Pages

Monday, 18 February 2013

அச்சு பிச்சு அவார்ட்ஆஹா ! எனக்கு வலைப்பூக்களில் ரொம்ப பிடிச்ச விஷயம் ஒருத்தருக்கொருத்தர்  விருது வழங்குவதும் பெறுவதும்.
சின்னப் பிள்ளையாய் இருந்தப்ப சாக்லேட் கவர், ஸ்டாம்ப் கலெக்‌ஷன், வாழ்த்து அட்டைகள் சேர்ப்பது இப்படி சின்ன சின்ன விஷயத்தில் சந்தோஷப்பட்டதுண்டு.ஆனால் பாருங்க, இப்பவும் சந்தோஷம் தொடருது.
முதல் முதலாக எனக்கு மேனகா விருது வழங்கிய பொழுது அத்தனை சந்தோஷம்,எல்லாரும் விருது கொடுக்கிறாங்க, வாங்குறாங்க, நமக்கு யாரும் தரலியேன்னு யோசிச்சப்போ கிடைத்த விருது தான் சன்ஷைன் அவார்டு, விருதுகளை நானும் பலபேருக்கு கொடுத்து விட்டேன்.
இப்ப நானே போய் பெற்றுக் கொண்ட அவார்ட் தான் இந்த அச்சு பிச்சு அவார்ட்.
தோழி ஸாதிகாவின் என் பொக்கிஷம் பகிர்வில் திருமதி.  ரஞ்சனி நாராயணன் கருத்து தெரிவிச்சு இருந்தாங்க..பழகிய முகம் போல் இருக்கேன்னு போய் பார்த்தேன்,அங்கு தான் இந்த சுவாரசியமான அவார்டு பற்றி தெரிஞ்சிகிட்டேன்.பகிர்வைப்  பார்க்க கிளிக்.


நான் கருத்து தெரிவித்தவுடன் என் விருதுகள் ப்ளாக் வந்து கருத்து தெரிவித்து இந்த விருதினை வழங்கி சந்தோஷப்படுத்திய ரஞ்சனி அக்காவிற்கு மிக்க நன்றி.
அக்காவின் கருத்துரையைக் காண இங்கே செல்லவும்.

உங்களுக்கு இந்த விநோதமான வேடிக்கையான விருது வேண்டும் என்றால் நீங்க அபி ஆசாமியாக இருக்க வேண்டும். அபி யாருன்னு அறிய அக்காவின் மேலே சொல்லிய கிளிக் பகிர்வைப் பாருங்க..
தாராளமாக கருத்து தெரிவித்து விட்டு இந்த அவார்டை எடுத்து செல்லலாம்.
என்னைப் போல ஒரு சிலர் வீட்டு வேலைகள், பிள்ளைகள் கவனிப்பு என்று முடித்து அசந்து போய் வலைப்பூவிற்கு வரும் பொழுது ரொம்ப சீரியஸான இடுகை,அறிந்து ஆராய்ந்து கஷ்டப்பட்டு மொழி பெயர்த்து எழுதியவை, மண்டை காய்ஞ்சி வரும் பொழுது இன்னும் கொஞ்சம் கடுப்படிகிற மாதிரியான இடுகைகளை விரும்புவதில்லை. கதை,கவிதை,பொழுது போக்கு அம்சங்கள்,அனுபவப்பகிர்வுகள்,
விழிப்புணர்வு,வீட்டுக் குறிப்புக்கள்,  போன்ற லேசான விஷயத்தை வாசித்தோமா சந்தோஷமாக கருத்து சொன்னோமான்னு போகத்தான் விரும்புவோம்.
அப்படியிருக்கிற எனக்கு அக்காவின் இந்த இடுகை மிக பிடித்து போனதில் ஆச்சரியம் இருக்க முடியாது.ஏனெனில் நானும் சின்ன பிள்ளையாய் இருந்தப்போ கொஞ்சம் அச்சுபிச்சு தான்..
சும்மாவா, அச்சு பிச்சுன்னு இருந்தால் கூட அவார்டு உண்டு எனும் பொழுது அது ரொம்ப சந்தோஷப் படுத்துகிற விஷயம் தானே! ஹா ஹா...


Friday, 15 February 2013

பெண் என்பவள் பொருள் அல்ல சகமனுஷி...

தற்சமயம் என் மனதை மட்டுல்ல, முக்கியமாக தமிழக மற்றும் உலக மக்களின் மனதை பதை பதைக்க வைத்த சம்பவம் தான் விநோதினி மீது ஆசிட் வீச்சும் மரணமும்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய இந்த கலந்துரையாடலை நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்,முக்கியமாக பெண்கள், குடும்பத் தலைவிகள் இதனை கேட்க வேண்டும் என்பது என் அவா..

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் எவிடென்ஸ் அமைப்பை சேர்ந்த கதிர் அவர்கள், மூத்த பத்திரிக்கையாளர் ஞாநி, சமூக ஆர்வலர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..
அவர்களின் கருத்துக்களின் சுருக்கம்:
1.ஆணாதிக்கத்தின் உச்ச கட்டமே இந்த ஆசிட் வீச்சு.
2.சட்டங்களை கடுமைப் படுத்த வேண்டும்.
3.தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
4.ஊடகங்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு.
5.குழந்தைகள் வளர்ப்பில் தாய்க்கு முக்கிய பொறுப்பு.
6.பாலின சமத்துவம் ஏற்பட வேண்டும்.

முன்பு டெல்லி நிகழ்வு அதன் பாதிப்பு மறைவதற்குள் இந்த ஆசிட் விச்சு இதற்கு அடுத்து இன்னுமொரு நிகழ்வு..இப்படி தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
நம்மால் முடிந்தது..குழந்தைகள் வளர்ப்பிலும், சமூக நலனிலும் அக்கறை காட்டுவது..!
பொறுத்திருப்போம்...

- ஆசியா உமர்.

Wednesday, 13 February 2013

சில சமையலறை டிப்ஸ்


1. மாவு வகைகளை வைக்கும் பொழுது புழு,வண்டு வராமல் இருக்க ஒரு பிரியாணி இலையை சொருகி வைத்தால் வராது. (கடலைமாவு,அரிசிமாவு,கோதுமை மாவு,மைதாமாவு உட்பட)
2.அரிசியில் வண்டு வராமல் இருக்க காய்ந்த மிளகாய் வற்றலை அரிசியுடன் போட்டு வைத்தால் வண்டு வரவே வராது.
3. கசகசாவை அரைக்க முதலில் வெது வெதுப்பான நீரில் அரைமணி முதல் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.முதலில் மிக்ஸியில் போட்டு கசகசாவை அரைத்து விட்டு  பின்பு மற்ற பொருட்களை சேர்த்து அரைத்தால் கசகசா நன்கு அரைபட்டு விடும்.
4.அவசரத்திற்கு ரசம் செய்ய மிளகு சீரகத்தூளை சம அளவு பொடித்து வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும்.
5.எந்தவொரு சமையலையும் அதிகம் செய்யும் பொழுது சாமான் அளவை அப்படியே கூட்ட தேவையில்லை, சிறிதளவு குறைத்து போடலாம்.
6.பிரஷர் குக்கர் உட்பக்கம் நாளடைவில் நிறம் மாறிவிட்டால் எலுமிச்சை அல்லது வினிகர் போட்டு கொதிக்க வைத்தால் நிறம் மாறி பளிச்சென்று மாறிவிடும்.உருளைக்கிழங்கு வேக வைத்தாலும் நிறம் பளிச்சென்று மாறிவரும்.
7.கட்லெட் செய்யும் பொழுது ஷேப் செய்த பிறகு ஃப்ரீசரில் அரைமணி நேரம் வைத்து எடுத்து செய்தால் நன்றாக வரும்.கட்லெட் கலவை இலகி விட்டால் ப்ரெட்டை நனைத்து நன்கு பிழிந்து சேர்த்து கலந்து சுட்டால் கட்லெட் உடையாது.ப்ரெட் இல்லாட்டி இருக்கவே இருக்கு மைதாமாவு.கொஞ்சம் கலந்து பாருங்க,ருசியாகவும் இருக்கும் பிரியவும் பிரியாது.
8.வடை ,பஜ்ஜி, போண்டா,பக்கோடா இவை செய்யும் பொழுது மாவு தளர்ந்து விட்டால் இருக்கவே இருக்கு அரிசி மாவு சிறிது சேர்த்து கலந்து சுட்டால் எண்ணெயும் குடிக்காது,முறுகலாகவும் வரும்.
9.கிரேவிக்கு முந்திரி பருப்பு சேர்க்காமல் தேங்காய் மட்டும் அரைத்து சேர்ப்பதாய் இருந்தால் கார்ன் ஃப்லோர் அல்லது அரிசி மாவு 1 டீஸ்பூன் அளவு கலந்து சேர்த்தால் குழம்பு தண்ணீர் பிரியாது.
10.காய்கறிகள் சமைக்கும் பொழுது  நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.
11.அவசரத்திற்கு உயரத்தில் இருக்கும் பொருட்களை எடுக்க ஒரு சிறிய ஸ்டூலை சமையலறையில் போட்டு வைப்பது வசதியாக இருக்கும்.
12.சமையலறை வாஷ்பேசின் கீழ் ஒரு மிதியடி போட்டுக் கொண்டால் தண்ணீர் பட்டு அழுக்காவதை தவிர்க்கலாம். அருகில் ஒரு டவல் போட்டுக் கொண்டால் கழுவிய பின்பு கையை துடைக்க வசதியாக இருக்கும்.அணிந்திருக்கும் ஆடையில் துடைப்பது தவிர்க்கப்படும்.


-மீண்டும் விரைவில்..Tuesday, 5 February 2013

என் பொருள் தான் எனக்கு மட்டும் தான் - தொடர்பதிவு

தமிழ் வலைப்பூக்கள் மத்தியில் தொடர் பதிவு நடந்து மாதங்கள் பலவாகி விட்டதால் அந்த வலைப்பூ கலாச்சாரத்தை தக்க வைக்கவே இந்த தொடர் அழைப்பும் பகிர்வும்..!
1. இந்த தொடர் பதிவில் அழைப்பை ஏற்று இடுகை இடுவோர் தாங்கள் மிகவும் நேசிக்கும் ஏதாவது ஒரு பொருள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தால்   அதனைப் பற்றி சுவாரசியமாகப் பகிரலாம்.அதன் படம் இணைக்க வேண்டும். தொலைந்து போன  மறக்க முடியாத பொருளாக இருந்தாலும் சரி...

2. நீங்கள் உங்கள் வலைப்பூ நட்பு வட்டத்தில் ஒரு சிலரை இதனை தொடர அழைக்கலாம். குறைந்தது 5 நபர்களை அழைக்க வேண்டும்.அழைக்கும் பொழுது அவரது வலைப்பூ லின்க் கொடுத்தால் மிக நல்லது.

இனி என் பகிர்வு..

இனி நான் அன்றாடம் உபயோகிக்கும் என்னிடம் நீண்ட நாட்களாக, இல்லையில்லை பல வருடங்களாக இருந்து வரும் ஒரு பொருளைப் பற்றி பகிரப் போகிறேன்.இது போல் தொடரை தொடர அழைக்கப் படுவோர் உங்கள் பொருட்கள் பற்றி பகிர வேண்டும். சரிதானே ? இனி என் பகிர்வு.


சீப்பு சீப்பு தான் சூப்பர் சீப்பு தான்....

நான் ரொம்ப பாதுகாப்பாக பல வருடங்களாக உபயோகித்து வரும் எனக்கு மிகவும் பிடித்தமான இந்த சீப்பையும் என்னையும் பிரிக்கவே முடியாது.
இந்த சீப்பை நான் 1984 ஆம் வருடம் திருச்சி மலைக்கோட்டை  வாசல் பக்கம் ஒரு கடையில் மூன்று ருபாய்க்கு வாங்கினேன்.அன்று முதல்  இதனை தான் உபயோகித்து வருகிறேன்.
நீங்களே அதன் வயதை கணக்கிட்டுக் கொள்ளுங்களேன்..

முதலில் 1985 திருச்சியில் என் அண்ணன் வீட்டில் இருந்து  கோவைக்கு என் கல்லூரி விடுதிக்கு  எடுத்து சென்றேன்,அங்கு நான்கு வருடங்கள் பயன்படுத்தி விட்டு பத்திரமாக ஊர் கொண்டு போய் எங்களோட நெல்லை பூர்வீக வீட்டில் வைத்து பயன்படுத்தி விட்டுதிருமணமாகிப் போகும் பொழுதும் பத்திரப் படுத்திக் கொண்டேன்.என் மகன் பிறந்த பின்பு தூத்துக்குடியில் குடியேறினோம், இடையில் என் மகளும் பிறந்தாள்.பிள்ளைகளோடு என் சீப்பையும் பாதுகாக்க தவறவில்லை.
அடுத்து அவர் யு.ஏ.இ வந்துவிட்டார். நாங்கள் மீண்டும் எங்கள் மாமா வீட்டில் இரண்டு வருடம்,அடுத்து 99 -2000 துபாய்க்கு வந்தது சீப்பு.
திரும்பவும் ஊரில் மாமா வீட்டில், பின்பு நாங்கள் கட்டிய வீட்டில் இருந்தோம்,அங்கும் எங்களோடவே தங்கிக் கொண்டது.
மீண்டும் விசிட்டில் அபுதாபி, அடுத்து மெக்கா மாநகரம்,மதீனா பயணம்,மீண்டும் அபுதாபி வாசம். தொடர்ந்து அலைனில் தற்சமயம் எங்களோடு வசிக்கிறது. இதற்கிடையில் எங்கும் வெளியூர் வெளிநாடு சென்றாலும் எங்களோடு பயணித்து பத்திரமாக என்னிடமே இருக்கும்.
ஒரு முறை பெங்களூர் அக்கா,அண்ணன் வீட்டிற்குச் சென்ற பொழுது அங்கு மறதியாக வைத்து விட்டு வந்து விட்டேன்.
என்ன செய்வது,மீண்டும் தேடிப் பிடித்து சாக்லேட் கலரில் ஒரு சீப்பு வாங்கினேன்.அதனை மிகப் பிரியமாகத் தான் உபயோகித்து வந்தேன்.ஆனால் என் பழைய  ப்ரிய சீப்பை பிரிய மனமில்லை.

