Pages

Tuesday, 25 December 2012

டெல்லி பேருந்து நிகழ்வு...பற்றி ஞாநி


டெல்லி பேருந்தில் நடந்த பாலியல் வன்முறையைப் பற்றி நான் புதிதாக என்ன எழுதிவிடப் போகிறேன்..
ஞாநியின் கருத்துக்களாக வந்த இந்த மெயிலை உங்களுடன் பகிர்கிறேன்,
என் மனதைப் பிழிந்து அழுத்திக் கொண்டிருக்கும்  இந்த செயலுக்கு இக்கடிதத்தை பகிர்வதின் மூலமாவது சிறு ஆறுதல் கிடைத்தால் சரி தான்..

நன்றி ஞாநி..

மன்னிக்க வேண்டுகிறேன்…..


அன்புள்ள…..
உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.
டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரானகுறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு,  எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள். உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதேகோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர்  பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.
உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய்.  நினைவு வரும்போதெல்லாம்குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களாஅவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும்  உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும்,  பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம்,நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.
உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர்  மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய  எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளைநம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.

மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல்எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.
படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
நாங்கள்தான் – we the people of Indiaதான்.  காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்புஎல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.

படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை  வழங்கினோம் வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிரசக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.
அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது சாதி பார்த்தது.  மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண்  பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.
உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூடதிருமணமாகிவிட்டால்,கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால்,தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.

உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம்  காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும்எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும்,எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம் உனக்கு -  உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால்நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.
நியாயப்படி பெண்ணை சக மனுஷியாகதன்னைப் போலவே சிந்திக்கக் கூடியசெயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது மரியாதைதெரிந்த குடும்பம்.

பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால்,அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.
குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாகபத்திரிகைகள்சினிமாதொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. 

பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரைசீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.
இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….

படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல்  வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.
இந்த சூழலில் படித்தவனாக இருந்தால்  அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ?  வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க,  பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால்உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.

மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம்சிந்தனைஅறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்.  ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.

அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்லஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால்அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் பண்பாடுமாறவேண்டும்.
இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்.  நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து,தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.
அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன்  வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.

அன்புடன்
ஞாநி
சக இந்தியர்கள் சார்பாக.
குமுதம் 26.12.2012

Saturday, 22 December 2012

உலகின் உயரமான கட்டிடம் / At the Top - Burj Khalifaஉலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா துபாயில் அமையப் பெற்று கிட்டதட்ட மூன்று வருடமாகிவிட்டது என்றாலும் அங்கேயே சுற்றி வரும் எங்களுக்கு இந்த மாதம் தான் At the Top போகும் வாய்ப்பு கிடைத்தது.இக்கட்டிடம் 2004 செப்டம்பர் மாதம் கட்ட ஆரம்பித்து 2010 ஜனவரியில் முடிவடைந்து 4 ஆம் தேதி கோலாகலமாகத் திறப்பு விழா நடந்ததை உலகே அறியும்.
புர்ஜ் கலீபா கட்டிடம் கீழ்காணும் சிறப்புடையது.
உலகின் அதி உயரக் கட்டிடம்
160 மாடிகள், 828 மீட்டர் அதி உயரம் (2 716.5 அடி)
உலகின் அதிக மாடிகளை உடைய கட்டிடம் 
மனிதர்களால் உருவாக்கப் பட்ட அதி உயர் கட்டமைப்பு (free standing structure)
உலகிலேயே அதிக உயரமும் நீண்ட தூரமும் செல்லக் கூடிய Lifts.
3000 வாகனம் நிறுத்தும் வசதி, 11 ஹெக்டர் பரப்பளவு கொண்ட தோட்டமும் (பார்க்), ஆறு நீர்த்தடாகங்களும் கொண்டது.
57 elevators  8 escalators களை கொண்டது 
30 கட்டுமான கம்பெனிகள் சேர்ந்து 100 நாடுகளை சேர்ந்த 12 000 தொழிளாளிகளால் 6 வருடங்களில் (2004 - 2010)உருவாக்கப்பட்டது.
ஆன் லைனில் புக் செய்து சென்றால் நூறு திர்ஹம் தான்,ஆனால் அங்கு கவுண்ட்டரில் நேரில் போய் டிக்கட் எடுத்து செல்ல 400 திர்ஹம்.நாங்கள்  முன்பே புக் செய்து தான் போனோம்.இரவு நேரம் செல்ல 
முயற்சி  செய்தோம்.ஆனால் பகல் 10.30 மணிக்கு தான் செல்ல முடிந்தது.


