Pages

Saturday, 20 April 2013

பெண்களே உஷார் - 2 - தங்கநகை விற்பனையில் மோசடி

தங்கம் விலை தற்சமயம் குறைந்து இருப்பதால் மக்கள் நகை வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே இப்போதைய நிலை.தங்க நகை விற்பனையில் பலவகையான மோசடி நடக்கிறது.அதனைக் குறித்த பகிர்வு தான் இது.

தங்க நகை விற்பனையில் முதாலாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்.

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

இரண்டாவது மோசடி சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.

ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

மூன்றாவது மோசடி தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது.
ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும்.

ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான்.
ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.
நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது.
துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.

அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.
ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள்.

மாறாக நாம்  நகையை விற்கச்சென்றால் அதில் 10- 20  சதவிகிதத்திற்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.இப்படி தங்க நகை வியாபாரத்தில் எந்த நேர்மையும் இல்லை.


தங்கம் விலை குறைந்து விட்டதே என்று காயின்,பிஸ்கட் ஆக வாங்கி சேமித்துக் கொண்டு நகை தேவைப்படும் பொழுது வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வாங்கப் போனால், இப்போதைக்கு காயின்,பிஸ்கட் விற்பனைக்கு இல்லை.நகைகள் தான் வாங்க முடியும் என்று ஏகப்பட்ட கூலி,சேதாரம் என்று போட்டு அவர்கள் அடிக்கும் கொள்ளையை அடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பெண்கள் கவனத்திற்கு:
தங்கநகை விற்பனை என்பது ஒரு சூதாட்டம் போலத்தான், நகை வாங்கும் பொழுது வீட்டிலேயே தீர்மானித்து விட்டு கடைக்கு சென்ற பின்பும் ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து விட்டு வாங்குங்கள். நகை விற்பனையாளர்கள் பலே கொள்ளைக் காரர்கள்.இவர்கள் நம்மிடம் முகமூடி போடாமல் கொள்ளை அடிப்பவர்கள்.சொல்வதை உள்வாங்கிக் கொண்டு அமைதியாக கணக்கு போட்டு பாருங்கள்,நமது திட்டப் படி அமைந்தால் வாங்குங்கள்,இல்லாவிடில் நகர்ந்து விடுங்கள்.பேச்சில் மயங்கி பணத்தை இழந்து விடாதீர்கள்.சில சமயம் திருமணத் தேவைகளுக்கு நிச்சயம் நகை வாங்க வேண்டிய சூழல் வரும்.அதற்கு திட்டமிட்டு நிதானமாக வாங்குவது நல்லது.கூட்ட நாட்களை தவிர்த்து விடுங்கள்.சேல்ஸ் மேன் கணக்கு போட்டு மொத்த தொகையை சொன்னாலும் நீங்களும் கணக்கை சரி பார்த்து பணத்தை செட்டில் செய்யுங்கள். இதில் கௌரவம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
வாங்கிய நகைகளை வீட்டில் வந்து சரி பாருங்கள்.கடையில் கணக்கு பார்த்தாலும் வீட்டிலும் வந்து ஒரு முறை கணக்கை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.நகை வாங்கிய  பில்லை பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள்.ஏதாவது பிரச்சனை என்றால் அதே கடைக்கு சென்று சரி செய்து கொள்ள வசதியாக இருக்கும்.

தற்சமயம் இத்தனை சதவிகிதம் கூலி என்று நிர்ணயித்து விட்டு அடிக்கும்கொள்ளைக்கு அளவில்லாமல் போய்விட்டது.

ஆண்டிக் டிசைன் என்றும்,கல்கத்தா மேக், ஹேண்ட் மேட்,மெஷின் கட்,டர்க்கி,மேக்,சிங்கப்பூர் மேக், ப்ராண்ட்டட் நகை என்று வகை வகையாக ஆசை காட்டி கொள்ளையடிக்கப் படுகிறோம். ஒரு சிலர் நகையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப் படுவார்கள்.உள்ளதும் போச்சு என்று ஆகிவிடும்.



ஏகப்பட்ட கூலி,சேதாரம் கொடுத்து வாங்கி அதனை அவசரத்திற்கு திரும்பி கொடுக்கப் போனால் நஷ்டம் தாண்.பணத்தை வைக்க இடமில்லாதவர்கள் வேண்டுமானால் மாற்றி மாற்றி வாங்கிக் கொள்ளலாம், தங்கத்தில் முதலீடு செய்யலாம்.கடன் உடன் பட்டு நகை வாங்க வேண்டுமா என்று யோசித்து பாருங்கள்.வியாபார நோக்கத்துடன் முதலீடு செய்வபவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள்.

நகை என்பது ஆபத்தை வரவழைக்கக் கூடியது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அதிகம் நகை அணிபவரையும் பாருங்கள்,சிம்பிளாக நகை அணிபவரையும் பாருங்கள் எது அழகு என்பது தெரியும்.போதும் என்ற மனமிருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

பேஸ்புக் பகிர்வில் நகை விற்பனை மோசடி குறித்த  விஷயங்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது, அதனையொட்டி எழுதிய பகிர்வு தான் இது.உங்களுக்கு எதுவும் தனிப்பட்ட மோசடி அனுபவம் ஏற்பட்டு இருந்தாலும் கருத்தில் தெரிவிக்கலாம்.





6 comments:

  1. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு... நன்றி சகோதரி... கவனம் எதிலும் எப்போதும் தேவை...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார், கருத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  2. //நகை என்பது ஆபத்தை வரவழைக்கக் கூடியது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    அதிகம் நகை அணிபவரையும் பாருங்கள்,சிம்பிளாக நகை அணிபவரையும் பாருங்கள்

    எது அழகு என்பது தெரியும்.//

    அழகான பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

    //போதும் என்ற மனமிருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.//

    அதே அதே ! நிம்மதியாக வாழவேண்டும். எதற்கும் அதிக ஆசைப்படலாகாது என்பதையும் சொல்லியுள்ளீகள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நன்றி வை கோ சார்,கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  4. மிகச்சரியான விழிப்புணர்வு பதிவு
    சிலர் வாங்கும் அவசரத்தில் இதெல்லாம் கவனிப்பதில்லை.
    எனக்கு சின்னதில் இருந்தே தங்கத்தில் அவ்வளவாக ஈடு பாடு கிடையாது , எப்போதும் சிம்பிளாக போடுவது எனக்கு பிடிக்கும்.

    ReplyDelete
  5. கருத்திற்கு நன்றி ஜலீலா, கொஞ்சம் கொஞ்சம் வாங்கினாலும் அவ்வளவாக போடப் பிடிக்காது.அத்தியாவசிய தேவைக்கு வாங்கும் பொழுது நிச்சயம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete