Pages

Thursday, 26 June 2014

மைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips


மைக்ரோவேவ் ஓவனில் உணவுகள் வேகமாக சமைக்கப் படுவதால் சத்துக்கள் பாதுகாக்கப் படுகின்றன.எண்ணெய் இல்லாமல் அல்லது குறைந்தளவு எண்ணெயில் சமைக்கலாம்.

உணவை குறித்த நேரத்திற்கு அதிகமாக சமைக்கக் கூடாது.
சமைக்கும் பொழுது அடிக்கடி கதவை திறக்கக் கூடாது. உள்ளே தண்ணீர் சிந்தக் கூடாது, கதவு உடைய வாய்ப்பு உள்ளது.

ஒரு பவுல் அல்லது கப் தண்ணீரை மைக்ரோவேவில் சூடு செய்து அதில் தக்காளியை போட்டு எடுத்தால் நிமிடத்தில் தோலை நீக்கி விடலாம்.
எலுமிச்சைப் பழத்தை மைக்ரோவேவில் 20 நொடிகள் சூடு செய்து அதிக ஜூஸைப் பெற முடியும்.

மைக்ரோவேவ் ஓவனின் கதவை திறந்து வைத்திருக்கக்கூடாது.

நமத்துப் போன சிப்ஸ்,கார்ன்ஃப்லேக்ஸ், பிஸ்கட் வகைகளை ஒரு காட்டன் கர்ச்சீப் போன்ற துண்டு விரித்து அதில் பரத்தி வைத்து மூடாமல் ஒரு நிமிடம் சூடு செய்யலாம்.

சூடேற்றுவதற்கு முன் அனைத்து வகை திரவ உணவுகளை நன்கு கலந்து விட வேண்டும்.

ப்லேட்டில் சாதம்,உப்புமா போன்றவைகளை மறுசூடு செய்யும் பொழுது நடுவில் குழித்து விட்டுக் கொண்டால் ஒரு சீராக சூடேறும்.பின்பு கலந்து விட வேண்டும். உலோக தட்டுக்களைப் பயன்படுத்தக் கூடாது.
சூடு செய்ய, சமைக்க கண்ணாடி,பீங்கான் (போரோசில்,சைனாவேர்) பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

சில உணவுகளை பாதி சமையலை மைக்ரோவேவிலும், மீதியை வழக்கமான  முறையிலும் சமைத்தால் சுவையாகவும், விரைவாகவும் செய்து விடலாம்.

மீன் துரிதமாக வெந்து விடும்.அதிக நேரம் வைக்கக் கூடாது.மீன் துண்டுகளை அங்கங்கே கீறி விடவும்,இல்லையெனில் விண்டுவிடும்.
காகித தட்டுக்கள் பிளாஸ்டிக் சாமான் அதிக சூட்டில் உருகி கருகிப் போகும். எனவே அவற்றை தவிர்க்கவும்.

சமைக்க குறுகிய வாயுள்ள பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது (பாட்டில் போன்றவை).சமைக்க குழிவற்ற பாத்திரங்கள் நல்லது.

டின் உணவுகளை மைக்ரோவேவில் டீஃப்ராஸ்ட் செய்யக் கூடாது.

ஆம்லெட்,புல்ஸையை மைக்ரோவேவில் பல நொடிகளில் சமைத்து விடலாம்,மஞ்சள் கருவை சிறிது களைத்து விட வேண்டும்,இல்லையெனில் வெடித்து சிதறி விடும்.

மைக்ரோவேவ் பாத்திரம் சூடேறாது, ஆனால் உள்ளிருக்கும் உணவின் சூடு பாத்திரத்திற்குப் பரவும்.

நறுக்கிய கீரை, காய்கறிகளை 2 நிமிடம் மைக்ரோ அவனில் வேக வைத்து எடுத்து பின்பு தாளிக்கலாம், நேரம் மிச்சப்படும்.

உணவை மூடி சமைத்தால் சமையல் துரிதமாகும்,உணவை மென்மையாக்கும். கண்ணாடி மூடியை எச்சரிக்கையாக கையாளவேண்டும். உணவு வகைக்கு தக்க ஸ்டாண்டிங் டைம் வைக்க நினைவில் கொள்ள வேண்டும்.

முப்பது நொடியில் ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் மொறு மொறு அப்பளம் தயாரிக்கலாம்.

எலும்புடன் கூடிய இறைச்சி துண்டுகள் வெப்பத்தை கடத்தும் என்பதால் பக்கவாட்டில் எளிதாக வெந்துவிடும்.எலும்பில்லாத துண்டுகள் வேக நேரமெடுக்கும், ஆனால் ஒரு சீராக வெந்து விடும்.

உணவு பொருட்கள் உள்ளே வைக்காமல் சும்மா ஓவனை ஓட விடக்கூடாது.

சில்லிட்ட உணவுகள் சூடுபடுத்த அல்லது சமைக்க அதிக நேரம் எடுக்கும், குளிர் காலத்தில் உணவு வேகும் நேரம் கூடுதலாகும்.
உணவின் வகை, அளவு, அறையின் வெப்பநிலை பொறுத்து நேரம் வேறுபடும்.

