Pages

Monday, 11 March 2013

பக் பக் பயணம் - தொடர் பதிவு


மனோ அக்கா தன்னுடைய தாய்லாந்து பயணத்தின் போது ஏற்பட்ட  அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல்.அந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவிய நபரைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாடோ வெளியூரோ செல்லும் பொழுது ஒவ்வொருவருக்கும் ஒரு வித அனுபவம் ஏற்பட்டிருக்கும்.அது மிகவும் இனிமையானதாகவோ அல்லது  கசப்பானதாகவோ இருக்கலாம், அந்த அனுபவங்களைத்
தொடர் பதிவாக எழுத ஒரு சிலரை அக்கா அழைப்பு விடுத்திருந்தாங்க,அழைக்கப்பட்டவர்களுள் நானும் ஒருத்தி.

நாங்கள் செய்த ஒரு பயணத்தின் போது ஏற்பட்ட பக் பக் அனுபவம் பற்றிய ஒரு சின்ன பகிர்வு இதோ!

1993 - நான் நிறைமாத கர்ப்பிணி. அப்பொழுது ஒரு பயணம் செய்ய வேண்டிய நிலை.
திருநெல்வேலியில் இருந்து பாரசாலாவிற்கு பத்திரப் பதிவிற்கு சென்று வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அப்பொழுது பாரசாலாவில் பத்திரப் பதிவு செய்தால் செலவு குறைவு என்பதால் அந்த ஏற்பாடு.பாரசாலா எங்கேயிருக்குன்னு சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
கேரளா, திருவனந்தபுரம் மாவட்டம்,பாரசாலா தாலுகா- டவுண்.


என் தகப்பானார் அவர்கள் மறைந்து ஒன்பது வருடங்கள் கழித்து எங்கள் வீட்டில் பாகப் பிரிவினை நடந்தது.அதுவரை அனைவரும் கூட்டுக் குடும்பம் தான்.
அனைவரும் பலவருடங்கள் காத்திருப்பிற்கு பின்பு (என் திருமணத் தாமதத்தினால் ) இந்த ஏற்பாடை செய்திருந்தனர்.
நாங்கள் ஒரு தாய் மக்களான ஒன்பது பேரும் சேர்ந்து போய் வர வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் வெளிநாட்டில் இருந்த அண்ணன் ஒருவரும் வந்து விடட்டும் என்று காத்திருந்து வர முடியாமல் இறுதியில்
அண்ணன் சார்பாக அண்ணியும் உடன் பயணிக்க ஒன்பது நபர்கள், மற்றும் சாட்சிக்கு என்று இருவர் என்று 11 நபர்கள் பயணம் செய்ய ஏற்பாடானது. ஒரே வேனில் கிளம்பி சென்றோம்.

சிலர், சூளிக்காரியை கூட்டிகிட்டு இப்ப என்ன பாகப்பிரிவினை என்று தடை விதிக்க,எனக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தாலும் என்னால் இன்னமும் தாமதப் பட வேண்டாம் என்று தைரியமாக வர ஒப்புக் கொண்டு விட்டேன்.ஏனெனில் என் திருமணத்திற்கு பின்பு தான் அனைவரும் சொத்து பங்கீடு செய்ய வேண்டும் என்று குடும்பமே காத்திருக்கஅது தள்ளிக் கொண்டே போவதில் சங்கடம்...

ரொம்ப சந்தோஷமாக சிரித்து கும்மாளமாக வேன் கிளம்பியது.எல்லோரும் ஒரு பிக்னிக் போகிற சந்தோஷத்தில் இருந்தோம்.அதுவும் ஒரு பெரிய குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து பயணம் செய்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை அனுபவித்து பார்த்தால் தான் அந்த சந்தோஷம் தெரியும்.என் முதல் அண்ணனிற்கும் எனக்கும் 23 வயது வித்தியாசம், என்னுடைய கல்லூரி
பட்டமளிப்பு விழாவிற்கு அண்ணன் வந்த பொழுது கூட நண்பிகள், அனைவரும் உங்க அப்பாவா? ஆசியா என்ற கேட்ட அனுபவமும் உண்டு..

