Pages

Wednesday, 28 November 2012

பெண்ணியம் ??? ! ! !

பல மாதங்களுக்கு முன்பு அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டிக்கு நான் எழுதி அனுப்பியது தான் இது. கட்டுரை எல்லாம் எழுதி அதிக பழக்கமில்லை.சின்ன வயதில் எங்கு பேச்சு போட்டி என்றாலும் சென்று கலந்து கொள்வது வழக்கம். அதனால் என்னோட கட்டுரை கூட பேசுவது போல் தான் இருக்கும்.

தலைப்பு  பெண்ணியம் எனது பார்வையில் - கொஞ்சம் கஷ்டமானது தான், முடிவு தெரிவிக்கும் பொழுது விழாவில், அமீரகத்தில் இருந்து வந்த மொத்த 20 கட்டுரைகளுமே பெண்ணியம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளாமல் எழுதப் பட்டிருப்பதாய் தெரிவித்தார்கள். அடடா,  இது கூட தெரியவில்லையேன்னு நம்ம வலையுலக தோழிகள் கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா, முத்துச்சரம் ராமலஷ்மி, எல்லாப் புகழும் இறைவனுக்கே ஸாதிகா  ஆகியவர்களுக்கு என் கட்டுரையை அனுப்பி கருத்து தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன்.அவர்களும் தங்கள் பார்வைகளை தெரிவித்து இருந்தார்கள். என்னுடன் அவர்கள் மெயிலில் பகிர்ந்த கருத்துப் பரிமாற்றம்  மிக ஆரோக்கியமானதாக இருந்தது.

இனி கட்டுரை:


ஆதியில் இறைவன் ஆதாமைப் படைத்து அவனுக்கு துணையாக ஹவ்வாவை  (ஏவாள்) அவன் விலா எலும்பில் இருந்து படைத்தது உலகமே அறியும். பெண் என்பவள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை அமையப் பெற்றவர்களாய் இருக்க வேண்டும் என்று பண்டைக்காலத்தில் எழுதப் பட்ட உண்மை. பெண்கள் மென்மையானவர்கள் என்று தொன்று தொட்டே விளங்கி வருவதில் எந்த மாற்றமும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. பெண்ணியம் பற்றி வாய் கிழிய பேசும் பெண்கள் கூட இதில் இருந்து தப்ப முடியாது.

பெண்ணியம் என்பது பலராலும் எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது?.
ஆணிற்கு பெண்  சமம், ஆணிற்கு இருக்கும் சுதந்திரம், உரிமை  பெண்ணிற்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுமானால் சுருக்கமாகச் சொல்லலாம்.

என் மனதில் எழும் கேள்விகள்:
ஆணைப் போல் பெண் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தனியாக உலா வர முடியுமா? இதற்கு இந்த சமூகத்தில் பாதுகாப்பு இருக்கா?
இன்னமும் நம் நாட்டு சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் 33 சதவிகிதத்தையே கேட்டுத் தானே போராடுகிறோம். எங்கிருந்து நமக்கு சரி சமம் கிடைக்கும். நாம் கேட்காமலே அவர்கள் தந்திருக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் பெண்கள் தாமாகவே முன் வந்து தங்கள் உரிமைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இது தான் நிதர்சனம்.
எல்லாவற்றிலும் உரிமை கோரும் பெண்களே! எங்காவது சுந்தரம் & டாட்டர்ஸ், பாத்திமா & டாட்டர்ஸ் இப்படி போர்டு பார்த்திருக்கிறீர்களா?
சுந்தரம் & சன்ஸ் இருக்கலாம். பாத்திமா& சன்ஸ் என்று  பார்ப்பது கூட அரிது.
அப்புறம் இன்னொன்று சொல்கிறேன், ஆண் ஸ்டவ் வெடித்து இறப்பு, மாமியார் மருமகன் கொடுமை என்று கேள்வி படுவது என்பது நடக்காத காரியம். நிச்சயம் பெண் தான் ஸ்டவ் வெடித்து இறப்பாள், பெண் தான் கொடுமைக்கு ஆளாவாள். வீட்டை விட்டு துரத்துவாங்க, இந்த விஷயம் இப்படி இருக்கும் பொழுது நாம் எங்கிருந்து உரிமைக்காக போராடுவது?  பொதுவாக திருமணம் முடிந்து பெண் தான் ஆண் வீட்டிற்கு செல்வது வழக்கம், ஒரு சில இடங்களில் வேண்டுமானால் ஆண்கள் பெண் வீட்டிற்கு, வீட்டு மாப்பிள்ளையாய் வருவதும் நடைமுறையில் இருக்கிறது. பெண் விரும்பிய இடத்தில் இருந்து கொள்ளலாம் என்று வழக்கத்தை கொண்டு வர முடியுமா? நிச்சயம் திருமணம் ஆனால் ஆண் விட்டிற்குத் தான் போயாக வேண்டும்.