டிக்கெட் கவுண்டரில் பார்த்தால் எல்லாவேளையும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.நேரில் போய் 400 திர்ஹம் கொடுத்தால் கூட டிக்கெட் கிடைப்பது சிரமம் தான்.


ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சர்ரென்று நம்மை 124 வது மாடிக்கு லிஃப்ட் அழைத்து செல்வது மிக ஆச்சரியமாக இருந்தது.மேலே சென்று மிக ஆர்வமாக  சென்று பார்த்த பொழுது கிளிக்கியது.


இப்படி கண்ணாடியால் நிறுவபெற்ற இடத்தில் இருந்து துபாய் நகரை நாம் பார்த்து மகிழலாம்.

கீழே அவ்வளவு நெருக்கமாக ஏகப்பட்ட கட்டிடங்கள் பார்த்த கண்களுக்கு மேலே சென்றவுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டிடங்களைப் பார்த்த பொழுது அதீத பிரமிப்பை உணரவில்லை என்பதே நிஜம்.ரசிப்பதற்கு கட்டிடங்கள் மட்டுமே தெரிந்தது,தூரத்தில் உலக வரை படம் போல் உருவாகிக் கொண்டிருக்கும் தீவு அமைப்பை காணமுடிந்தது.
டெலஸ்கோப்பில் பார்க்க 10 திர்ஹம் -இரண்டரை நிமிடம் மட்டுமே பார்க்க முடியும்.

புர்ஜ் கலீபாவின் நிழல் விழுவதை இந்தப் படத்தில் காணலாம்.கிட்ட தட்ட ஒரு மணிநேரம் மேலே உட்கார்ந்தும் நின்றும் ரசித்து மகிழ்ந்தோம்.
10 திர்ஹம் இந்த மிஷினில் போட்டு நாமே கீழ்காணும் துட்டை உருவாக்கி எடுத்துக் கொள்ளலாம்.நான்கு வகையாகக் கிடைக்கிறது.


அங்கு சென்றதின் நினைவாக ஒரு சின்ன புர்ஜ் கலீபா வடிவம் காந்தம் வைத்தது, ஃப்ரிட்ஜில் ஒட்டுபடியான ஒன்றை மட்டும் வாங்கி வந்தோம்.

அங்கு வைக்கப்பட்டிருந்த கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்.


சுற்றிப்பார்த்து விட்டு சும்மா வரமுடியுமா?
அப்படியே சூப்பரான சீஸர்ஸ் சாலட்,பிஸ்ஸா,பாஸ்தா என்று பிள்ளைகளுக்கு பிடித்த அயிட்டம்..
மொத்தத்தில்  ஒரு திரில் அனுபவம்...
Tuesday, 18 December 2012

உஸ்தாது ஹோட்டல் / Usthad Hotelமுக்கிய கதாபாத்திரமான ஃபைசியாக துல்கர் சல்மான் (கேரளா சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன்) தாத்தா  கரீம்கா வாக நடிகர் திலகனும், ஃபைசிக்கு ஜோடியாக ஷஹானாவாக நித்யா மேனனும் நடித்திருக்கின்றனர்.கதை அஞ்சலி மேனன்,இயக்குனர் அன்வர் ரஷீத்.

கதை தொடங்குவது கேரளாவில் உள்ள முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த அப்துல் ரசாக், ஃபரீதா தம்பதியினர் முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதும், முதல் குழந்தை ஆணாகப் பிறந்தால் ஃபைஷல் என்று பெயர் வைக்க கற்பனை செய்து பின்பு பெண் குழந்தை பிறக்க, ஆண் குழந்தைக்காக ஆசைப்பட்டு வரிசையாக நான்கு பெண் குழந்தை பிறந்து விடுகிறது,அப்துல் ரசாக் மனைவி ஐந்தாவது கர்ப்பம்  தரித்து இருக்கும் பொழுது துபாய் கிளம்புகிறார்.கடைசியாக ஆண்குழந்தை பிறப்பதும் ஃபைசல் என்று பெயரிட்டு அவர்கள் ஆசைப்படி ஃபைசீ என்று அழைத்து மகிழ்ந்து வரும் வேளையில் வரிசையான பேர்காலத்தால் உடல் முடியாமல் ஃபரீதா காலமாகி விடுகிறாள்.