நான் எப்பவுமே செல்லம், அதுவும் கர்ப்பிணி பெண்ணாக வேறு இருந்ததால் அனைவரின் கவனமும் என் பக்கமே இருந்தது.
அடடா,பயண அனுபவத்தை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டேனே!


வேன் நாகர்கோவிலை தாண்டியது,பசுமையான அழகான கிராமங்களின் அழகு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது, சில்லென்ற காற்று,
எல்லோரின் மனதிற்கும் இதமாக இருந்தது.
தீடீரென்று டிரைவர் வேன் ஜன்னல் கதவுகளை மூடுங்கள்,என்று பரபரத்தார்.விரைவாக இந்த ஊரைக் கடக்க வேண்டும்.
ஏதோ மதக் கலவரம் போல் தெரிகிறது, கதவடைப்பு, கல்லெறிதல் என்று பெரிய போராட்டமாக தெரிகிறது என்றாரே பார்க்கலாம்.
நான் சும்மாவே பயப்படுவேன்,அவ்வளவு தான் பக்கென்று ஆகிவிட்டது..

முதலிலேயே தெரிந்திருந்தால்,இந்த ஊர் வழியாக வராமல் சுற்றிக் கொண்டு போயிருக்கலாம். ரோட்டில் ஒரு ஈ,காக்கா கூட இல்லை.
அவ்வளவு அமைதியாக இருந்தது.எப்படி ஊரைக் கடக்கப் போகிறோம் என்றிருந்தது.டிரைவரோ வண்டியை வேகமாக செலுத்துவதிலேயே கவனமாக இருந்தார்.எல்லோரும், சூளிக்காரி இருக்காப்பா!
மெதுவாக போப்பா என்று சொல்லிய வண்ணமிருந்தனர்.
தீடீரென்று டம்மென்று ஒரு சத்தம், சிலீரென்று வேனின் முன் பக்க கண்ணாடி கீறல் விழுந்தது.


என் நெஞ்சு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.. எல்லோருக்குள்ளும் ஒரே பதட்டம்,
தீடீரென்று ஒரு கூட்டம் வந்து வேனை மறித்தது. எங்களை பார்த்தால் முஸ்லிம்கள் என்று தெள்ளத் தெளிவாய் வேறு தெரிந்தது.
அவ்வளவு தான் அனைவரும் வேனை விட்டு இறங்குங்கள்,என்று கூட்டமாக வந்தவர்கள் கர்ஜிக்க, என் அண்ணன்மாரில் ஒருவர் ஆசியாம்மா நீ முதலில் இறங்கும்மா! என்றாரே பார்க்கலாம்.என் உயிர் என் கையில் இல்லை.அடுத்து அந்த அண்ணன் இறங்க, அதன் பின்பு அங்கு நடந்த வேடிக்கை..
நிறைமாத கர்ப்பிணியான என்னைப் பார்த்தார்களோ இல்லையோ, வெறி பிடித்தது போல் இருந்த கூட்டம் அமைதியானது.
பேர்காலத்திற்கு அழைச்சிகிட்டு போறோம் ஐயா, தயவு செய்து வழி விடுங்க என்று என் அண்ணன் கெஞ்சவும்,
கலவரம்னு தெரியாதா! ஏன் இந்த வழியாக வந்தீங்க என்று கூச்சல் போட்டவர்கள், சரி சரி கிளம்பி போங்க..
திரும்பி வரும் பொழுது இந்த வழி வேண்டாம் என்று உத்தரவே போட்டர்கள்..மதங்கள் வேறுபட்டாலும் மனங்கள் ஒன்றுதானே!
தப்பித்தோம் பிழைத்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி கிளம்பி சென்றோம்.அந்த ஊர் கழிந்து பாரசாலா போய் சேரும் வரை வியர்வையே வராத எனக்கு கூட வியர்த்து வியர்த்து கொட்டியது
கதவு ஜன்னல்களையும் திறக்காமல் அப்பப்பா! போதும்டா என்று ஆகிவிட்டது.