பெண்கள் ஈமக்கிரியைகள் செய்து பார்த்திருக்கிறீர்களா? கொள்ளி போட ஒரு ஆண் பிள்ளை வேண்டும் என்று கேட்கிற பெண்களை நாம் சமுதாயத்தில் காணவில்லையா? எங்காவது ஒன்றிரண்டு பெண்கள் பெற்றோரின் இறுதிக் கிரியைகளைச் செய்ததாக கேள்விபட்டதுண்டு.
பெண்ணை, ஆண் அடிமைப் படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும், பெண்ணே பெண்ணை அடிமைப்படுத்தலும் நடக்கத்தானே செய்கிறது. பெண்களே பெண்கள் முன்னேற்றத்திற்கு தடைக் கற்களாக இருப்பதை எத்தனை இடங்களில் பார்த்திருக்கிறோம்.
எங்கிருந்து பெண்ணியம் தலை தூக்க முடியும்?

பெண் என்பவள் திருமணத்திற்கு முன் தந்தை, உடன் பிறந்த சகோதரர்களைச் சார்ந்து வாழ்கிறாள். திருமணத்திற்கு பின் கணவரைச் சார்ந்து வாழ்கிறாள். தன்னிச்சையாக இயங்கும் எல்லாப் பெண்களையும் இன்னும் இச்சமுதாயம் ஏளனமாகத்தான் பார்க்கிறது. இது தான் உண்மை. அவள்  ஆணைச் சார்ந்தே வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள், தள்ளப்படுகிறாள்.

அந்தக் காலத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என்ற பிணைப்புடன் கூடிய அமைப்பு இருந்தது. பெண்ணின் தியாகத்தால், அயராத உழைப்பால்  வெற்றியடைந்த ஆண்கள் அதிகம். ஆணிற்கு பின்பலமாக பெண் இருந்து வந்தாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போல சில வெற்றியடைந்த பெண்கள் பின்னால் ஆண்களும் இருக்கிறார்கள்.
ஆண் உதவி இல்லாமல், தானே போராடி வெற்றி பெற்ற பெண்களைத்தான் சாதனைப் பெண்கள் என்கிறோம். சாதனை ஆண்கள் என்று எங்காவது கேள்வி பட்டு இருக்கிறீர்களா?

ஆணாதிக்கத்தில்  இருந்து தப்பித்து தனிச்சையாக போராடும் குணம் கொண்ட பெண்களைத் தான் ஒரு சிலர் பெண்ணியவாதிகள் என்கிறார்கள்.
வாழ்வின் முக்கிய மாற்றங்களில் முடிவு எடுக்கும் பொழுது, பெண்களைப் பொதுவாக ஆண்கள் கலந்து ஆலோசிப்பதில்லை. திருமணத்தின் போது வேண்டுமானால் துணி, நகை, சமையல் பாத்திரங்கள் வாங்குவதில் மட்டும் பெண்கள்  இஷ்டமாக இருக்கும். மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை எத்தனை பெண்களுக்கு அந்தக் காலத்தில் கொடுக்கப்பட்டது ?

இந்த நூற்றாண்டில் காலம் கொஞ்சம் மாறி பெண்களையும் கலந்து அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் காதல் திருமணம் என்ற பெயரில் சில பெண்கள் விழிப்புணர்வுயின்றி ஓடிப் போவது, தன்னிச்சையாக திருமணம் செய்து போராட்டமான வாழ்க்கையை எதிர் கொள்ள துணிவில்லாமல் தோல்வியுற்று, ஆணின் உண்மையான சுயரூபம் தெரிய வரும் பொழுது நிலைகுலைந்து போகும் பெண்களின் வாழ்க்கையை எத்தனை நாம் கண்டு புழுங்கியிருக்கிறோம்.