 துபாயிலிலிருந்து வந்த ரசாக் நான்கு பெண்குழந்தைகளையும் ஃபைசலையும் திரும்ப  அழைத்துக் கொண்டு வருவதும் அங்கே அக்காமார்கள் ஃபைசியை வள்ர்த்து ஆளாக்குவதும்,பின்பு ஒருவர் பின் ஒருவர் மணமாகி போய் விட ஃபைசியும் ஸ்விட்சர்லாந்து சென்று ரசாக்கின் கனவான ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படிக்க செல்கிறார்.ஆனால் ஃபைசி தன்னுடைய ஆசைப் படி செஃப் கோர்ஸ் படித்து திரும்பி வருவதும் அதன் பின்பு தான் முக்கிய கதையே ஆரம்பம்.
ஸ்விட்சர்லாந்தில் இருந்து திரும்பும் ஃபைசிக்கு வசதியான குடும்பத்தில் பெண் பார்க்க அந்தப் பெண் ணிற்கு,ஃபைசி செஃப் என்று தெரிய வர அந்த இடம் மாறிப்போகிறது.
லண்டனில் செஃப் வேலையை பெற்றுக் கொண்டு வந்த ஃபைசியின் மீது உள்ள கோபத்தால்,தன்னுடைய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டும் கனவு நனவாகிவிட ரசாக், ஃபைஸி திரும்பி போக முடியாதபடி பாஸ்போர்ட்டை பிடுங்கி தன் வசம் வைத்துக் கொண்டதால் ஃபைசி வீட்டை விட்டு வெளியேறி கோழிக்கோட்டில் உள்ள தன் தாத்தா வீட்டிற்கு வருகிறார்.தாத்தா கரீம், உஸ்தாது ஹோட்டல் என்ற கடலோர ரெஸ்டாரண்ட்டை 35 வருடங்களாக நடத்தி வருவதும்,அங்கு வந்து தங்கி உலகம் என்றால் என்ன என்பதை பேரனுக்கு புரிய வைப்பதும் தான் கதை.

இதற்கிடையில் உஸ்தாது ஹோட்டல் மீது  பல லட்சங்கள் கடனாகி விட
அதனை ஆக்ரமிக்க பக்கத்தில் அமைந்திருந்த ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் திட்டமிடுகிறது.
ஹெல்த் டிபார்ட்மெண்ட் கம்ப்லைண்ட் மூலம் உஸ்தாது ஹோட்டலை மூட வைப்பதும், திரும்ப ஃபைஸி அங்கு வேலை செய்பவர்கள் மற்றும் தன் காதலி ஷ்ஹானா உதவியுடன் ஹோட்டலை மீட்டெடுத்து புதுப்பித்து திரும்ப அந்த ஹோட்டலை திறக்க வைக்கிறார்.கரீம்காவின் கடனையும் அடைத்து ஹோட்டலும் நல்லவிதமாக நடந்து வருகிறது.

இதற்கிடையில் ஃபைஸி கண்ட கனவுப்படி ஃப்ரான்ஸில் செஃப் வேலை அமைய,  அங்கு கிளம்ப எத்தனிக்கும் பொழுது கரீம்கா தமிழ்நாட்டில் மதுரையில் நாரயணன் கிருஷ்ணன் என்பவரை சந்தித்து விட்டு செல்லும் படி சொல்கிறார்.
அங்கு போய் தான் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்கிறார்.இங்கு தான் படத்தின் திருப்பு முனை.
கதை முழுவதையும் நானே சொல்லி விட்டால் நீங்க பார்க்கும் பொழுது சப்பென்று ஆகிவிடாதா? 
படத்தை பார்த்து முழுக்கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
எப்பொழுதாவது நல்ல மலையாளப் படங்களை குடும்பத்தோடு அமர்ந்து ரசித்துப் பார்ப்பதுண்டு.அந்த வரிசையில் பார்த்த இந்த படத்தை உங்களுடன் பகிர விருப்பம்.
நீங்களும் நிச்சயம் பாருங்க. கருத்து சொல்லுங்க.ஆங்கில சப்டைட்டிலுடன் இந்த படத்தை இணையத்தில் கூட கண்டு மகிழலாம்.ஆதாமிண்ட மகன் அபுவிற்கு பிறகு நான் ரசித்துப் பார்த்த  படம் இது.