ஒரு வழியாக பசுமையான பாரசாலா வந்தடைந்தோம்.
எல்லோரும் பழபஜ்ஜியும் டீயும் சாப்பிட்டு விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டோம்.

பத்திரப் பதிவு சம்பிரதாயங்கள் முடிய மதியம் மூன்று மணியாகிவிட்டது..
அதன் பின் அருமையான மீன் சாப்பாடு ஒரு ரிசார்ட்டில் சாப்பிட்டு விட்டு பழைய குதூகலம் களைகட்ட அனைவரும் சந்தோஷமாக திரும்ப வேறு வழியாக ஊர் வந்து சேர்ந்தோம்...
பல  பயண அனுபவங்களுள் இந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று என்பதால் இதனைப் பகிர்ந்தேன்.

பேர்காலத்திற்கு மருத்துவர் குறித்த தேதியை விடவும்  10 நாட்கள் தள்ளி தான் என் அன்பு மகன் பிறந்தான் எனபது வேறு விஷயம்..
இன்னமும் அதே ஒற்றுமையும் சந்தோஷமும் எங்கள் குடும்பத்தில் இன்னமும் தொடர்வது எங்கள் பெற்றோர்களின் ஆசியாலும், எல்லாம் வல்ல இறைவனின் செயலாலுமே !

விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இத் தொடரை தொடரலாம்.நானும் ஒரு சிலரை அழைத்துள்ளேன்..பயணங்கள் தொடரட்டும்...

இன்னுமொரு பயண அனுபவம் பார்க்க இங்கு கிளிக்கவும்.

ஸாதிகா
இமா
அமைதிச்சாரல்
சகோ.அப்துல் காதர்
சே.குமார்


பின் குறிப்பு:
என் பொருள் எனக்கு மட்டும் தான் தொடர்பதிவையும் எழுதாதவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது தொடரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

படங்கள் - நன்றி கூகிள்..


26 comments:

 1. //மதங்கள் வேறுபட்டாலும் மனங்கள் ஒன்றுதானே!//

  வெகு அழகான அனுபவக் கட்டுரை. பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி வை.கோ சார். தொடர் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

   Delete
 2. Aha ena oru bayangaramana nerama irundhrukum akka, good that those people had some concern..ilana ena airukum... Thank God...!!!

  ReplyDelete
  Replies
  1. அட,திவ்யாவா! வாங்க,வாங்க..கருத்திற்கு மிக்க நன்றி.

   Delete
 3. திக் திக்...

  முடிவில் சுபம்... பையன் தைரியசாலி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்.உங்களையும் மனோ அக்கா அழைச்சிருக்காங்க, எழுதுங்க..

   Delete
 4. திகிலான அனுபவம். மறக்கவே முடியாதது...

  வியர்வையே வராதா உங்களுக்கு! ஆச்சரியம் தான்...:)

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆதி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.இன்னும் பல அனுபவங்கள் இருந்தாலும் டக்கென்று அக்கா சொன்னவுடன் இது தான் நினைவு வந்தது..

   Delete
 5. Replies
  1. ஆமாம் ஸ்டார்ஜன், திகிலாகத்தான் இருந்தது..கருத்திற்கு நன்றி.

   Delete
 6. சலாம் ஆசியாக்கா.