மைக்ரோவேவில் அதிக நேரம் பொரிக்கிற  (டீப் ஃப்ரை)வேலை செய்யக் கூடாது.எண்ணெயின் வெப்பநிலை அதிகமாகும் பொழுது  மைக்ரோவேவினால் கட்டுப்படுத்த முடியாது.


இரண்டுக்கும் மேற்பட்ட கப்புக்கள் சூடு செய்யும் பொழுது அவற்றை  வட்டமாக வைக்க வேண்டும்.

பின் குறிப்பு:
ஓவன் டிப்ஸ்கள்  நினைவு வரும் பொழுது பின்பு சேர்க்கப்படும். கருத்தில் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் தெரிவித்தால் இடுகையில் சேர்க்கப்படும்.

Sunday, 2 February 2014

டயட் டயட் டயட் - அனுபவம் & டிப்ஸ் .

டயட் இருந்து  உடல் எடையக் குறைக்க வேண்டும்  என்று நினைப்பவர்களுக்காக இந்த பகிர்வு.
நான் டயட்டீசினியனை சந்தித்ததின் அனுபவம்..
உடல் அதிக எடை என்று தெரிய வரும் பொழுது எல்லாருக்கும் ஏற்படுகிற பயம் எனக்கும் ஏற்பட்டு டயட்டீசியன் கிட்ட போனேன், அவங்க ரெடியாக இருந்த  சார்ட்டை வாசித்தாங்க(இதெல்லாம் தான் நமக்கு தெரியுமே)

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்;
1. எல்லாவகையான இனிப்பு பதார்த்தங்கள், முக்கியமாக பேக்கரி ஐட்டம்.
2.பொரித்த உணவுகள்.
3.பெப்சி,கோக் போன்ற சாஃப்ட் டிரிங்ஸ்.
4. கஸ்டர்ட் & புட்டிங்
5. பதப்படுத்தப் பட்ட உணவுகள்.
6.பால்  ( கொழுப்பு நீக்காத)மற்றும் சீஸ்,வெண்ணெய், நெய்.
7.இறைச்சி வகைகள்.
8. ஆல்கஹால் ட்ரிங்க்ஸ்.
9.உப்பு அதிகம் கூடவே கூடாது,சிப்ஸ், சால்டட் நட்ஸ், ஊறுகாய்,அப்பளம்,சிப்ஸ் மற்றும் கருவாடு.
10. சாக்லேட்ஸ்.

சேர்க்க வேண்டிய உணவுகள்:
1. பச்சைக்காய்கறிகள் - வெள்ளரி, வெங்காயம், தக்காளி,முட்டைக் கோஸ்,லெட்டூஸ் போன்றவை.

2. வெஜிடபிள் சூப், வெஜிடபிள் ஜூஸ்.

3. உணவில் சேர்க்க ஏதுவான காய்கறிகள், முட்டைக் கோஸ்,காளிஃப்ளவர், பீன்ஸ்,கீரை வகைகள்,பூசணி, முள்ளங்கி, வாழைத் தண்டு,வாழைப்பூ, கோவைக்காய்,கேரட்,நெல்லிக்காய் போன்றவை.

4. சமைக்க ஆலிவ் ஆயில், கனோலா ஆயில்,சன்ஃப்ளவர் ஆயில் உபயோகிக்கலாம்.

5. முக்கியமாக அவித்த முட்டை எடுக்கவும்( வாரம் 2-3 முறை) மஞ்சள் பிடிக்காதவர்கள் முட்டை வெள்ளையை மட்டுமாவது சேர்த்துக் கொள்வது நல்லது.

6. கோழி சதைப்பகுதி  கொழுப்பு,தோல் நீக்கியது.

7. மீன் சேர்த்துக் கொள்ளலாம், பொரித்த மீன் கூடவே கூடாது.

8. கொழுப்பு நீக்கிய இறைச்சி வேண்டுமானால் மாதம் ஒரிரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

9. முளைகட்டிய பயறு வகைகள், அவித்த பயறுகள்.

10. பாதாம், வால்நட் போன்றவைகள்.

முதலில் அவங்க செய்த டெஸ்ட் :
உடலை அமுக்கி பிழிந்து எடுத்துட்டாங்க (மெஷினாலத்தான்)
Body Composition test :
Weight
Muscle Mass
Body Fat Mass
Total Body Water
Protein

இதெல்லாம் டெஸ்ட் செய்து ரிசல்ட் தந்தாங்க.