நல்ல பொழுது போக்குடன் சிறந்த சிந்தனையை உணர்த்தும் படம்.மேல் இருக்கும் கிளிப்பிங் ,படத்தில்  ஃபைசல் ஆசையாக, இத்தாத்தாஸ் கம்பெனி என்று அழைக்கும் அக்காமார்களுடன்.
பாடல்கள் அனைத்துமே ரசிக்கும் படியிருக்கும்.நான் இரண்டு பாடல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.
ஆஹா ! இந்தப்படத்தில் கூட நம்ம சுலைமானி டீ பற்றிய முக்கிய தத்துவம் ஒன்று இடம் பெற்றிருக்கு ! : )...

யார் வேண்டுமானாலும் சமைக்கலாம், ஆனால் ஒரு நல்ல குக் தான் மனதை நிறைவடைய செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது கதை.

- என்றென்றும் அன்புடன்
 ஆசியா உமர்.

நன்றி - கூகிள்.

Saturday, 1 December 2012

முழு நேர ப்ளாக்கரா ?

 சென்ற இரு முறை ஊர் சென்ற பொழுதும் எனக்காக புத்தகப் பரிசுப்  பார்சல் பிரிக்கப்படாமல் காத்திருந்தது.முதல் முறை தமிழ்மணம் பரிசுக் கூப்பனிலும்  மறுமுறை நேஷம் யுடான்ஸ் பரிசுக் கூப்பனிலும் பெற்றது.
போகும் பொழுது இங்கிருந்து முப்பது - நாற்பது கிலோ எடை எடுத்துச் செல்லலாம், ஆனால் அங்கிருந்து வரும் பொழுது 20 கிலோ + ஹேண்ட் லக்கேஜ் தானே கொண்டு வர முடியும்.
இரண்டு முறை பார்சல் கட்டும் பொழுதும் அதிக எடை வந்தால் பார்சல் கட்டி தருபவர்கள் இந்தப் புத்தகக் குவியலை எடுத்து வெளியே வைத்து விடுவார்கள்.அடுத்த முறை வரும் பொழுது வாசித்துக் கொள் என்று சொல்வதே வழக்கம்.

இப்படியாக பரிசு புத்தகங்கள் வாசிக்கப் படாமலே இருந்து வந்தது. ஒருவழியாக பரிசு புத்தகத்தில் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் அடங்கியதை மட்டும் நிறைய பண்டங்களை தியாகம் செய்து எடுத்து வந்து விட்டேன்.
இங்கு  தான் நேரம் கிடைக்கும், வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.  தற்சமயம் வீட்டில் பேச்சு கூட செந்தமிழாகத்தான் ஆகிவிட்டது. கல்கியின் எழுத்தினை நான் போற்றி எழுத தேவையே இல்லை. நாமெல்லாம் + 2 வரை தமிழ் படித்தோம், ஆனால் என் பிள்ளைகளுக்கு முழுமையாக தமிழை கற்க முடியாத சூழல் அமைந்தாலும் எழுதும் வாசிக்கும் அளவு ஓரளவு தெரியும். அப்படியே விட்டு விட்டால் மறந்து விடுவார்கள். இந்தப் புத்தகங்கள் நிச்சயம் அவர்களுக்கு பயன்படும் என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அவர்கள் இப்புத்தகத்தினை எடுத்து வாசித்து விட்டு பழந்தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்கும் பொழுது அத்தனை ஆனந்தமாக உள்ளது.

பெருநாள்  சமயம் என் கணவரின் நண்பர்களை குடும்பத்தோடு அழைத்திருந்தோம்.
நண்பர் ஒருவர் என் கணவரிடம், உங்கள் மனைவிக்கு வீட்டில் எப்படி பொழுது போகிறது ? என்று கேட்டார்.
(நானும் என் கணவரிடம் நான் வலைப்பூவில் எழுதுவதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லி வைத்திருந்தேன், ஆனால் பாருங்க இவர் போட்டு உடைத்து விட்டார்.)
மூன்று வலைப்பூ வைத்திருக்காங்கன்னு சொன்னாரோ  இல்லையோ, உடனே அவர்,அப்ப அவங்க முழு நேர ப்ளாக்கரான்னாரே ! பார்க்கலாம்.
அவ்வ்வ்.....!