எங்கள் ஊரில் வேடிக்கையாய் இப்படி சொல்வதுண்டு, ஒரு சில பெண்களுக்கு அவளுடைய கணவன் தான் தலை மாட்டுப் பாம்பு என்று. பெண்மை காலம் காலமாய் ஏமாற்றப்பட்டு வருகிறது. அப்படிபட்ட ஏமாற்றத்தை தாங்க முடியாத பெண்கள்தான் பெண்ணியவாதிகளாக உருவாகிறார்கள்.
பெண்ணியத்தை பற்றி பெண்கள் பேசுவதை விட ஆணாதிக்க வாதிகள் அதிகம் பேசுகிறார்கள். இந்த புரட்சிப் பெண்களை தலையில் தட்டி உட்கார வைப்பதற்காகவோ! பெண்ணிய அமைப்புகள் பல தோன்றினாலும் எந்த அமைப்பும்  சமூகத்தில் சரியாகப் பேசப் படுவதில்லை.
ஒரு சிலர், ஆண்களுக்கு மாற்று கருத்து சொல்வது தான் பெண்ணியவாதிகளின் செயல் என்று  மேலோட்டமாக புரிந்து கொள்வதுண்டு. அதுவல்ல, அதிகாரவர்க்கத்திற்கு அடங்கி போகாமல் எதிர் கேள்வி கேட்பது கூட பெண்ணியமாகக் கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் ஆண்கள் வெளியில் சென்று உத்தியோகம் பார்த்தல், வியாபாரம் செய்தல் என்றும், பெண்கள் வீட்டில் இருந்து குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் அனைத்தையும் செய்து வந்ததால் வெளியே செல்ல முடியாத நிலை. தற்காலத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால், வீட்டில் சமையல், மற்ற வீட்டு வேலைகள், குழந்தைகளைப் பார்த்து கொள்ளும் பொறுப்பு போன்றவற்றை பெண் மட்டும் ஏற்று செய்யாமல் ஆண், பெண் இருவரும் சரி சமமாக வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. பெண் வேலைக்குப் போனால் ஆண் விடுமுறையில் இருந்து குழந்தைகளைக் கவனிப்பது, சமையல் செய்வது கூட நடைமுறைக்கு வந்து விட்டது. இது பெண்ணியத்திற்கு கிடைத்த சிறு வெற்றியாகக் கூட கொள்ளலாம். சில நாடுகளில் அரசாங்கமே பெண்ணின் பேறுகால நேரத்தில் ஆண்களுக்கு விடுமுறையளித்து உதவியாக இருக்கப் பணிக்கிறது.

ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாட்டம், பெண் குழந்தை பிறந்தால் ஏளனம், இது இந்தக் காலத்திலும் ஒரு சில இடங்களில் தொடரத்தான் செய்கிறது. பெண்ணே பெண் குழந்தையை வெறுத்தால், அழித்தால் என்ன தான் செய்ய முடியும். பெண்ணிற்கு எதிரி பெண் தான். இதைக் குறித்து எழுத பல பக்கங்கள் வேண்டும். இந்த நிலையில் பெண்ணியம் எப்படி தலை தூக்க முடியும்?

அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை பெண்ணை ஒரு போதைப் பொருளாய்த் தான் சமுதாயம் பார்க்கிறது. விளம்பரப் படங்களைப் பார்த்தாலே தெரியும்.
ஒரு புள்ளி விபரம், ஆறு பெண்களில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறாள். வீட்டில் அடைபட்டு சித்திர வதை அனுபவிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் இன்னும் குறைந்த பாடில்லை.

பெண்ணிற்கு ஒரு நீதி ஆணிற்கு ஒரு நீதி  பெண்களுக்கு சமபங்கு சொத்துரிமை என்பது பண்டைய காலத்தில் இல்லை. இப்பொழுது தான் பெண்ணியம் போராட்டம் என்ற நிலை வந்த பின்பு சொத்திலும் பெண்களுக்கு பங்கு உண்டு என்ற சட்ட திருத்தம் வந்துள்ளது.
பண்டைக்காலத்தில், பெண் வெளியே சென்று கல்வி கற்க முடியாத நிலைமை, சிறுவயது திருமணம், ஆண்களச் சார்ந்தே வாழ்ந்ததால், முடிவு எடுக்கத் தெரியாத நிலை இருந்தது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக வேண்டுமானால் பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் வேலைக்கு சென்று ஆணிற்கு சமமாய் சம்பாதிப்பது, ஆணிற்கு கூட மேல் அதிகாரியாய்ப் பெண்கள் செயலாற்றுவது என்று இருந்து வந்தாலும் பெண்களை அடிமை படுத்துவது, அடக்கி வைப்பது, பாலியல் கொடுமை என்பது பரவலாக நடக்கத்தான் செய்கிறது, இதை தடுக்க பல அமைப்புக்கள் இருப்பது, போராட்டங்கள் நடத்துவது ஒன்று தான் இப்போதைய விழிப்புணர்வு. என்னதான் பெண்ணியம் பற்றி பரவலாக கருத்துக்கள் தோன்றினாலும் அது தோன்றிய நேரத்திலேயே வேரோடு அழிக்க திட்டமிடப் படுகிறது.

நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு கிடக்கும் பெண்களின் மனநிலை, தற்காலத்தில் இணையம் மூலமாவது வெளிப்படுத்த முடிகிறது என்பதே பெரிய ஆறுதல். பெண்ணியம் வெளிப்பட இணையம் பெரிய உதவியாக இருந்து வருகிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. பெண் படைப்புக்களின் மூலம் அவர்களின் கருத்துக்கள் வெளியுலகை சென்று அடைகிறது.

பிரபல ஆங்கிலப் பத்திரிக்கையான டைம்ஸ் ஒவ்வொரு வருடமும் 100 பிரபலமான மனிதர்களை இனம் கண்டு தேர்வு செய்து வெளியிடும்.  வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் 25 பெண்களை அந்த பட்டியலில் அடையாளம் காட்டியுள்ளது. இது பெண்ணியத்திற்கு கிடைத்த வெற்றியாகத்தான் நான் நினைக்கிறேன்.

ஒரு சில இடங்களில் பல ஆண்கள் பெண் முன்னேற்றதிற்கு துணை போவதால் தான் பெண்கள் இன்று அவர்கள் நினைக்கும் நிலையை எட்ட முடிகிறது என்பதையும் கூறத்தான் வேண்டும்.

பெண்ணியம் என்பது ஒரு தனிப்பட்ட பெண்ணின் விருப்பம்.
எல்லாப் பெண்களும் பெண்ணியக் கொள்கைகளுக்கு ஒத்துப் போவதில்லை. நேர் கொண்ட பார்வை , நிமிர்ந்த நடையில் ஒரு பெண் நடந்து சென்றாலே வித்தியாசமாய் பார்க்கும் உலகம் தான். எல்லாப் பெண்களாலும் எல்லாத்துறையிலும் ஆணிற்கு நிகராய் செயல் படுவது என்பது இயலாத காரியம். முயற்சி செய்து வெற்றி பெறும் பெண்களை நாம் போற்றத்தான் வேண்டும்.

முடிவில் சொல்ல வேண்டுமென்றால் ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் இருக்க வேண்டும். ஒருவரை விட ஒருவர் பெரியவர் எனவோ, இருவரும் சமம் என்றும் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் அடக்கி ஆள்வது, அடிமைப்படுத்துவது என்றில்லாமல் அவரவர் இயல்புடன் இருக்கும் காலம் வரும் பொழுது இந்த பெண்ணியம் என்ற கட்டுரைக்கே வேலையில்லாமல் போய் விடும் என்பதே என் கருத்து.

-திருமதி ஆசியா உமர்,
அல்-ஐன், ஐக்கிய அரபு அமீரகம்.


11 comments:

 1. முன்பை விட எவ்வளவோ மாறி வருகிறது... மாற வேண்டும்... மாறியே தீரும் - பெண்களின் நல்ல ஆழ்ந்த கல்வியால்...

  முடிவில் உள்ள கருத்துக்கள் நடக்க நாட்கள் அதிகமில்லை...

  நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்.வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 2. இந்தக்கட்டுரை பெண்களைப்பற்றிய பல்வேறு வாழ்வியல் யதார்த்தங்களை மென்மையாக விளக்கி மிகவும் அழகாக வரையப்பட்டுள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வருகைக்கும் பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும்..வை.கோ.சார்.

   Delete
 3. Mikavum alagaga solli irukega.. Arumaiyana kathurai

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மகிழ்ச்சி ஃபாயிஸா.கருத்திற்கு நன்றி.

   Delete
 4. Replies
  1. மிக்க நன்றி ஸ்டார்ஜன்.:)!

   Delete
 5. நல்லதொரு கட்டுரை. எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. இனியும் நிகழும். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி ஆதி.

   Delete
 6. நனனும் ஒண்ணு சொல்லனும் ....

  அருமையான கட்டுரை.

  எந்து காதலியின் நிலை ...
  அவள் பிறந்தது என்னமோ பெண்ணியம் பேசும் வீட்டில் தான் ஆனால் அவள் பெண்ணியா வாதியாக வாழமுடியா சூழல் நிலவும் .

  அமைப்பாக அவள் வீடு அமைந்துள்ளது

  அவள் விருப்பம் நிராகரித்து .பேசும் அமைப்பாக அவள் வீடு உள்ளது.

  குடும்பம் ஒரு தனிச்சொத்து.

  ReplyDelete