப்புறம் பக்கத்தில் இருந்த நண்பரின் சகோதரர் வீட்டிற்கு சென்றோம். அங்கு சென்று இளைப்பாறிவிட்டு மாலையும் விருந்தோம்பல் முடிந்து வெளியே கிளம்பினோம்.

விருந்து சாப்பிட்டு முடிந்தவுடன் தான் நினைவு வந்தது,அவசரமாக கிளிக்கியது.


ஏழு மணிக்கு மேல் தான் நைட் சஃபாரி, சரி அதுவரை லிட்டில் இந்தியா சென்று வரலாம் என்று முடிவெடுத்து, அங்கே சென்றோம். அப்படியே ஒரு கண்ணோட்டம், நம்ம ஊர் உணவகங்கள், முஸ்தபா ஷாப்பிங் செண்டர் என்று ஒரு உலா, இரவு உணவையும் நம்ம ஊர் உணவகத்தில் பார்சல் வாங்கி விட்டு நைட் சஃபாரிக்குப் புறப்பட்டோம். அன்று முழுவதும் நண்பரின் அன்பு கவனிப்பில் திக்குமுக்காடிப் போனோம்.

கியூவில் நின்று டிக்கட் வாங்கி, பின்பு அங்கும் அவர்களுடன் ஒரு ரவுண்டடித்து விட்டு,விண்டோ ஷாப்பிங் சென்றோம். ட்ராம் வரவும் நாங்கள் ஏறி அமர்ந்தால், கும்மிருட்டு, கிளம்பினோம்...

Tuesday, 4 September 2012

2C

ஊர் சென்று திரும்பி வந்து அலமாரியை ஒதுங்க வைத்த பொழுது தான் அந்தக் கட்டுக்கடிதங்கள் என் கண்ணில் பட்டது. ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றன நினைவுகள்.

நான் நினைத்து கூடப் பார்க்காத அந்தப் பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஒரு சிறிய கதை எனலாம்.

அபுதாபியில் எங்கள் வீடு இருந்த இடம் சுற்றி பள்ளிக்கூடங்கள் வரிசையாக இருக்கும். எதிர் வீட்டு சிந்து டீச்சர், ஆசியா சும்மா தானே வீட்டில் இருக்கீங்க, எங்க ஸ்கூல் பக்கத்தில் தானே இருக்கு, வந்து சிவியை கொடுங்க, கூப்பிட்டால் வாங்க, என்றவுடன், எனக்கும் ஆசை மனதில் துளிர்விட ஆரம்பித்தது. இவரிடம் சொல்லி அனுமதி பெற்று, சிவியையும் கொடுத்து விட்டு வந்தேன், கொடுத்த ஒரு வாரத்தில் அழைப்பு வந்தது, கையும் ஓடலை, காலும் ஓடலை, ஸ்கூல் ப்ரின்சிபல் சொன்ன ஒரே வாக்கியம், உங்க குவாலிபிக்கேஷன் பிரச்சனை இல்லை, நீங்க எப்படி பிள்ளைகளை நிர்வகிக்கிறீங்க எனபதை நாங்க 15 நாட்கள் கவனித்து நீங்கள் வேலையில் தொடர்வதை முடிவு செய்து தெரிவிப்போம் என்றபொழுது என்னால் நம்ப முடியவில்லை. என்னை முதலில் பாடம் எடுக்க சொன்னது 4, 5 வகுப்புகளுக்கு Social Studies ,பெரிய பிள்ளைங்க தானே சமாளித்து விடலாம்னு சரி என்று வகுப்பறைக்கு சென்ற பின்பு தானே தெரிந்தது ஆசிரியப்பணி எத்தனை சிரமமானது என்று. காலையில் 7.50 மதியம் 1.50 வரை பள்ளி நேரம். எங்க வீட்டில் பிள்ளைங்க காலை 6.30 மணிக்கும், அவர் 6.45 க்கும் கிளம்பிடுவாங்க, மதியம் என் பிள்ளைகள் திரும்ப 2.15 மணிக்கு வந்ததால் எனக்கு வேலைக்கு போய் வந்தது இலகுவாகவே தெரிந்தது, பள்ளிக்கூடமும் ஐந்து நிமிட வாக்கிங் தான்.

என் பணியில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு தொடரலாம்னு பச்சைக் கொடியை காட்டினாங்க. நான் ஆசிரியையாக மகிழ்ச்சியாகவே பவனி வந்தேன். மூன்று மாதம் கழித்து என்னை அழைத்து, நீங்க இப்படியே தொடர்வது பிடித்திருக்கிறதா? என்று கேட்ட பொழுது, அறிவியல் பாடம் எடுக்கவே விருப்பம் என்று தெரிவித்தேன், அவர்களும் என்னை 2C வகுப்பாசிரியையாக போட்டு 2,3,4 வகுப்புகளுக்கு அறிவியல் பாடம் எடுக்கும் படி சொன்ன பொழுது மிக சந்தோஷமாக இருந்தது. விபரத்தை சிந்துவிடம் சொன்ன பொழுது, 2 C யா? அது வாலுங்க உள்ள வகுப்பாச்சேன்னு சொன்னாங்க, நான் சமாளித்து விடுவேன் என்று உள்ளே நுழைந்த பின்பு தான் தெரிந்தது அந்த குழந்தைகளின் சுட்டித்தனம், தினம் ஒரு பிரச்சனை நான் ப்ரின்சிபல் ரூமிற்கு செல்லாத நாளே இல்லை எனலாம். ஆனாலும் ஆண்டு இறுதியில் இரண்டாம் வகுப்பில் 2C தான் OVER ALL PROFICIENCY AWARD வாங்கி என்னை பெருமைபடுத்தினார்கள்.


இந்த மடல்கள்
2c மாணவ மாணவிகள் எனக்கு அன்பாக தந்தது. என்னைப் பற்றி எனக்கே தெரியாத பல விஷயங்களை எழுதி ஆச்சரியப்படுத்தியிருந்தார்கள்.


வருட இறுதியில் அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு அன்பாய் தந்த மடல் இது.

அந்தக் குழந்தைகள் எனக்கு எழுதிய அன்பு மடல்கள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் இந்த ஆசிரியர் தினத்தில் பெருமைப்படுகிறேன். என்னிடம் அந்த வயதில் அவர்கள் எதிர்பார்த்தது ஒரு தாயாக தோழியாக பழக வேண்டும் என்பதைத் தான், அதனைப் புரிந்து செயல்பட்டதால் எனக்கும் வெற்றி கிடைத்தது. அந்தக் குழந்தைகள் அன்பில், அந்த வருடம் ( 06-07) திக்கு முக்காடிப் போனேன் என்று தான் சொல்ல வேண்டும்.

அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் அன்பான ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.