அடுத்து Obesity Diagnosis:
BMI - Body Mass Index
PBF - Percent Body Fat
WHR - Waist Hip Ratio
BMR  - Basal Metabolic Rate

அடுத்து Muscle Fat Control


எல்லாம் பார்த்து விட்டு Excercise Planner என்று ஒரு அட்டவணை தந்தாங்க.
1. நடை பயிற்சி,சைக்கிள் ஓட்டனும் அல்லது ஜாகிங் அல்லது நீச்சல் அல்லது மலைஏறுதல் அல்லது ஏரோபிக் - 
2.டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஃபுட் பால், பேட்மிண்டன்,ஸ்கிப்பிங், பாஸ்கட் பால்,கோல்ஃப் போன்ற விளையாட்டு.
3.புஸ் அப்ஸ், சிட் அப்ஸ், டம்பெல் பயிற்சி,எலாஸ்டிக் பேண்டு போன்ற பயிற்சி .
இதெல்லாம் எனக்கு பரிந்துரைத்த பயிற்சி. அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தினமும் செய்ய வேண்டுமாம்.

இப்பவே மூச்சு வாங்குது. எது முடியுமோ அதை மட்டும் செய்தால் போதும்.

எல்லாம் டெஸ்ட் செய்து விட்டு நாள் ஒன்றுக்கு 1200 கலோரி மட்டும் தான் உங்க உயரத்திற்கு எடுக்கனும், (இது தான் நமக்கு முன்பே தெரியுமே!)

இதை எல்லாம் பின்பற்றினால் நான்கு வாரத்தில் எவ்வளவு எடை குறையுமாம் தெரியுமா?

அதுக்கு ஒரு கணக்கு:

Calculation for expected total weight loss for 4 weeks: 
Total energy expenditure (Kcal/ week) into 4 weeks  divide by 7700 . 

என்னமோ நீங்களே கணக்கு பார்த்து கொள்ளவும்.

கடைசியாக எனி டவுட்ஸ் என்று வழக்கமாக மருத்துவர் கேட்கும் கேள்வியை கேட்டாங்க,
நானும் பவ்யமாய் எனக்கு ஒரு உணவு சார்ட் போட்டு தந்திடுங்கன்னு சொன்னேன்.


டயட்டீசியன் எனக்கு தந்த உணவு பட்டியல்:
காலை ஏழு மணிக்கு - 
ப்ரவுன் ப்ரெட் - வெஜ் சாலட் - பாயில்ட் எக்.டீ கொழுப்பு நீக்கிய பாலில்,நோ சுகர் ( எனக்கு சுகர் கிடையாதுன்னு சொன்னேன் அப்பாவியாய் - அதுக்கு டாக்டர் அம்மா சிரித்த சிரிப்பு)

காலை 10 மணிக்கு-
ஏதாவது பழம் உதாரணமாக ஆப்பிள் அல்லது வெஜ் சாலட் ஒரு கப்.

மதியம் 12.30 மணிக்கு:
ரைஸ் - 1 கப் அல்லது ட்ரை சப்பாத்தி - 3 ( ஒரு சப்பாத்தி60 கிராம்)

3.30 மணிக்கு
மில்க் டீ
சுகர் ஃப்ரீ பிஸ்கட் ( திரும்பவும் சொன்னேன் எனக்கு சுகர் இல்லைன்னு - இப்ப டாக்டர் அம்மா ஸ்மைல் மட்டும்)

இரவு 7.30 மணிக்கு:
ட்ரை சப்பாத்தி -2
அல்லது ஓட்ஸ் கஞ்சி - ஒரு பவுல், கிரில் அல்லது அவித்த சிக்கன்  அல்லது வெஜ் சாலட்.

இரவு 9 மணிக்கு :
ஏதாவது ஒரு பழம்.

இது தான் எனக்கு போட்டு தந்த உணவு சார்ட் 1200 கலோரி அளவுக்கு.

உங்க உயரம் எடைக்கு எவ்வளவு கலோரி எடுக்கனும் என்று கணக்கு போட்டு பார்த்து சாப்பிடுங்க.

சரி என்று உடனே எழுந்து வர முடியுமா? 
டாக்டர் வேறு ஏதாவது டிப்ஸ் என்றேன்.
தினமும் ஒன்னரை லிட்டர் தண்ணீராவது குடிக்கனும்.
நேரத்திற்கு உணவு எடுக்கவும்.
காலை உணவு நிச்சயம் எடுக்க வேண்டும்.
முழு தானிய உணவு சாப்பிடலாம்.
சமைக்கும் முறையை மாற்றனுமாம்,எண்ணெய் சேர்க்காமல் அவித்து சாப்பிட வேண்டும்.
உப்பு,சர்க்கரையை குறைத்தல் நல்லது.

இவ்வளவு தாங்க என்னுடய டயட் டிப்ஸ். முடிந்தால் நீங்க முயற்சி செய்யவும்.
பாவம் நான் சமையல் ப்ளாக் வைத்திருக்கிறேன் என்று அந்த டாக்டருக்கு தெரிந்தால் என்னாகும்? 
ஒன்றும் ஆகாது ரெசிப்பி லின்க் கேட்பாங்க..
இவ்வளவு நேரம் பேசிட்டு இதை இதைச் சொல்லாமல் வருவேனா?
என் ப்ளாக் பற்றி சொன்னேன்.ரெசிப்பி லின்க் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.. என்னதான் டயட்டீசீயனாக இருந்தாலும் அவங்க வீட்டில் உள்ளவங்களுக்கு ருசியாக சமைத்து கொடுக்க வேண்டாமா?