  //என் அண்ணன்மாரில் ஒருவர் ஆசியாம்மா நீ முதலில் இறங்கும்மா! என்றாரே பார்க்கலாம்.என் உயிர் என் கையில் இல்லை.அடுத்து அந்த அண்ணன் இறங்க..//

  எப்படியோ இறங்கிட்டீங்க.. அதுவரை நீங்க தைரியசாலிதான் :-) நானாக இருந்தால் வேனை இறுக்கிப் பிடிச்சுட்டு இறங்காம அழுதே இருப்பேன் :)) நம் நாட்டில் எந்த போராட்டமாக இருந்தாலும் பொது மக்களை இப்படியெல்லாம் பாதிக்காத வண்ணம் செயல்படும் காலம் விரைவில் வரட்டும்!

  ReplyDelete
  Replies
  1. வஅலைக்கும் ஸலாம் அஸ்மா..விஷமமாகத் தெரியவில்லை என்பதாலும்...இறங்கச்சொன்னதால் இறங்கினோம்.எனக்கு சில சமயம் அசட்டு தைரியம் கூட வருவதுண்டு..கருத்திற்கு நன்றி.

   Delete
 7. திகிலான அனுபவமாக இருந்தாலும் திக்... திக்... அனுபவம் அக்கா...

  உங்கள் அழைப்பை ஏற்று விரைவில் எழுதுகிறேன் அக்கா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமார்.விரைவில் எழுதுங்கள்.வருகைக்கு மகிழ்ச்சி.

   Delete
 8. .வாசித்துக்கொண்டே வந்ததில் திக் திக்கென்று மனசு பதைத்து ..குளிருளும் எனக்கு வியர்த்து போனது ..!!!

  மறக்கமுடியாத பயண அனுபவம்தான் .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஏஞ்சலின்..

   Delete
 9. சமயோதிமா உங்க அண்ணன் செயல்பட்டது எவ்வளோ நல்லதா போச்சு ஆசியா.. உங்களுக்கு அந்த ஒரு நிமிடம் உயிர் போய் வந்த மாதிரி இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராதா,அன்று நான் வேனில் இருந்ததால் தான் அந்த வழியாக போக முடிந்தது.

   Delete
 10. உங்களின் பயண அனுபவம் படிக்க கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது ஆசியா! நல்ல வேளையாக இந்த கலாட்டாவில் பிரசவ வலி எதுவும் வராததே நீங்கள் செய்த பாக்கியம் தான்!

  பொக்கிஷம் தொடர் பதிவை ஷார்ஜா திரும்பிய பிறகு எழுதுகிறேன் ஆசியா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அக்கா.ஊரில் நேரம் விரைவாகப் போகும்.இங்கே வந்த பின்பு நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்.

   Delete
 11. பக்பக் பயணம்..படிக்கவே சும்மா திக்திக்-னு இருக்குது போங்க. வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்! நல்லா எழுதியிருக்கீங்க! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகி,கருத்திற்கு மகிழ்ச்சி.

   Delete
 12. உங்கள் பயண அனுபவம்பக் பக் என்று திகில் கதை படிப்பது போல் இருந்த்து.சுவாரஸ்யாமக அருமையான எழுத்து நடையில் எழுதி இருக்கீங்க.என்னையும் அழைத்து இருக்கின்றீர்கள்.விரைவில் எழுதுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.நீங்க பிஸின்னு தெரியும்,நேரம் கிடைக்கும் பொழுது முடிந்தால் எழுதுங்க..

   Delete
 13. //அதுவும் ஒரு பெரிய குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து பயணம் செய்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை அனுபவித்து பார்த்தால் தான் அந்த சந்தோஷம் தெரியும்.//

  ம்ம்ம்ம்ம் ஆமாம் அக்கா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்...

  ReplyDelete
 14. அப்பாடா படிக்கும் பொழுது என்ன நடந்திருக்கும் என்று என் மனம் பதட்டம் அப்பப்பா .... அப்புறம் முழுமையும் படித்தவுடன் மகிழ்ச்சி ஆனேன் அக்கா...

  ReplyDelete