உடனே அக்காவிற்கு போன் செய்து என்ன செய்வாயோ ஏது செய்வாயோ என் சீப்பு என்னிடம் உடனே வந்து சேரவேண்டும், என்றேன், என் அக்காவும் என் உணர்வுகளை உடனடியாகப் புரிந்து கொண்டு அனுப்பி வைத்தாள்.

இப்படியாகப்பட்ட அந்த சீப்பானது இன்று ஆனந்தத்தோடு எங்களோடு தான் வசிக்கிறது.

யாராவது விருந்தாளி வருகிறார்கள் என்றால் சீப்பை எடுத்து முதலில் பத்திரப்படுத்தி விடுவேன்,அவர்கள் உபயோகித்தால் கூட பரவாயில்லை,எங்காவது கைமறதியாக வைத்து விட்டால் என்ன செய்வது, இந்த சீப்பினால் என்னை என்னுடன் நெருங்கி பழகுபவர்கள் கூட சீப்பாக நினைத்து இருக்கலாம், அதனைப் பற்றி எல்லாம் நான் கவலைப் படுவதில்லை, எப்பவும் அன்பாக அமைதியாகப் பேசும் அவரின் தங்கை கூட இந்த சீப்பை ஒரு முறை மாடியில் வைத்து விட்டு கீழே தேடியதற்கு, உன் பொருள் உன்னை விட்டு எங்கும் போகாது தேடிப் பார் என்று எரிச்சல் பட்டது நினைவிற்கு வருகிறது.
இந்த சீப்பின் மகத்துவம் தெரியாதவர்கள் அதனை எடுத்து அவர்கள் தலையை வாறும் பொழுது ஏக்கத்துடன் பார்ப்பேன்..அவர்களுக்கு எங்கே தெரியும் ? இதன் வரலாறு..

ஆஹா ! அப்பேற்பட்ட அழகான அன்பான சீப்பை பார்க்க ஆசையா? 
இதோ உங்களுக்காக..28 வயாசாச்சு..அவ்வ்....
பார்த்து விட்டு சும்மா போகக் கூடாது, கருத்து சொல்லனும்.இத்தொடரை தொடர நான் அன்பாக அழைப்பது.

ஸாதிகா  -     என் பொக்கிஷம்
மனோ அக்கா
ஜலீலா - என் பொருள் தான் எனக்கு மட்டும் தான்
மகி - தொடர் பதிவு ,என் பொருட்கள்
அதிரா
ஃபாயிஜா - என் பொருள் எனக்கு மட்டும் தான் -தொடர் பதிவு
மேனகா - என்னுடைய பொக்கிஷங்கள்
வானதி -      என் பொருட்கள் தொடர்பதிவு
இமா - என் பொருள் எனக்கு மட்டும் தான்
ராமலஷ்மி
கோவை2தில்லி -     பொக்கிஷங்கள்
கோமதியக்கா ---      டிக் டிக் கடிகாரம் .அன்பைக் கூறும் கடிகாரம்
அமைதிச்சாரல்
ஏஞ்சலின் -  பொக்கிஷமான என் பொருட்கள்
ராதாராணி - தலைமுறை பேசும் பொக்கிஷம்

சகோ.ஸ்டார்ஜன்

சகோ.வைகோ. சார் -  பொக்கிஷம் -தொடர்  1) கலைமகள் கைக்கே சென்று வந்த பேனா.
2) பிள்ளைகள் கொடுத்துள்ள சில அன்புத்தொல்லைகள்.
3) பொக்கிஷமான ஒரு சில நினைவலைகள்
4) அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
5)ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள்
6) அம்மா உன் நினைவுகள் ..
7) அப்பா விட்டுச் சென்ற ஆஸ்திகள் 
8)என் மனத்தில் ஒன்றைப்பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
9)நானும் என் அம்பாளும் -அதிசய நிகழ்வு
10) பூஜைக்கு வந்த மலரே வா!
11) தெய்வம் இருப்பது எங்கே ?

சகோ.தனபாலன் சார்.

நட்பு வட்டங்கள் அனைவரையும் அழைக்க ஆசை தான், என்றாலும் நான் அழைத்தவர்கள்  குறைந்தது ஐந்து நபர்களை அழைக்க வேண்டுமே..
தொடரட்டும் இந்தத் தொடர்...
தொடர்பவர்கள் பகிர்வின் லின்க்கை இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.எழுதியவுடன் அவரவர் பெயர் பக்கத்தில் தங்களின் பகிர்வை இணைத்து விடுகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.